ஆதாரில் உங்களது போட்டோ பிடிக்கலையா? அப்போ புதிய போட்டோவை எப்படி மாற்றுவது..வாங்க பார்ப்போம்.!
தற்போது ஆதார் என்பது இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். குறிப்பாக ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. அதேபோல் ஆதார் கார்டு இருந்தால் தான் தற்போது அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பெரும்பாலும் அவரவருக்குப் பிடிக்காத ஒன்றாகவே இருக்கும். காரணம் என்னவென்றால் முதன் முதலில் ஆதார் எடுக்க போகும் போது, அவசர அவசரமாக போட்டோக்களை பலர் எடுக்க வேண்டிய நிலைமை இருந்தது. எனவே அவர்களின் போட்டோக்கள் அவர்களுக்கே அடையாளம் தெரியாத வகையில் தெளிவில்லாமல் இருக்கும்.

மேலும் சிலருக்கு சிறு வயதில் எடுத்த போட்டோ என்பதால் அடையாளமே தெரியாத அளவில் இருக்கும். பின்பு இதை வைத்து அவ்வப்போது நிறைய மீம்ஸ்கள் கூட வெளிவந்தன. எனவே பல்வேறு மக்களுக்கு தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய போட்டோவை அப்டேட் செய்து பயன்படுத்தத் தோன்றும். குறிப்பாக இது எளிதான காரியம் தான். அதாவது ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்ற சில வழிமுறைகள் உள்ளன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
வழிமுறை-1: முதலில் UIDAI (https://uidai.gov.in/) அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து அந்த இணையதளப் பக்கத்தில் Aadhaar Update எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.
வழிமுறை-2: அடுத்து ஆதார் பதிவு மையத்தில் அந்த படிவத்தைச் சமர்ப்பிக்கவும். குறிப்பாக அங்கு இருக்கும் ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சரிபார்ப்பார். அதன்பிறகு உங்களது ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தை பணியாளர் எடுத்துக்கொள்வார்.

வழிமுறை-3: குறிப்பாக இந்த சேவைக்காக 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN - Update Request Number) வழங்குவார். பின்பு உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.
வழிமுறை-4 அதேபோல் உங்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் கண்காணிக்கலாம். அதாவது UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி புதிய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பான் எண் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், ஜூலை 1, 2023 முதல் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகள் செயலிழந்துவிடும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆதார் - பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், வருமான வரி செலுத்துவோருக்குக் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதன் மூலம் ஜூன் 30, 2023 வரை பான் கார்டு ஆதார் கார்டுகளுடன் இணைக்கலாம். இப்படி இணைக்கப்படாத பான் கார்டு அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல்படாது என்று நிதி அமைச்சகம் மத்திய நேரடி வரி வாரியத்தின் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications