கவுண்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய வேண்டுமா? அப்போ ஆன்லைனில் கேன்சல் செய்யலாம்.. இதோ வழிமுறைகள்!
இந்தியன் ரயில்வேஸ் (Indian Railways) சேவையைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது எனக் கூறிவிடலாம். அதுவும் ஆசியாவிலேயே மிகப் பெரிய போக்குவரத்து வலையமைப்பைக் கொண்ட துறையாக இந்தியன் ரயில்வேஸ் உள்ளது. குறிப்பாக டிக்கெட்டின் விலை குறைவு, பயண நேரமும் குறைவு மற்றும் சரியான நேரத்தில் சென்று சேர முடியும் என்பதால் பலர் இந்த ரயில் சேவை பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தியன் ரயில்வேஸ் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகள் மற்றும் அதன் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. அதுவும் பயணத்தை எளிதாக்க, டிக்கெட் முன்பதிவில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில் பயணிகள் தற்போது இந்திய ரயில்வே அமைப்பின் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) மூலம் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள்.

குறிப்பாக இந்த ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலி மூலம் எளிமையாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதேபோல் இந்த ஐஆர்சிடிசி தளத்தில் நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், அதை எளிதாகச் செய்து பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுண்ட்டர்களில் நேரடியாக எடுக்கப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் ரத்து செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
கவுண்ட்டர் டிக்கெட்டை (counter ticket)ஆன்லைனில் ரத்து செய்யும் வழிமுறைகள்:
வழிமுறை-1: நீங்கள் முன்பதிவு கவுண்ட்டர்களில் வாங்கிய டிக்கெட்டை ரத்து செய்ய முதலில் ஐஆர்சிடிசி வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். அந்த தளத்தில் இருக்கும் கேன்சல் டிக்கெட் (Cancel Ticket) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
வழிமுறை-2: இதை தேர்வு செய்த பின்பு, கவுண்ட்டரில் பெற்ற டிக்கெட்டை ரத்து செய்வதற்கான https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf இந்த பக்கத்தைப் பார்க்க முடியும். இப்போது நீங்கள் கவுண்ட்டரில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் இருக்கும் பிஎன்ஆர் (PNR) எண், ரயில் எண் (train number) மற்றும் பாதுகாப்புக்கான கேப்ட்சாவுடன் டைப் செய்ய வேண்டும்.
வழிமுறை-3: இதை தொடர்ந்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி (OTP) அனுப்பப்படும். உங்களது டிக்கெட்டை ரத்து செய்வதைத் தொடர, இந்த ஓடிபி எண்ணை உள்ளிடவும். ஒடிபி-ஐ டைப் செய்து உறுதிப்படுத்திய பிறகு, முன்பதிவு செய்த பயணிகளின் விவரங்கள் திரையில் தெரியும். இதையடுத்து சமர்ப்பி (submit) என்கிற பட்டனை கிளிக் செய்தவுடன் கவுண்ட்டரில் முன்பதிவு செய்ய டிக்கெட் ரத்து செய்யப்படும்.

ஆனாலும் நீங்கள் கவுண்ட்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் செய்தாலும், ஆன்லைன் வழியாக ரீபண்ட் பெற முடியாது. அதாவது நீங்கள் கேன்சல் செய்த டிக்கெட் பணம் கிடைக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள ரயில் நிலையங்களின் கவுண்ட்டருக்கு தான் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் ஆன்லைனில் டிக்கெட்டை கேன்சல் செய்ததற்கான ஆதாரங்களை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் காண்பித்தால், டிக்கெட் ரீபண்ட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்திய ரயில்வே விதிகளின்படி, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை (confirmed ticket) ரத்து செய்தால், ரயில் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்பு பயணிகள் முன்பதிவு கவுண்ட்டரில் டிக்கெட் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பின்பு காத்திருப்புப் பட்டியல் அல்லது ஆர்ஏசி (RAC) டிக்கெட்டுகளுக்கு, புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு கவுண்ட்டரில் டிக்கெட்டை சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்பதைக் கவனத்தில் கொள்க.


Click it and Unblock the Notifications








