மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ மெகா திட்டம்.. இன்ஸ்பேஸ் தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்.!
சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உள்ளிட்ட திட்டங்களை இஸ்ரோ (ISRO) மிகவும் சிறப்பாக செய்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் இஸ்ரோவுக்கு புகழ் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரோ அமைப்பு பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு திட்டத்தைக் கொண்டுவர உள்ளது.
அதாவது 7 செய்கைக் கோள்களை ஏவி, பொதுமக்களின் மொபைல் போனுக்கு நேவிகேஷன் எனும் வழிகாட்டுதல் சேவையை வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும் இது குறித்து விண்வெளித்துறையின் இன்ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா கூறியது என்னவென்றால், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பற்றிய தகவல் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், இந்தியா தனது சொந்த நேவிகேஷன் அமைப்பை உருவாக்க இஸ்ரோ அமைப்பு பணியாற்றி வருகிறது.

இதற்கு வேண்டி புதிய எல்1பேண்டுடன் 7 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். குறிப்பாக இதில் ஒரு செயற்கைக்கோள் ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்டுள்ளது. மற்ற ஆறு செயற்கைக்கோள்கள் இனிமேல் ஏவப்படும். விண்ணில் ஏற்கனவே ஏவப்பட்டுள்ள நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் எல்5 மற்றும் எஸ் பேண்டில் செயல்பட்டன.
அதுவும் நமது சொந்த நேவிக் அமைப்பு ஆனது மற்ற நேவிகேஷன் அமைப்புகளை விட மிகவும் துல்லியமாக இருக்கும். இதன் பயன் அனைத்து இந்திய மக்களுக்கும் சென்றடைவதை நோக்கி தற்போது அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்ஸ்பேஸ் மையம், விண்வெளி கொள்கை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை ஆகியவை விண்வெளித்துறைக்கு ஊக்குவிப்பை அளித்துள்ளது.
அதேபோல் எங்களின் அடுத்த நோக்கம் விண்வெளி சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான். தற்போது இதற்கான வரைவு சட்டத்தைத் தயாரித்துள்ளோம். ஆலோசனைக்கு பின்பு இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும். மேலும் உலகளவில் சிறு செயற்கைக்கோள் சந்தை 5.2 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. இதில் பெரும் பங்கை கைப்பற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக இஸ்ரோவின் சிறிய ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் விண்வெளி தளத்தில் இருந்து இந்த சிறிய ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஏவப்படும். அதேசமயம் விண்வெளித்துறையில் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் திறமைசாலிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே விண்வெளித்துறையில் முழுநேரப் பட்டப்படிப்பை கொண்டுவரப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இன்ஸ்பேஸ் மையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பவன் கோயங்கா கூறினார்.

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2026 ஆம் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள 4 வீரர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு பேரும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லவுள்ளனர்.
குறிப்பாக இவர்கள் நான்கு பேருக்கும் ரஷ்யாவில் 6 ஆண்டுகளாக பல்வேறு கட்ட பயிற்சிகள் தீவிரமாக அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் விண்வெளிக்கு செல்ல உள்ள இந்த நான்கு வீரர்களில் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். 2025 ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2026 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credit: geographicbook


Click it and Unblock the Notifications