Google Pay யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
இந்தியா முழுவதும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். குறிப்பாக இந்த செயலிகள் மூலம் விரைவாகப் பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதால் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் அவ்வப்போது சில சலுகைகள் கூட இந்த செயலிகள் வழங்குகின்றன.
அதேபோல் நாடு முழுவதும் இந்த யுபிஐ மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது . அதுவும் நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஒருவேளை உங்களது மொபைல் போன் திருடு போய்விட்டால் அல்லது தொலைந்துவிட்டால் போனில் இருக்கும் யுபிஐ வழியாக நமது அக்கவுண்டில இருக்கும் பணம் அபேஸ் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனே யுபிஐ ஐடியை பிளாக் செய்வது மிகவும் அவசியம். இப்போது போன் தொலைந்துவிட்டால் யுபிஐ பிளாக் செய்வது எப்படி என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நீங்கள் கூகுள் பே (Google Pay) செயலியை வைத்திருந்தால் 18004190157 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களைக் கொடுத்து உங்களது யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம். அதேபோல் நீங்கள் போன்பே (PhonePe) செயலியைப் பயன்படுத்தி வந்தால் 02268727374 அல்லது 08068727374 என் எண்ணை அழைத்து உடனே யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம்.

ஒருவேளை நீங்கள் பேடிஎம் (Paytm) செயலியைப் பயன்படுத்தி வந்தால் 01204456456 என்ற எண்ணை அழைத்து யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம். குறிப்பாக கஸ்டமர் கேர் அதிகாரிகள் தேவையான தகவல்களை உறுதி செய்த பிறகு தான் யுபிஐ ஐடியை பிளாக் செய்வார்கள். அதுவும் பேடிஎம் செயலியைப் பயன்படுத்தும் பயனர்கள் இணையதளத்தின் 24 மணி நேர ஹெல்ப் செக்ஷனை தொடர் கொண்டு புகார் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் யுபிஐ மூலம் ஒரு நாளில் எவ்வளவு பணம் செலுத்தலாம் என்பதைப் பொதுமக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். அதாவது யுபிஐ (UPI) ஆப்ஷன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான வரம்பை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிர்ணயித்துள்ளது. NPCI இன் படி, எந்தவொரு UPI பயனரும் பயனரும் ஒரு நாளில் எந்தவொரு நபருக்கும் ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தலாம்.

மேலும் கடந்த ஆண்டு டிசம்பரில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு யுபிஐ செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி ரூ.5 லட்சமாக உயர்த்தியது. குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் கல்விச் சேவைகளுக்கான ஒரு பரிவர்த்தனைக்கான யுபிஐ வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக என்பிசிஐ தனது சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மூலதன சந்தை, காப்பீடு மற்றும் வணிக பரிவர்த்தனைகள் மீதான UPI வரம்பு ரூ.2 லட்சம் ஆகும். ஐபிஓ புக்கிங் அல்லது ரிசர்வ் வங்கி சில்லறை நேரடித் திட்டத்தின் கீழ் பணம் செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனையின் வரம்பு ரூ.5 லட்சம் ஆகும். குறிப்பாக பேடிஎம், போன்பே செயலிகளை விட கூகுள் பே செயலியைப் பயன்படுத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source: indiatvnews.com


Click it and Unblock the Notifications








