Aadhaar: பிவிசி ஆதார் அட்டை.. இனி ரூ.75 கட்டணம்.. ஆர்டர் செய்வது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்..
இந்தியாவில் வங்கி வேலைகள், அரசு திட்டங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சலுகை வரை எல்லாவற்றுக்கும் ஆதார் (aadhaar) கார்டு தேவைப்படுகிறது. குறிப்பாக இந்த ஆதார் கார்டில் தற்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. அதுவும் ஏடிஎம் கார்டு போலவே இருக்கும் பிவிசி ஆதார் கார்டுகளை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
பொதுவாக பிவிசி ஆதார் கார்டு (pvc aadhaar card) ஆனது பாதுகாப்பாகவும், எளிதில் கிழந்துவிடாமலும் இருக்கும். மேலும் இந்த பிவிசி ஆதார் கார்டு அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும். பின்பு இது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருப்பதால் மிகவும் உறுதியாகவும் நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கும்.

அதுவும் இந்த பிவிசி ஆதார் கார்டு ஆனது ஏடிஎம் கார்டு போல இருப்பதால் பர்ஸில் வைத்து எடுத்துச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் தற்போது இந்த பிவிசி ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க தற்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டும். சமீபத்தில் தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த பிவிசி ஆதார் அட்டைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியது.
முன்பு ஒரு பிவிசி ஆதார் அட்டைக்கு ரூ. 50 (வரி உட்பட) கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் வரி மற்றும் உங்கள் வீட்டிற்கு ஸ்பீட் போஸ்ட் (speed post) மூலம் அனுப்பப்படும் விநியோகச் செலவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முன்பு இருந்ததை விட இப்போது அட்டையை ஆர்டர் செய்ய நீங்கள் கூடுதலாக 25 ரூபாய் செலுத்த வேண்டும்.
பிவிசி ஆதார் அட்டையை ஆர்டர் செய்யும் வழிமுறைகள்:
1.முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2.அடுத்து அந்த இணையதளத்தில் My Aadhaar பகுதிக்குச் சென்று Order Aadhaar PVC Card எனும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
3. அதன்பின்பு உங்கள் ஆதார் எண்ணையும், கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட வேண்டும். உடனே உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி (OTP) வரும். அதைப் பதிவிட்ட பிறகு உங்கள் விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும்.
4. உங்களது பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும். அடுத்து அனைத்து தகவல்களும் சரியாக இருந்தால் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.

நீங்கள் பிவிசி ஆதார் கார்டை ஆர்டர் செய்ததும், உங்களுக்கு உடனே சேவை கோரிக்கை எண் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி உங்கள் அட்டையின் டெலிவரி நிலையை எளிதாகக் கண்காணிக்கலாம். அதுவும் இந்த பிவிசி கார்டு ஆனது அனைத்து இடங்களிலும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
நாட்டில் இன்னும் அதிகமான மக்கள் காகித வடிவிலான ஆதார் கார்டுகளையே வைத்திருக்கின்றனர். அது விரைவில் கிழிந்துவிடுகிறது. எனவே இதுபோன்ற பிவிசி ஆதார் கார்டு பயன்படுத்துவது மிகவும் நல்லது. குறிப்பாக இதை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியவில்லை என்றாலும் கூட இ-சேவை மையம் மூலம் எளிதாக விண்ணப்பித்து வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டு ஆதார் கார்டு சேவையில் பல்வேறு புதிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








