கூகுள் பே, போன் பே இருக்கா.. இனி ஆதார் மட்டும் போதும்.. கட்டாயம் இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..
நாடு முழுவதும் கூகுள் பே (google pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக யுபிஐ (UPI) செயலிகள் உதவியுடன் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.
அதுவும் ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனையையும் பாதுகாப்பானதாக்க 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் (UPI PIN) நம்பரை உள்ளிட்ட வேண்டும். இந்த பின் நம்பர் சரியான பயனரால் பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது. பொதுவாக யுபிஐ பின் நம்பரை அமைக்க டெபிட் கார்டு தேவைப்படும். ஆனால் தற்போது இந்த யுபிஐ செயல்முறையை முடிக்க ஆதார் கார்டு போதும்.

அதாவது யுபிஐ பின் நம்பரை ஆதார் (Aadhaar) கார்டு உதவியுடன் உருவாக்க முடியும். இதற்கு முக்கியமாக உங்கள் வங்கி கணக்கு ஆதார் உடன் இணைக்க வேண்டும். இப்போது பின் நம்பரை அமைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் உங்களுக்குப் பிடித்த கூகுள், போன்பே, பேடிஎம், BHIM போன்ற யுபிஐ செயலியை திறக்கவும். அடுத்து அதில் இருக்கும் Add Bank Account என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
வழிமுறை-2: அதன்பின்பு உங்கள் வங்கிக் கணக்கை தேர்வு செய்யவும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் வங்கி கணக்கு தானாகவே இணைக்கப்படும். அடுத்து யுபிஐ பின் நம்பரை அமைக்கும் விருப்பம் வரும்போது, அதில் Aadhaar OTP என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
வழிமுறை-3: அடுத்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். பின்னர் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த ஒடிபி நம்பரை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும். அதன்பின்னர் 4 அல்லது 6 இலக்கங்கள் கொண்ட புதிய யுபிஐ பின் நம்பரை உருவாக்கும்படி கேட்கப்படுவீர்கள். அடுத்து பின் நம்பரை உள்ளிட்டு உறுதி செய்ய வேண்டும். அவ்வளவு தான் இப்போது உங்கள் UPI பின் நம்பர் டெபிட் கார்டு இல்லாமல் உருவாக்கப்பட்டுவிடும். அதன்பின்பு வழக்கம்போல பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் கூகுள் பே செயலியில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்ட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் நீங்கள் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் செய்யும் பணப்பரிவர்த்தனை அல்லது கடைக்காரருக்கு நீங்கள் செய்யும் வழக்கமான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுபோன்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுவும் கூகுள் பே ஆப் மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பில் பேமண்ட்களை செய்தால் அப்போது கட்டணம் வசூலிக்கப்படும். கூகுள் பே வெளியிட்ட தகவலின்படி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திச் செய்யப்படும் பில் பேமெண்ட்களுக்கு, அதன் இறுதி தொகையில் இருந்து 1 சதவீதம் மூதல் 5 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக நீங்கள் செலுத்த வேண்டிய சிலிண்டர் கட்டணம் ரூ.1000 ஆக இருந்தால், அதில் 1 சதவீதம் அதாவது ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








