Redmi போன்கள் இந்தியாவில் எப்படி தயாராகிறது தெரியுமா? மொபைல் பேக்டரியில் நடப்பது இது தான்!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் எப்படி உருவாகின்றன என்பதனை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நாம் அனைவருக்குமே இருக்கும். தொலைக்காட்சியில் அவற்றின் உருவாக்கம் பற்றிய தொகுப்பை நாம் அனைவரும் வியந்து பார்த்திருப்போம். இன்றைய நவீன உலகத்தில் நாம் கைபோல இருக்கும் ஒரு பொருள் என்றால் அது ஸ்மார்ட்போன் தான். நம் உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஸ்மார்ட் போன்கள் எப்படி உருவக்கப்படுகின்றன என்று நம்மில் பலர் யோசித்திருப்போம்.
இந்திய சந்தையில் மேம்பட்ட அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை மலிவான விலைக்கு விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று சியோமி (Xiaomi). சீனாவை பூர்வீகமாக கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் சியோமி, ரெட்மீ (Redmi) என்று இரண்டு விதமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலையை இந்தியாவில் ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் இந்திய சந்தையில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி என்றால் அனைத்து மூலப்பொருட்களுமே இந்தியாவில் உருவாக்கப்படுவதில்லை. ஸ்மார்ட்போனின் உதிரிபாகங்கள் அந்தந்த நிறுவனத்தின் தாய்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்திய ஆலையில் முழுமையான ஸ்மார்ட் போனாக ஒன்றிணைக்கப்படுகிறது.
ஹரியானாவின் பவால் நகரத்தில் அமைந்துள்ள சியோமியின் டிபிஜி (DBG) உற்பத்தி ஆலையில் ரெட்மீ ஸ்மார்ட் போன் எப்படி உருவாக்கப்படுகிறது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். ஸ்மார்ட்போன் தயாரிப்பின் முதல்கட்டமாக அதன் இதயம் போல் கருதப்படும் ப்ரிண்டட் சர்க்யூட் போர்ட் (Printed Circuit Board, PCB) இணைக்கப்படுகிறது. இந்த பிசிபியின் மூலம் தான் ஸ்மார்ட்போனின் அனைத்து செயல்பாடுகளும் நிகழ்த்தப்படுகிறது.
இயந்திரங்கள் மூலம் பொருத்தப்படும் பிசிபியை மனிதர்கள் சரிபார்க்கின்றனர். பிசிபியில் இருக்கும் பேட்டரி கனெக்டர் (Battery connector), ஆன்டனா ஸ்விட்ச் (Antenna switch), ஆர் எஃப் சர்க்யூட் (RF Circuit), ஆடியோ சர்க்யூட் (Audio circuit), IC-க்கள் என்று அனைத்தின் செயல்பாடும் சரியாக உள்ளதா என்று இந்த கட்டத்தில் தனித்தனியே சரிபார்க்கப்படும். சோதனையில் கோளாறாக இருப்பதாக கருதப்படும் பிசிபிக்கள் சீரமைப்பிற்கு திருப்பி அனுப்பப்படும்.
பிசிபியை தொடர்ந்து இதர பாகங்கள் ஒவ்வொன்றாக பொருத்தப்படும். ஸ்மார்ட்போனின் மற்ற பாகங்களான டிஸ்ப்ளே (Display), கேமரா (Camera), பேட்டரி (Battery) போன்றவை அடுத்தடுத்து வரிசையாக பொருத்தப்படும். இந்த பாகங்களை எல்லாம் தானியங்கி இயந்தியங்கள் தான் பொருத்தும் என்று இதுவரை நாம் நினைத்திருப்போம். ஆனால் அது தான் இல்லை. இந்த அனைத்து பாகங்களையும் ஊழியர்களால்தான் பொருத்தப்படுகிறது. உதாரணத்திற்கு ஒருவர் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவை பொருத்துவார் மறுமுனையில் இருப்பவர் அது சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பார். ஒவ்வொரு கட்டத்திலும் மனிதனை தொடர்ந்து இயந்திரங்களும் அந்தந்த பாகம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கும்.
அடுத்ததாக கேமரா. ஸ்மார்ட்போன்களில் கேமராக்கள் பத்திரமாக பொருத்த பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தூசி, அழுக்கு புக முடியாதவாரு பாராமரிக்கப்படும் பகுதியில் வைத்து மட்டுமே கேமராக்கள் பொருத்தப்படும். தூசி படியாதவாறு அந்த குறிப்பிட்ட பகுதியை ஹ்யுமிடிஃபையர்கள் (Humidifier) பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஹ்யுமிடிஃபையர்கள் காற்றை அவ்வபோது சுத்திகரித்து, கேமரா பொருத்தப்படும்போது அதனுள் சிறிய அளவு தூசிகூட இல்லாமல் பார்த்துக்கொள்ளும். ஸ்மார்ட்போன் தாயரிப்பில் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு பகுதியாக இதனை குறிப்பிடலாம்.
அனைத்து பாகங்களும் பொருத்தப்பட்ட பின்னர் ஸ்மார்ட்போன் முழுமையடைந்து சோதனைக்கு தயாராகிவிடும். முழுமையாக உருவம்பெற்ற ஸ்மார்ட்போன்கள் ஊழியர்கள் தான் சோதனைக்குட்படுத்துவர். போனின் டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி, சார்ஜிங் தன்மை என்று அனைத்தும் ஊழியர்களால் சோதனைக்கு உண்டாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். செயல்பாட்டு சோதனையை தொடர்ந்து பல்வேறு திசைகளில் இருந்து தாக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து கீழே போடுவது போன்ற சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும். இந்த சோதனை மூலம் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் திடமாக உள்ளதா என்று கண்டறியப்படும்.
அனைத்து சோதனைகளிலும் வெற்றியடைந்த ஸ்மார்ட்போன்களை ஊழியர்கள் அதற்கான பெட்டியில் வைத்து விற்பனைக்கு அனுப்பிவைப்பர். பவாலில் உள்ள இந்த டிபிஜி உற்பத்தி ஆலையில் சியோமி மட்டுமின்றி மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களும் உருவாக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








