சுந்தர் பிச்சையை அலறவிட்ட வெடி குண்டு மிரட்டல்.! கடுப்பில் குடிமகன் செய்த வேலை.! என்னாச்சு?
இதுவரை எத்தனையோ வெடி குண்டு மிரட்டல்களை இந்த உலகம் சந்தித்திருக்கும்.. ஒவ்வொரு மிரட்டலுக்கும் பின்னணியில் ஏதேனும் ஒரு காரணம் இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால், இப்படி ஒரு காரணத்திற்காக வெடி குண்டு மிரட்டல் வழங்கப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்.
இந்த வெடி குண்டு மிரட்டல் வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.. இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவனத்திற்குத் தான் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலக (Google Office) வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு மர்ம நபர் தொடுத்த அழைப்பின் மூலம் ஒட்டுமொத்த கூகுள் நிர்வாகமும் ஆடிப்போனது.

புனேவில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கு வந்த வெடி குண்டு மிரட்டல்.!
புனேவின் முந்த்வா பகுதியில் உள்ள பல மாடி வர்த்தக கட்டிடத்தின் 11வது மாடியில் அமைந்துள்ள ஒரு கூகுள் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளதாக அனைவரும் எச்சரிக்கப்பட்டனர். சுந்தர் பிச்சைக்கும் (Sundar Pichai) இந்த தகவல் அனுப்பப்பட்டது. அடையாளம் தெரியாத மர்ம நபர் மூலம் வந்த அழைப்பை அடுத்து, அந்த அலுவலக பில்டிங் வளாகம் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் உஷார்படுத்தப்பட்டனர்.
சுந்தர் பிச்சையை அலறவிட்ட வெடி குண்டு மிரட்டல் தகவல்.!
இந்த தகவல் உடனே காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. கூகுள் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அழைப்பு வந்தது என்று துணை போலீஸ் கமிஷனர் (மண்டலம் V) விக்ராந்த் தேஷ்முக் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் புனே போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கூகுள் அலுவலகத்தைச் சல்லடை போட்டு சோதனை செய்த போலீசாருக்கு கிடைத்தது என்ன?
முழு வளாகத்தையும் சல்லடை போட்டு சோதனை செய்த போலீசாருக்கு எந்தவொரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதே நேரத்தில், கூகுள் அலுவலகத்திற்கு வந்த அழைப்பின் தகவல்களை போலீசார் சோதனை செய்து வந்தனர். இறுதியில், அந்த அழைப்பு ஹைதராபாத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அழைப்பு வந்த முகவரியை போலீசார் முற்றுகையிட்டுள்ளனர்.
வெடி குண்டு மிரட்டல் விடுத்த 'அந்த' மர்ம ஆசாமி யார்?
இதன் இறுதியில், கூகுள் நிறுவனத்திற்கு வெடி குண்டு மிரட்டல் கொடுத்த மர்ம ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நபர், குடிபோதையில் விளையாட்டாக அழைப்பை மேற்கொண்டு, 'பில்டிங்கில் வெடிகுண்டு இருக்கிறது' என்று திரைப்பட பணியில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. குடிபோதையில், என்ன செய்வதென்று தெரியாமல், பொழுது போகாமல், கடுப்பில் அவர் அழைப்பை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.
பொழுது போகாமல் மிரட்டல் விடுத்த குடிமகன் கைது.!
இறுதியில், புனேவில் உள்ள கூகிள் அலுவலகத்திற்கு வந்த வெடி குண்டு மிரட்டல் அழைப்பு ஒரு புரளியாக மாறியது. உண்மையில், எந்த வெடிகுண்டும் அந்த பகுதியில் இல்லை என்று போலீசார் சோதனையில் உறுதியாகியுள்ளது. குடிபோதையில், அழைப்பு விடுத்த நபர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டு, அவரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications