ஸ்டார்லிங்க்: இன்டர்நெட்டின் எதிர்காலம்.. 550 கி.மீ. உயரம்.. 7,600 சாட்டிலைட்கள்.. எப்படி வேலை செய்கிறது?
பில்லியனரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமானது, இந்தியாவில் சாட்டிலைட் மூலமாக இன்டர்நெட் சேவையை அடுத்த 2 மாதங்களுக்குள் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்டார்லிங்க் சாட்டிலைட்கள் எப்படி வேலை செய்கிறது? விண்வெளியில் எத்தனை சாட்டிலைட்கள் இருக்கின்றன? பாரம்பரியமாக கிடைக்கும் இன்டர்நெட் சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? போன்ற ஒட்டுமொத்த சந்தேகங்களையும் இங்கே தீர்த்து கொள்ளலாம்.
ஸ்டார்லிங்க் சாட்டிலைட்கள் எப்படி வேலை செய்கிறது?
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஸ்டார்லிங் ஆனது, ஆயிரக்கணக்கான சாட்டிலைட்கள் அடங்கிய தொகுப்பை (Constellation) பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்தி இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. பூமியில் இருந்து 540 முதல் 570 கி.மீ உயரத்தில் இந்த சாட்டிலைட்கள் செயல்படுகின்றன.

இந்த சாட்டிலைட்களில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட் போன்ற டிவைஸ்களில் இன்டர்நெட் சேவையை பெற முடியாது. டிஷ் (Dish) போன்ற பயனர் முனையங்கள் (User Terminals) தேவைப்படும். இந்த ஹப் மூலம் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல கிரவுண்ட் ஸ்டேஷன்கள் (Ground Stations) மூலமும் பெற்று கொள்ளலாம்.
பாரம்பரிய இன்டர்நெட் சேவையில் இருந்து எப்படி மாறுபடுகிறது?
1. ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள்கள் தேவையில்லை.
2. டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் லைன்கள் (Digital Subscriber Lines) தேவையில்லை.
3. செல்லூலார் டவர்கள் (Cellular Towers) தேவையில்லை.
ஆகவே, அண்டர் கிரவுண்ட்டில் பதிக்கப்படும் ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள்கள் மூலம் கிடைக்கும் இன்டர்நெட் சேவையானது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால், சாட்டிலைட்கள் மூலம் ஸ்டார்லிங் கிடைப்பதால் அதன் கவரேஜ் ஏரியாவானது வரம்புக்குள் அடைக்க முடியாது. இது தொலைத் தூரப்பகுதிகளுக்கும் இன்டர்நெட் சேவையை கொண்டு சேர்க்கும்.

டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் லைன்கள் மூலம் கிடைக்கும் இன்டர்நெட் சேவைக்கு உள்கட்டமைப்பு தேவைப்படும். டெலிபோன் லைன்கள் மூலம் வீடுகள் கனெக்ட் செய்யப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஹப் தேவைப்படுகிறது. ஆகவே, டெலிபோன் உள்கட்டமைப்பு கொண்ட பகுதிகளில் மட்டுமே சேவையை பயன்படுத்த முடியும். ஸ்டார்லிங் உள்கட்டமைப்பு தேவையில்லை.
ஸ்மார்ட்போன் இன்டர்நெட்டுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சேவையானது செல்லூலார் டவர்கள் (Cellular Towers) மூலம் கொடுக்கப்படுகிறது. இதற்கும் கவரேஜ் ஏரியா பொருந்தும். குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் சேவைகள் கிடைப்பதால் தடை ஏற்படலாம். ஆனால், ஸ்டார்லிங் செல்லூலார் டவர்களைவிட அதிக ஏரியாக்களை கவர் செய்து கொள்ளும்.
ஏன் முக்கியமாக பார்க்கப்படுகிறது?
1. தொலைத்தூரப் பகுதிகள், கிராமப்புறங்களுக்கு உள்கட்டமைப்பு இல்லாமல் சேவை வழங்க முடிகிறது.
2. பேரிடர், அவசர காலங்களில் தடையில்லாத கனெக்டிவிட்டியை கொடுக்க முடியும்.
3. மொபைல் அப்ளிகேஷன் மற்றும் டிவைஸ்கள் கிடைப்பதால், எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும்.

எத்தனை ஸ்டார்லிங் சாட்டிலைட்கள் விண்வெளியில் இருக்கின்றன? 7,600-க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் சாட்டிலைட்கள் பூமியின் சுற்றிப்பாதையில் இருக்கின்றன. இதுவரையில் 12,000 சாட்டிலைட்களை வளிமண்டலத்தில் நிலை நிறுத்த ஸ்டார்லிங்க் அந்தந்த அரசாங்கங்களிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. 42,000 சாட்டிலைட்களை நிலை நிறுத்த ஸ்டார்லிங்க் திட்டமிட்டுள்ளது.
இந்திய வெளியீட்டிற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை: ஸ்டார்லிங் நிறுவனமானது, இந்தியாவில் அதன் சேவைகளை வழங்குவதற்கு குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன் பை சாட்டிலைட் (GMPCS) உரிமத்தை தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) பெற்றுவிட்டது. இந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை பெறுவதற்கான கட்டணம் உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், வங்கதேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளில் ஸ்டார்லிங் சேவைகள் கிடைப்பதால், அதை வைத்து இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் கட்டண விவரங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி டிஷ், ரூட்டர், கேபிள் போன்றவற்றுடன் அடங்கிய செட்டப் கிட் (Setup Kit) ரூ.33,000 கிடைக்க இருக்கிறது. ரூ.3,000 முதல் மாதாந்திர திட்டம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் வரவேற்பு எப்படி இருக்கும்? ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மலிவான விலைக்கே இந்தியாவில் திட்டங்களை கொடுக்கின்றன. இதற்கு ஏற்ப உள்கட்டமைப்பை பல வருடங்களாக செய்து முடித்துள்ளன. ஆகவே, இதை ஸ்டார்லிங் பின்னுக்கு தள்ளும் என்பது கணிக்க முடியாதது. அதேபோல ஸ்டார்லிங் விலை உயர்ந்தாக இருக்கும்.
ஏனென்றால், இது சாட்டிலைட் மூலம் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இது ஒரு தனிப்பட்ட நபருக்கு கிடைக்கும்போது அதிக விலை இருக்கும். அதே நேரத்தில் தொலைத்தூர பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்களை கனெக்ட் செய்ய இதை ஹாப்பாக பயன்படுத்தலாம். ஆகவே, இது தேவைக்கு ஏற்ப மட்டுமே மாற்றத்தை கொண்டுவரும். பெரிய மாற்றம் இருக்காது.


Click it and Unblock the Notifications








