டோனி ஸ்டார்க் ரேஞ்சுக்கு AI Assistant கண்டுபிடிப்பு.. இனி ஸ்மார்ட்போன் கதி என்னவாகும்?
அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் டோனி ஸ்டார்க் (Tony Stark) கேரக்டர் மூலம் உருவாக்கப்படும் ஜார்விஸ் (JARVIS) என்னும் ஏஐ அசிஸ்டண்ட் (AI Assistant ) பற்றி மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதுபோல, ஒரு ஏஐ அசிஸ்டண்ட் நம்மிடம் இருந்தால், எப்படி இருக்கும் என்று கூட மார்வெல் ரசிகர்கள் சிந்தித்துப் பார்த்திருக்கலாம்.
அப்படியான, ஒரு ஏஐ அசிஸ்டண்ட்டை முன்னாள் ஆப்பிள் ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹாலிவுட் ( Hollywood ) படங்களில் வருவது போல நிஜ வாழ்க்கையில் நடந்தால் நன்றாக இருக்குமே என்று நம்மில் பலர் நினைத்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், அதில் காட்சிப்படுத்தப்படும் டெக்னாலஜிகள் வியக்கத்தக்க வகையில் இருக்கும்.

அப்படியே, மனதில் நிற்கும். அந்த வகையில், மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் ( Marvel Cinematic Universe ) படங்களில் டோனி ஸ்டார்க் என்னும் கேரக்டர் மூலம் உருவாக்கப்படும் டெக்னாலஜிகள் நமக்கு கிடைக்காத என்று கூட ஆசை வரும். குறிப்பாக, டோனியால் உருவாக்கப்படும் ஜார்விஸ் (JARVIS) என்னும் ஏஐ அசிஸ்டண்ட், ஒரு கேரக்டராகவே அதில் வந்திருக்கும்.
இப்படியான ஒரு ஏஐ அசிஸ்டண்ட்டை நிஜ வாழ்க்கையிலும் பார்க்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படிப்பட்ட ஏஐ அசிஸ்டண்ட்டை முன்னாள் ஆப்பிள் ஊழியர்களான இம்ரான் சவுத்ரி (Imran Chaudhri) மற்றும் பெத்தானி பொங்கியோர்னோ (Bethany Bongiorno) இருவரும் கண்டுபிடித்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்த இவர்கள் இருவரும், 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறி ஹ்யூமனே (Humane) என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் மூலம் ஏஐ அசிஸ்டண்ட் கண்டுபிடிப்புகளில் முழு கவனம் செலுத்தி வந்தனர். ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக ஒரு ஏஐ அசிஸ்டண்ட் டிவைஸை கொண்டுவர வேண்டும் என்பதே இவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது.
அந்த வகையில், புரொஜெக்டர் வடிவிலான அணியக்கூடிய ஏஐ அசிஸ்டண்ட் (Projector-based wearable AI assistant ) உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த ஏஐ அசிஸ்டண்ட்டின் டெமோ வீடியோவை இம்ரான் சவுத்ரி பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஏஐ அசிஸ்டண்ட்டை புரொஜெக்டரை தனது ஜாக்கெட்டில் பொருத்தி, காலிங் வசதியை வெற்றிகரமாக செய்து காட்டினார்.
இந்த ஏஐ அசிஸ்டண்ட் கால் (Call) வருவதற்கு முன்னதாகவே, அவரிடம் வாய்ஸ் மூலம் தெரிவிக்கிறது. இதையடுத்து அதை அவரது உள்ளங்கையில் வீடியோவாக ப்ரொஜெக்ஷன் செய்தும் காண்பிக்கிறது. இதுபோல ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் எல்லா வசதிகளையும், வாய்ஸ் மூலம் கமெண்ட் செய்தாலே அதை இந்த ஏஐ அசிஸ்டண்ட் வீடியோவாக ப்ரொஜெக்ஷன் செய்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த புரொஜெக்டர் வடிவியிலான ஏஐ அசிஸ்டண்ட்டை சட்டையில் எளிதாக மாட்டிக்கொள்ள கூடியது.
இது அலெக்சா (Alexa) கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) போல கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும். ஆனால், இந்த இரண்டிலும் இல்லாத வகையில், புரொஜெக்டர் மூலம் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்துக்கொள்ள முடியும் என்பது முக்கிய அம்சம். எளிதாக சொல்ல வேண்டும் என்றால், மினி புரொஜெக்டரை போல செயல்பட கூடியது எனலாம். ஆனால், இது ஒரு ஏஐ அசிஸ்டண்ட் என்பதை மறந்துவிடக்கூடாது.


Click it and Unblock the Notifications