Google Pay-வில் தவறுதலாக யாருக்காவது பணம் அனுப்பிட்டீங்களா.. திரும்ப மீட்பது எப்படி? இதோ வழிமுறைகள்..
இந்திய மக்களுக்கு யுபிஐ வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது கூகுள் பே (google pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.
அதேபோல் இந்த யுபிஐ செயலிகள் பயன்பாட்டுக்கு வந்ததும், மக்கள் வங்கிக்குச் செல்வதும், ஏடிஎம் மையங்களைத் தேடி சென்று பணம் எடுப்பது போன்ற விஷயங்கள் குறைந்து வருகிறது. அதாவது இருந்த இடத்திலேயே இந்த யுபிஐ செயலிகள் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். ஆனால் இந்த யுபிஐ செயலிகள் பயனுள்ள வகையில் இருந்தாலும் சில சமயங்களில் தவறுதலாக வேறு ஒருவருக்குச் செலுத்திய பணத்தைத் திரும்ப பெறமுடியுமா எப்படி பெறுவது, யாரைக் கேட்பது என்கிற குழப்பங்கள் மக்களுக்கு அதிகளவில் இருக்கின்றன.

அதாவது பணத்தை தவறுதலான UPI ID-க்கு அல்லது வேறு மொபைல் எண்ணுக்கு பணத்தை செலுத்திவிட்டாலும், உங்களுக்குத் தெரியாமல் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தாலும், ஒருவேளை நீங்கள் மோசடி செய்யப்பட்டிருந்தாலும் நீங்கள் தாராளமாக உங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்யலாம். அதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தவறான பணப் பரிமாற்றம் நடந்தால், 24-48 மணி நேரத்தில் உங்களது பணத்தைத் திரும்பப் பெறலாம். குறிப்பாக பணம் பெறுபவர் மற்றும் பணம் செலுத்துபவர் வங்கிகள் ஒரே வங்கியாக இருந்தால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்குக் குறைந்த நேரம்தான் எடுக்கும். அதேசமயம் இரண்டு வங்கிக் கணக்குகளும் இரண்டு வேறு வங்கிகளில் இருந்தால் பணத்தைப் பெற அதிக நேரம் எடுக்கும்.
முதலில் நீங்கள் பணத்தை தவறாகச் செலுத்திய அந்த நபரை அணுகி உங்களது நிலைமையை விவரியுங்கள். அவர் ஒப்புக்கொண்டால் உங்களுக்குப் பணத்தை அவரே திருப்ப அனுப்ப வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த நபர் பணத்தைத் திருப்பி கொடுக்க ஒப்புக்கொள்ளாத நிலை அல்லது அவரை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கவும். அவர்கள் உங்களுக்குப் பரிவர்த்தனையைத் திரும்பப் பெற வழிகாட்டுவார்கள்.
அதேபோல் நீங்கள் அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெற பல வங்கிகள் டிரான்ஸாக்ஷன் ரி-கால் போன்ற அம்சங்களை வழங்குகின்றன. உங்கள் வங்கியில் இந்த அம்சம் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

ஒருவேளை குறிப்பாக எங்குமே உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை, ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் அளிக்கலாம்.NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு What we do என்ற பக்கத்திற்குச் சென்று, பின்னர் UPI தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அந்த பக்கத்தில் இருக்கும் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவத்தனைக் குறித்த விவரங்களைப் பதிவிடவும்.
அதுவும் புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். இதைச் செய்தால் சில மணி நேரத்தில் பணம் திரும்ப வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








