Netflix சந்தாதாரர்களுக்கு பகீர் செய்தி.. திருடுபோகும் Payment விவரங்கள்.. இமெயில் வந்தா கவனமா இருங்க!
பிரபல ஓடிடி (OTT) தளமான நெட்ஃபிளிக்ஸ் பெயரில் ஒரு ஹேக்கர் கும்பல் சந்தாதாரர்களின் பேமெண்ட் விவரங்களை (Subscribers Payment Details) திருடி வருகிறது. ஒரு போலியான இமெயிலை பயன்படுத்தி சட்டவிரோதமாக தகவல் திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற இமெயில் உங்களுக்கு வந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முழு கட்டுரையை தொடருங்கள்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் (Netflix OTT Platform) கொண்டுள்ளது. இந்தியாவிலும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரர்களாக உள்ளனர். இந்த ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் (Streaming) செய்யப்படும் மணி ஹீஸ்ட் (Money Heist), ஸ்ட்ரேஞ்ஜர் திங்ஸ் (Stranger Things), வெட்னஸ்டே (Wednesday) போன்ற வெப் சீரிஸ்களை பார்க்க நாள்தோறும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால், நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரர்களும் தவறாமல் மாதந்தோறும் பணம் செலுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்தி ஹேக்கர் கும்பல் ஒன்று இமெயில் மூலம் நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரர்களின் பேமெண்ட் விவரங்களை திருடி வருகிறது. இந்த விவரங்களை வைத்து உங்களது பணம் கூட திருடுபோக வாய்ப்புள்ளது. இது போன்ற நேரத்தில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால், இதை எளிதாக தவிர்த்துவிட முடியும்.
இமெயில் வந்தால் என்ன செய்ய வேண்டும்? : நெட்ஃபிளிக்ஸ் போலவே போலியான இமெயிலை அனுப்பும் கும்பல், அதில் 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) உங்கள் பேமெண்ட் பெண்டிங்கில் உள்ளது. இதனை அப்டேட் செய்யும் வரை உங்களுக்கு வழங்கப்படும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். உடனே பிளானை அப்டேட் செய்யுங்கள். இல்லையென்றால் சேவை முடக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கும்.
அதோடு, பேமெண்ட் செய்யும் லிங்க்கும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களது பெயர், வங்கி விவரங்கள் (Bank details) உள்ளிட்டவை கேட்கப்பட்டிருக்கும். இதை நம்பி நீங்கள் உடனேயே பணத்தை செலுத்த முயற்சிக்க கூடாது. அதேபோல உங்களது வங்கி விவரங்களையும் அதில் உள்ளீடு செய்து விடக்கூடாது. அதன் உண்மை தன்மையை அறிய வேண்டும்.
தேவைப்பட்டால், https://www.netflix.com/in/ என்ற இணையப்பக்கத்துக்கு சென்று ஹெல்ப் சென்டர் (Help Centre) மூலம் புகார் அளிக்கலாம் அல்லது 000-800-919-1694 என்னும் நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கலாம். முன்னதாக இதுபோன்ற போலி இமெயில் support@bryanadamstribute[.]dk என்னும் மெயில் ஐடி (Mail ID) இருந்து வந்துள்ளதாகவும், அதில், https://oinstitutoisis[.]com/update/login/ என்னும் லிங்க்கும் இடம்பெற்றிருந்தாகவும் கூறப்படுகிறது. ஆகவே, மேலே குறிப்பிடப்பட்ட மெயில் ஐடியில் இருந்து உங்களுக்கு இமெயில் வந்தால் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.
ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. நாம் கவனக்குறைவுடன் இருந்தால், எளிதாக சைபர் கிரைம் குற்றங்களுக்கு உள்ளாக நேரிடும். ஆன்லைன் குற்றங்கள் இமெயில் (Email), ஓடிபி (OTP), ஃபேக் லிங்க் (Fake Link) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) மூலமே நடக்கிறது. இவற்றை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். கிராஸ் செக் (cross-check) செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








