என்னது.. 120 நாட்கள் காத்திருக்கணுமா? இந்திய விஞ்ஞானி சொன்ன பகீர் தகவல்.. ADITYA-L1 ஆர்வலர்கள் அப்செட்!
இஸ்ரோவின் சந்திரயான்-3 அளவிற்கு பட்டித்தொட்டி எங்கும் மிகவும் பரவலாக, உலகம் முழுவதும் பிரபலமாக பேசப்பட்ட ஸ்பேஸ் மிஷன்களை (Space Missions) விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு சந்திரயான்-3 மிஷனின் (Chandrayaan-3 Mission) ஒவ்வொரு நகர்வும், மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
சந்திரயான்-3 மிஷன் ஆனது மிகப்பெரிய பேசுபொருளாக மாற.. குறைந்தது 100 காரணங்களையாவது முன்வைக்கலாம். முதல் மற்றும் முக்கிய காரணம்: சந்திரயான்-2 மிஷன் (Chandrayaan-2 Mission) தோல்வியில் முடிந்ததால் இது கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மிகவும் இயல்பாகவே உருவானது.

அதுமட்டுமின்றி, இந்தியாவிற்கு முன்பாகவே, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி விடவேண்டும் என்கிற நோக்கத்தின்கீழ், அவசர அவசரமாக நிலவிற்கு லூனா-25 என்கிற விண்கலத்தை அனுப்பிய ரஷ்யாவும் கூட சந்திரயான்-3 மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தது. கிட்டத்தட்ட அதுவொரு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போலவே இருந்தது.
ஒருகட்டத்தில், ரஷ்யாவின் லூனா-25 விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் மோதி தோல்வியில் முடிந்த பிறகு, இந்தியாவின் சந்திராயன் 3-க்கும் அந்த நிலை வரக்கூடாது என்கிற எண்ணம் மேலோங்கியது. அது பத்திரமாக நிலவில் தரை இறங்க வேண்டும்; இந்தியா சாதனை படைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் ஒருமித்த எண்ணமாக மாறியது!
இப்படியாக.. சந்திரயான் 3-யின் ஒவ்வொரு நகர்வையும், செய்திகளையும் பேசுபொருளாக மாற்ற.. நமக்கு முழுதாக 40 நாட்கள் நேரம் கிடைத்தது. நினைவூட்டும் வண்ணம் சந்திரயான்-3 விண்கலமானது ஜூலை 14 விண்ணில் செலுத்தப்பட்டு, ஆகஸ்ட் 23 இல் தான் சந்திர கிரகத்தின் மேற்ப்பரப்பில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது.
இதே போன்ற காலகட்டத்தை தான் இஸ்ரோவின் அடுத்த ஸ்பேஸ் மிஷன் மற்றும் முதல் சோலார் மிஷன் (ISRO's First Solar Mission) ஆன ஆதித்யா எல்1 விண்கலமும் (Aditya L1 Mission) எடுத்துக்கொள்ளும் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால்.. அது முற்றுலும் தவறு. ஏனென்றால், சூரியனை நோக்கிய இஸ்ரோவின் இந்த முதல் பயணம் சற்றே நீளமானதாக இருக்கும்.
இந்திய வானியற்பியல் கழக இயக்குநர் அன்னபூர்ணி சுப்ரமணியம் பகிர்ந்துள்ள தகவலை வைத்து பார்க்கும் போது, ஆதித்யா-எல்1 மிஷன் ஆனது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், அது "திட்டமிட்ட புள்ளியை" வெற்றிகரமாக அடைந்ததா இல்லையா என்பதை அறிந்துகொள்ள நாம் சுமார் 120 நாட்களுக்கு காத்திருக்க வேண்டும்!
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா-எல்1 மிஷன் பற்றிய சில முக்கிய விவரங்களை அன்னபூர்ணி சுப்ரமணியம் பகிர்ந்து கொண்டார். அப்போது "ஆதித்யா-எல்1 விண்கலமானது 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணிக்க உள்ளது; அந்த புள்ளியை அடைய ஆதித்யா-எல்1 விண்கலத்திற்கு சுமார் 100 - 120 நாட்கள் ஆகும்." என்று கூறியுள்ளார்.
அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். ஆதித்யா-எல்1 விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையே 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் இருக்க வேண்டும். ஆக ஆதித்யா-எல்1 விண்கலத்திற்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் சுமார் 148.5 மில்லியன் கிலோமீட்டர்கள் இருக்கும். அந்த புள்ளியை அடைய ஆதித்யா-எல்1 விண்கலத்திற்கு 120 நாட்கள் வரை ஆகலாம்.
நினைவூட்டும் வண்ணம், ஆதித்யா-எல்1 மிஷன் ஆனது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் (Sriharikota) இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி57 லாஞ்சரின் (PSLV-C57 Launcher) வழியாக விண்ணிற்குள் செலுத்தப்பட உள்ளது.
ஆதித்யா-எல்1 மிஷனின் நோக்கத்தை பற்றி பேசுகையில், "நாங்கள் சூரியனை ஆய்வு செய்ய விரும்புகிறோம். இன்னும் நமக்கு புரியாத விஷயங்கள் நிறைய உள்ளன. சூரியனுக்குள் அணுக்கரு இணைவு (Nuclear fusion) நடப்பதை நாம் அறிவோம். மேலும் சூரியன் வெடிக்கிறது, அதிக அளவு பிளாஸ்மாவை வெளியிடுகிறது, இது விண்வெளி வானிலை மற்றும் சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை பாதிக்கிறது"
"ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகள் ரிமோட் சென்சிங் (Remote Sensing) செய்யும் மற்றும் காந்தப்புலங்களை (magnetic fields) பற்றி ஆய்வு செய்யும்" என்று அன்னபூர்ணி சுப்ரமணியம் கூறியுள்ளார். எல்லாம் சரியாக நடந்தால், திட்டமிட்டப்படி சென்றால்.. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது அடுத்த 120 நாட்களில் இன்னொரு மகத்தான சாதனையை அடைந்து இருக்கும்!
Photo courtesy: NASA


Click it and Unblock the Notifications








