செலவு வச்சிட்டாங்க.. பேப்பர் Aadhaar கார்டு வைத்து இருப்பவர்களின் கவனத்திற்கு.. அமலுக்கு வந்த முக்கிய மாற்றம்!
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது மைஆதார் (myAadhaar) போர்டல் அல்லது எம்ஆதார் (mAadhaar) மொபைல் ஆப் வழியாக பெறப்படும் ஆதார் பிவிசி கார்டு கட்டணங்களை (Aadhaar PVC Card Charge) அதிகரித்து உள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.
ஆதார் பிவிசி கார்டு என்றால் என்ன? ஆதார் பிவிசி கார்டு என்பது வழக்கமாக வழங்கப்படும் பேப்பர் அடிப்படையிலான ஆதார் கார்ட்டை வியா மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நீடித்த, கிரெடிட் கார்டு அளவிலான ஒரு பிளாஸ்டிக் ஆதார் பதிப்பாகும். இப்படிப்பட்ட ஆதார் பிவிசி கார்டுக்கான கட்டணம் முன்னதாக ரூ.50 ஆக இருந்தது; தற்போது இது ரூ.75 ஆக (வரிகளுடன் சேர்த்து) அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆதார் பிவிசி கார்டு கட்டணம் ஏன் அதிகரித்தது? யுஐடிஏஐ சுற்றறிக்கையின்படி, பல ஆண்டுகளாக, ஆதார் பிவிசி கார்டு உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான பொருட்கள், அச்சிடுதல், பாதுகாப்பான விநியோகம் மற்றும் தொடர்புடைய தளவாடங்களின் விலை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவினங்களை கருத்தில் கொண்டும், தொடர்ந்து உயர்தர சேவை வழங்கலை உறுதி செய்யும் நோக்கத்துடனும், ஆணையம் தற்போதுள்ள கட்டண கட்டமைப்பை மதிப்பாய்வு செய்துள்ளது.
ஆதார் பிவிசி கார்டு அசல் ஆதாரிலிருந்து வேறுபட்டதா? இல்லை, ஆதார் பிவிசி கார்டு ஆனது உங்களுடைய அதே ஆதார் அட்டையின் ஒரு சிறிய மற்றும் நீடித்த பதிப்பு மட்டுமே ஆகும். இது இ-ஆதார் மற்றும் பேப்பர் அடிப்படையிலான ஆதார் ஆகியவற்றை போலவே செல்லுபடியாகும்.
ஆதார் பிவிசி கார்டு பெற எத்தனை நாட்கள் ஆகும்? ஆதார் எண் வைத்திருப்பவரிடமிருந்து ஆதார் பிவிசி கார்டுக்கான ஆர்டரை பெற்ற பிறகு, யுஐடிஏஐ ஆனது அச்சிடப்பட்ட ஆதார் அட்டையை 5 வேலை நாட்களுக்குள் அஞ்சல் செய்து, ஒப்படைக்கிறது. ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு, தற்போதுள்ள விநியோக விதிமுறைகளின்படி, இந்திய அஞ்சல் துறையின் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலம் ஆதார் பிவிசி கார்டு வழங்கப்படுகிறது.
யுஐடிஏஐ புதிய வாக்குறுதி? நாடு முழுவதும் ஆதார் சேர்க்கை மற்றும் புதுப்பிப்பு மையங்களை விரிவுபடுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) திட்டமிட்டுள்ளது. தற்போது வரை 88 முழுமையான ஆதார் மையங்களே ( Full Fledged Aadhaar Centres) உள்ளன. இந்த எண்ணிக்கை, செப்டம்பர் 2026 க்குள் 473 ஆக உயரும் என்று யுஐடிஏஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, குறிப்பாக கிராமப்புறங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதார் தொடர்பான சேவைகளை மிகவும் நெருக்கமாக கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இளம் குழந்தைகளுக்கான ஆதார் சேர்க்கை தபால் நிலையங்களில் கிடைக்கிறது, ஆனால் பெரியவர்கள் பெரும்பாலும் புதிய சேர்க்கைகள் அல்லது புதுப்பிப்புகளுக்காக ஆதார் மையங்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாக இருக்கிறது; இது சிரமமான காரியமும் கூட!
குறைந்த வசதிகள் காரணமாக ஆதார் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்காக பலரும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். புதிய மையங்கள் இந்த சுமையைக் குறைக்கவும், ஆதார் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றவும், தேவையற்ற பயணங்களை குறைக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகவரி புதுப்பிப்புகள் போன்ற சில ஆதார் விவரங்களை வீட்டிலிருந்தே ஆன்லைனில் செய்ய முடியும். இருப்பினும், கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு ஆதார் மையத்திற்கு தான் செல்ல வேண்டும். பெயர் அல்லது புகைப்படத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நேரில் வந்து செய்யும் சரிபார்ப்பு தேவை.
இதுபோன்ற அனைத்து சேவைகளும் வரவிருக்கும் 473 மையங்களில் கிடைக்கும். பெரும்பாலான இந்தியர்களிடம் ஏற்கனவே ஆதார் இருந்தாலும், நாட்டின் அதிக மக்கள் தொகை காரணமாக, ஆதார் இல்லாத மக்கள் இன்னும் லட்சக்கணக்கில் உள்ளனர். இதேபோல என்ஆர்ஐ-களும் (NRI), வெளிநாட்டினரும் விண்ணப்பிக்கும் போது பெரும்பாலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications








