இனி காஸ்ட்லி ஏசி வாங்க வேண்டாம்! AC-க்கு மாற்றான களிமண் குழாய்கள் போதும்! வீடே சில்லுனு ஆகிடும்.!
காலநிலை மாற்றத்தால் சில வருடங்களாக வெப்பம் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக ஏசி (AC) இல்லாத வீட்டைப் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. ஏசி பயன்படுத்துவதனால் நமக்கும், நம்மை சுற்றியுள்ள சுற்றுச்சூழலுக்கும் கேடு என்று தெரிந்தாலும் கூட, நம்மால் அதைத் தவிர்த்து வாழ முடியாத நிலைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுவிட்டோம்.
காரணம், சூரியனின் தாக்கம் ஆண்டுக்கு-ஆண்டு கடுமையாகி கொண்டே போகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நினைத்து நம்முடைய மனது AC வாங்க முயன்றாலும், அதன் விலை காரணமாகவும், இடம் பற்றாக்குறை காரணமாகவும் எல்லோராலும் AC வாங்க முடிவதில்லை. குறிப்பாக, எல்லோராலும் 20,000 முதல் 50,000 வரை செலவு செய்ய முடிவதில்லை. இருப்பினும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது.

அதிக செலவு இல்லை.. மின்சார தேவையே சுத்தமா இல்லை.. ஆனா வீடு AC போட்ட மாதிரி ஆகிடும்.!
அதிக செலவின்றி, மின்சார இணைப்பே இல்லாமல், உங்கள் வீட்டை குளிர்விக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே.! அதுவும், இயற்கையான முறையில், எந்தவித சுற்றுப்புற பாதிப்பையும் ஏற்படுத்தாமல், பாதுகாப்பான குளிர்ந்த காற்றை அனுபவிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இதை ட்ரை செய்து பார்க்கலாம். AC-க்கு மாற்றாக இப்போது ட்ரெண்டில் இருக்கும் ஒரு சூப்பர் நேச்சுரல் தொழில்நுட்பம் தான், களிமண் குழாய் கூலிங் சிஸ்டம்.
ஆம், களிமண் குழாய்கள் மூலம் உங்கள் வீட்டை நீங்கள் குளிர்விக்க முடியும். பொதுவாக மண்பானையில் தண்ணீரை வைத்தால், அந்த நீர் வெகுநேரத்திற்குக் குளுமையாக இருக்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். சமீபகாலத்தில், பலர் இந்த மண்பானையையே கொஞ்சம் மார்டனாக வடிவமைத்துக் குழாய் போன்றவற்றைப் பொருத்தி நம்முடைய வசதிக்கு ஏற்றார்போல் மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அந்தத் தொழில்நுட்பத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்தக் களிமண் குழாய் ஏசி.

எப்படி இந்த களிமண் குழாய்கள் உங்கள் வீட்டை குளிர்விக்க போகிறது தெரியுமா?
இந்தக் களிமண் குழாயானது ஒரு வாய் சற்று அகலமாகவும், மற்றொன்று குறுகலாகவும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு வீட்டில் காற்று உள்ளே வரும் வழியான ஜன்னல் பகுதிகளில் கம்பிகளுக்கு மாற்றாக இந்தக் களிமண் குழாய்களை - அகன்ற வாய் பகுதி வெளியிலும், குறுகலான வாய் பகுதி வீட்டின் உள் பகுதியிலும் இருப்பது போல ஒன்றன் மீது ஒன்று வரிசையாக அடுக்கிக்கொள்ள வேண்டும்.
பிறகு அந்தக் களிமண் குழாய்களின் மேல் அடுக்கிலிருந்து தண்ணீரை ஊற்ற வேண்டும். கீழே வளியும் தண்ணீர் அனைத்து குழாய்களிலும் பட்டு ஊறுவதற்கு ஏதுவாக ஊற்றப்பட வேண்டும். அப்படி முற்றிலுமாகத் தண்ணீரில் ஊறியுள்ள குழாய்கள் வழியாக வெப்பமான காற்று உள்ளே வரும்போது, எவாபரேட்டிவ் கூலிங் (Evaporative cooling) என்ற தொழில்நுட்பத்தின் படி காற்றின் வெப்பம் குறைக்கப்பட்டுக் குளிர்ந்த காற்றாக வீட்டினுள் வந்து சேரும்.
அதாவது, சூடான காற்று அந்த ஈரமான குழாய் வழியாக வரும்போது அதில் இருக்கும் அதீத வெப்பம் ஆவியாக்கப்பட்டுவிடும். இதன் காரணமாக அந்தக் காற்று குளிர்வடையும். அந்தக் குழாய்களை ஈரப்படுத்தப் பயன்படுத்தப்படும் நீரை ஒரு சிறிய மோட்டார் பயன்படுத்திச் சுழற்சி முறையில் மீண்டும் மேலிருந்து வடிவது போல வடிவமைக்கலாம். இதன் மூலம் தண்ணீர் வீணாவதையும் தடுக்க முடியும்.

இந்த இயற்கையான AC-க்கு நமது வாய் தான் சிறந்த உதாரணம் மக்களே.!
இதற்கான சிறந்த உதாரணம் நம்முடைய வாய் தான் மக்களே.. உங்கள் வாயை அகலமாக விரித்துக்கொண்டு, உங்கள் வாய் முன் கையை வைத்துக்கொண்டு காற்றை வெளியில் ஊதிப் பாருங்கள், உங்கள் வாயில் இருந்து வரும் காற்று சூடாக உங்கள் கையில் படும். அதேபோல், உங்கள் வாயைக் குறுகலாக வைத்துக்கொண்டு, காற்றை ஊதிப்பாருங்கள், காற்று சில்லென்று வரும். இந்த கான்செப்டில் தான் இந்த களிமண் குழாய் ஏசி வேலை செய்கிறது.
உங்கள் வீட்டில் AC அமைக்க போதுமான இடம் இல்லையென்றாலோ அல்லது அதிக செலவு வேண்டாம் என்று நீங்கள் நினைத்தாலோ, இந்தக் களிமண் குழாய்களைப் பயன்படுத்தி, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். தண்ணீர் அதன்மேல் ஊற்றப்படவில்லை என்றாலும் கூட, இந்த குழாய்கள் வீட்டிற்குள் ஓரளவு குளிர்ச்சியான காற்றை நிரப்பும் என்பதனால் உங்களுக்கு கவலையே வேண்டாம்.
இந்தக் குழாய்களைப் பொருத்துவதற்கு ஏசியை விடக் குறைந்த செலவுதான் ஆகும், மேலும் இதனைப் பயன்படுத்த மின்சாரமும் தேவையில்லை என்பதால் மின்கட்டணம் பற்றிய பயமும் உங்களுக்கு தேவையில்லை. இது ஏசியைப் போல அபாயகரமான வாயுக்களை வெளியிடாது. சுற்றுச்சூழலும் பாதுகாப்பானது. இந்தக் குழாய்களைப் பொருத்துவதன் மூலம் காற்றின் வெப்பத்தை 6 முதல் 10 டிகிரி வரை குறைக்கலாம் என்று அதன் தயாரிப்பளர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications