2023-ல் அதிகம் விற்பனையான போன் இது தானா? எல்லோரையும் பேக்கில் ஓடவிட்ட நிறுவனம் எது தெரியுமா?
இந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பித்து அமோகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், சில டெக் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த லாபத்தை வழங்கவில்லை என்றே நாம் கூறலாம். இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டாலும், சில நிறுவங்களுக்கு லாபம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியுள்ளது.
அதில் ஒட்டுமொத்த லாபத்தையும் 2023 இல் ஆப்பிள் நிறுவனம் அபேஸ் செய்துவிட்டது. ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதி எண்ணிக்கையில் சரிவு இருந்தபோதிலும், ஆப்பிள் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் பிரகாசிக்கிறது. தொழில்நுட்ப ஆராய்ச்சி குழுவான ஓம்டியாவின் கூற்றுப்படி, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் தற்போது 2023 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனமாக திகழ்கிறது.

சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, ஆப்பிள் நிறுவனம் இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் அதன் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) சாதனத்தை 26.5 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் குறிப்பிடுகிறது. இது 2023 ஆம் ஆண்டில் அதிக விற்பனையான ஸ்மார்ட்போனாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ (Apple iPhone 14 Pro) சாதனம் 21 மில்லியன் ஏற்றுமதி அளவுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் பட்டியலில், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13 போன்கள் இடம்பெற்றுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமானது.
ஆப்பிள் நிறுவனம் 2023 முதல் பாதி வரை 16.5 மில்லியன் iPhone 14 யூனிட்களையும் 15.5 மில்லியன் iPhone 13 யூனிட்களையும் அனுப்பியுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த ஆண்டில் 10வது அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் சாதனமாக ஐபோன் 11 திகழ்கிறது. இது முதலில் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனம் ஐபோன் 11 இன் 6.9 மில்லியன் யூனிட்களை விற்றுள்ளது.
சாம்சங் அதன் சமீபத்திய முதன்மையான சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சாதனத்தை 9.6 மில்லியன் யூனிட்களை விற்க முடிந்துள்ளது. கூடுதலாக, நிறுவனம் சாம்சங்கின் பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி ஏ14 இன் 12.4 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தைக்கான ஒட்டுமொத்த தேவை குறைந்துள்ள நிலையில், இந்த அறிக்கையின்படி, உயர்நிலை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு, குறிப்பாக ஆப்பிள் போன்ற பிராண்டுகளுக்கு நிலையான தேவை இருப்பதாகத் தெரிகிறது. வரவிருக்கும் ஐபோன் 15 ப்ரோ தொடர் சாதனங்கள் விலை உயர்வைப் பெறுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஐபோன்களின் சராசரி விற்பனை விலை அதிகரிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது, "விலை உயர்வு ஒரு பிரச்சனை இல்லை" என்று கூறுகிறார். ஏனெனில், ஆப்பிள் ரசிகர்கள் எப்படியும் ஐபோனிற்கான விலையை வழங்க தயாராக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புது வரவு ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன் 15 சீரிஸ் சாதனம், வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில், குறைந்தது 4 ஐபோன் மாடல்களாகவாது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புது ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் நேரத்தில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








