ஆதார் அட்டையில் எத்தனை முறை பெயர் மாற்ற முடியும்? இதுதான் விதிகள்.. இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
நாட்டில் அனைத்து முக்கிய சேவைகளையும் பெற ஆதார் அட்டை (Aadhaar card) பயன்படுகின்றது. அதுவும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் பெறுவது என அனைத்திற்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது.
குறிப்பாக 12 இலக்க எண்களைக் கொண்ட ஆதார் அட்டையில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு பயோமெட்ரிக் தகவல்களை (கைரேகை, கருவிழி) உள்ளிட்டவையும் பதிவு செய்யப்படுகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆதார் அட்டை பொறுத்தவரை பெயர், முகவரியில் தவறு இருந்தால் நலத்திட்டங்களைப் பெறுவதில் சிக்கல் எழலாம்.

ஆகவே ஆதாரில் பெயர், முகவரி போன்றவற்றைச் சரியாக வைத்திருப்பது கட்டாயம். ஒருவேளை ஆதாரில் முக்கிய விவரங்களில் திருத்தங்கள் தேவைப்பட்டால், அவற்றை ஆதார் மையத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.
அதன்படி ஆதார் அட்டையில் பெயரை இரண்டு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். இதற்காக வாக்காளர் அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்தலாம். அதேபோல் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்த முடியும்.
ஆனால் ஆதார் அட்டையில் முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும், போதிய ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திருத்த முடியும். குறிப்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (uidai) இணையதளம் அல்லது ஆதார் மையத்தில் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி இந்த திருத்தங்களைச் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் மேப்ஸ்
அதேபோல் சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களைக் கூகுள் மேப்ஸில் (Google Maps) காட்டும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளன. குறிப்பாக UIDAI மற்றும் கூகுளின் ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேர்க்கை மற்றும் திருத்த மையங்கள் (Aadhaar Enrolment & Update Centres) கூகுள் மேப்ஸில் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் ஆதார் சேவா கேந்திராக்கள் (ASKs) மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட மையங்களும் அடங்கும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள உண்மையான மையங்களை சில நொடியில் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சேவையில் வெறும் இடத்தை மட்டும் காட்டாமல், அந்த மையத்தில் என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக புதிய ஆதார் பதிவு, பயோமெட்ரிக் பதிவு, பெயர், முகவரி, செல்போன் எண், பிறந்த தேதி,பாலினம் ஆகியவற்றைத் திருத்துதல் மற்றும் மையத்தின் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்கள் போன்றவற்றைக் கூகுள் மேப்ஸில் எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். இதுதவிர பல சிறப்பான சேவைகள் கூகுள் மேப்ஸில் கிடைக்கும்.
அதாவது ஆதார் மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த தகவல்களும் இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் (Divyang-friendly infrastructure), வாகன நிறுத்துமிடம் (Parking, மையத்தின் கூட்ட நெரிசல் குறித்த விவரங்களையும் பயனர்கள் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








