ஜூலை 14 வெறும் ட்ரைலர் தான்.. இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க.. சந்திரயான்-3 நிலவில் தரை இறங்கும் தேதி!
இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திர கிரக திட்டமான சந்திரயான் 3 (Chandrayaan 3) ஆனது சரியாக எந்த தேதியில், எத்தனை மணிக்கு, எந்த இடத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என்கிற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சந்திரயான் 3 ஆனது வருகிற ஜூலை 14 ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre) இருந்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், ஜூலை 14 ஆம் தேதி நாம் "பார்க்கப்போவது" வெறும் டிரைலர் மட்டும் தான்!

"மெயின் பிக்சர்" எப்போது தெரியுமா? சந்திரயான் 3 விண்கலம் ஆனது வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கும் அல்லவா? அப்போது தான்! ஜூலை 14 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-3 ஆனது சந்திர கிரகித்தல் சரியாக எப்போது தரையிறங்கும் என்கிற 2 தேதிகளையும் கூட இஸ்ரோ கணித்துள்ளது.
இஸ்ரோவின் தலைவர் ஆன சோம்நாத்தின் கூற்றுப்படி "ஜூலை 14 அன்று ஏவுதல் நடந்தால், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சந்திரனில் அதை இறக்குவதற்கு நாங்கள் தயாராகிவிடுவோம். சந்திரனில் சூரிய உதயம் இருக்கும்போது தான் அது தரையிறக்கப்பட வேண்டும். எனவே ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று தரையிறங்கும்".
ஒருவேளை ஆகஸ்ட் 23 அல்லது 24 இல் திட்டமிட்டபடி சந்திரயான் 3 நிலவில் தரையிறக்கப்படவில்லை என்றால், அடுத்த தரை இறக்கத்திற்காக நாங்கள் இன்னும் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். ஆகஸ்ட் 23 அல்லது 24-ஐ தவறவிட்டால் செப்டம்பர் மாதத்தில் தான் சந்திரயான்-3 நிலவில் தரையிறக்கப்படும் என்றும் சோம்நாத் விளக்கமளித்துள்ளார்.
மேலும் "லேண்டரும், ரோவரும் (நிலவில்) சூரிய ஒளி இருக்கும் வரை 14 நாட்கள் அங்கே இருக்கும். சூரிய ஒளி இல்லாத போது, ரோவரில் இருக்கும் ஒரு சிறிய சோலார் பேனல் (Solar panel) ஆனது அடுத்த 14 நாட்களுக்கு சந்திரனில் சூரிய ஒளி வரும் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய போதுமான சக்தியை உருவாக்கும்."
"சந்திர கிரகத்தில் உள்ள வெப்பநிலையானது மைனஸ் 40 டிகிரிக்கு கீழே செல்கிறது, அத்தகைய சூழலில் பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆனது தப்பிப்பிழைக்கும், சரியாக வேலை செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் நாங்கள் சில சோதனைகள் செய்தோம், இது போன்ற கடுமையான சூழ்நிலைகளிலும் அவைகள் "உயிர்வாழும்" என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் சோம்நாத் கூறியுள்ளார்.
சந்திரயான்-3 மூன் மிஷன் ஆனது 2148 கிலோ எடையுள்ள ஆர்பிட்டர் (Orbiter), விக்ரம் என்கிற லேண்டர் (Vikram Lander) மற்றும் பிரக்யான் எனப்படும் ரோவர் (Pragyan Rover) ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் பிரதான நோக்கம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்குவதும், அதை தொடர்ந்து விஞ்ஞான பரிசோதனைகளுக்காக ரோவரை பயன்படுத்துவதுமே ஆகும்!


Click it and Unblock the Notifications








