சைக்கிளில் டெலிவரி செய்யும் சொமாட்டோ ஊழியருக்கு கிடைத்தது நம்பமுடியாத பரிசு: காரணம் இதுதான்.!
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது, அதாவது மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது.

மேலும் இந்த கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் நேரில் சென்று பொருட்கள் வாங்க தயங்கி வருகின்றனர். எனவே தான் ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் இந்த கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஸ்விக்கி, சொமாட்டோ தேவை அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு குறிப்பிட்ட சலுகைகளோடு உணவுகளை டெலிவரி செய்து வருகின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் சொமாட்டோ ஆப்பில் உணவு ஆர்டர் செய்துள்ளார். குறிப்பாக அவர் ஆர்டர் செய்த உணவை 9 கி.மீ தூரத்தை சைக்கிளில் கடந்து வந்து வெறும் 20 நிமிடத்தில் டெலிவரி செய்துள்ளார் சொமாட்டோ ஊழியர்.

வெளிவந்த தகவலின்படி, ஹைதராபாத்தை சேர்ந்த ராபின் முகேஷ் என்பவர் கடந்த திங்கள்கிழமை இரவு சொமாட்டோ ஆப்பில் உணவு ஆர்டர் செய்துள்ளார். பின்பு அவர் ஆர்டர் செய்த வெறும் 20 நிமிடங்களில் அவரின் உணவு வீட்டுக்கு வந்தது சேர்ந்தது.

மேலும் அந்த உணவை வாங்க வெளியே வந்த ராபினுக்கு ஒரே ஆச்சரியம், ஏனென்றால் உணவு கொண்டு வந்த அந்த ஊழியர்சைக்களில் வந்துள்ளார். குறிப்பாக ராபின் வீட்டிற்கும் உணவு ஆர்டர் செய்த இடத்திற்கும் இடையே 9 கி.மீ தூரம் இருந்தநிலையிலும், அந்த சொமாட்டோ டெலிவரி பாய் ஆர்டர் செய்த உணவை சைக்கிளில் வெறும் 20 நிமிடங்களில் கொண்டுவந்துசேர்த்துள்ளார்.

இதைதொடர்ந்து டெலிவரி செய்ய வந்த இளைஞரிடம் ராபின் விசாரித்தபோது, அவரின் பெயர் முகமது அகில் எனவும், அவர் ஒரு வருடமாக சொமாட்டோவில் வேலை செய்து கொண்டே கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறியுள்ளார். பின்பு ராபின் அவரை போட்டோ எடுத்து, தான் ஆர்டர் செய்த உணவை மின்னல் வேகத்தில் கொண்டுவந்து டெலிவரி செய்தார் என இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக எனது ஆர்டர் கன்ஃபார்ம் செய்யும் போது முகமது மெஹதிபுட்னத்தில் இருந்தார். நிலோஃபர் லக்திகாபுல் பகுதியில் என்னுடைய ஆர்டர் கன்ஃபார்ம் ஆகி, அதனை கிங் கோட்டி பகுதியில் டெலிவரி செய்தார். முகமது தற்சமயம் பொறியியல் படித்து வருகிறார். எல்லாமே இந்த சைக்களில் தான் சாத்தியமாகிறது. நீங்கள் இவரை பார்க்க நேரிடும் போது தாராளமாக உதவு செய்யுங்கள் என்று அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதன்பின்பு முகமது அகிலுக்காக சமூகவலைத்தளம் மூலம் பண்ட் ரைஸ் செய்து, 10 மணி நேரத்தில் சுமார் 60,000 வரை நிதி கிடைத்துள்ளது. அதற்குபிறகும் கிட்டத்தட்ட 73,000 வரை நிதியுதவி செய்திருந்தனர்.

சமூகவலைத்தளம் மூலம் கிடைத்த நிதியில் ராபின் அகிலுக்காக ரூ.65,000 மதிப்புள்ள டிவிஎஸ் XL பைக் புக்கிங் செய்துள்ளார். பின்பு இரண்டே நாட்களில் அந்த பைக்கை அவரிடம் டெலிவரி செய்துவிட்டார்கள். மேலும் மீதுமுள்ள பணத்தை அவரது கல்லூரி கட்டணத்துக்காக அவரிடமே கொடுத்து விடுவேன் என்று ராபின் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications