இதுதான் சூப்பர் கேட்ச்: நடுவானில் ராக்கெட்டை கேட்ச் பிடித்த ஹெலிகாப்டர்.!
விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளின் ஒரு பகுதி விண்ணுக்கு சென்றதும் அதன் மற்றொரு பகுதி பூமியில் விழுந்துவிடும். எனவே அதை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்களை அமெரிக்க பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் மட்டுமே தயாரித்துள்ளது. குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் வகை ராக்கெட்டுகள் மட்டும் விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பத்திரமாக பூமியில் தரையிறங்க கூடியவை.

தற்போது பல தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற ராக்கெட்டுகளை உருவாக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில்அமெரிக்காவிலும், நியூசிலாந்தில் அலுவலகங்களை கொண்டுள்ள ராக்கெட் லேப் என்ற தனியார் நிறுவனம் பூமியை நோக்கி விழும் ராக்கெட்டை நடுவானில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளது.

ராக்கெட் லேப் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு பீட்டர் பெக் என்பவர் மூலம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பல தனியார் நிறுவனங்களுக்கு சாட்டிலைட்டுகளை அனுப்பி வருகிறது. மேலும் தொழில்நுட்பம், விவசாயம் என பல விஷயங்களுக்காக இந்த நிறுவனம் தனியார் சாட்டிலைட்டுகளை பல முறை விண்ணுக்கு அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நியூசிலாந்தில் உள்ள மஹியா தீபகற்பத்தில் இருந்து ராக்கெட் லேப் நிறுவனம் எலக்ட்ரான் ராக்கெட் 34செயற்கைக்கோள்களுடன் விண்ணுக்கு புறப்பட்டது. பின்பு ராக்கெட்டின் பூஸ்டர்' பகுதி பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே அந்த ராக்கெட்டை பிடிக்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.

பின்பு அந்த ராக்கெட்டின் பாராசூட் மீது ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கொக்கி ஒன்று வீசப்பட்டு,பாராசூட் அப்படியே கப்பென்று பிடிக்கப்பட்டது.ஆனாலும் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் பிடியில் ராக்கெட் விடுவிக்கப்பட்டு, அது கடலில் விழுந்தது. பின்னர் ராக்கெட் ஆய்வகத்தின் கப்பல் மூலம் பூஸ்டர் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டது.

இருந்தபோதிலும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் பிடிக்கும் முதல் முயற்சி வெற்றிப்பெற்றதாக ராக்கெட் லேப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் ராக்கெட் சிறந்த நிலையில் இருப்பதாகவும், அதை மீண்டும் பயன்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ஹெலிகாப்டர்களில் நீண்ட கொக்கி மாட்டப்பட்டது. திட்டமிட்டபடி அந்த ராக்கெட்டை, ஹெலிகாப்டர் கேட்ச் செய்தது. ஆனால், அதிக பாரத்தை தாங்க முடியாமல், ராக்கெட்டை கீழே விட, அது கடலில் விழுந்தது. மேலும் ராக்கெட்டை கேட்ச் செய்யும் முயற்சியில் இது ஒரு புதிய சாதனை என்று அந்தராக்கெட் லேப் நிறுவனத்தின் தலைவர் பீட்டர் பெக் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications