ஆன்லைனில் விஸ்கி.. டோர் டெலிவரி போட்ட இளம்பெண்.. கழுகு போல காத்திருந்த கும்பல்!
ஆன்லைனில் விஸ்கி ஆர்டர் (Online Whisky Order) செய்து, டோர் டெலிவரிக்கு காத்திருத்த இளம்பெண்ணிடம் நடத்தப்பட்ட குற்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பிவிட்டுள்ளது. இப்படியெல்லாம், நடக்குமா? என்று நினைக்கும் அளவுக்கு ஒரு கும்பல் கைவரிசையை காட்டியிருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
இப்போதெல்லாம், எதை வாங்க வேண்டுமானாலும் ஆன்லைன் பக்கமே பெரும்பாலான மக்களின் நாட்டம் செல்கிறது. ஆர்டர் செய்துவிட்டால் போதும், வீட்டிற்கே வந்துவிடுகிறது, அலைச்சல் மிச்சம், நேரம் மிச்சம் என்று அவர்களின் மனநிலை மாறிவருகிறது. அதே வேளையில் மோசடி கும்பல்களும் ஆன்லைன் மூலம் புதுப்புது கொள்ளை சம்பவங்களை நிகழ்த்திவருவதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

இப்படியொரு சம்பவத்தில் இளம்பெண் ஒருவர் சிக்கியது, மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், அவர் ஆன்லைனில் விஸ்கி ஆர்டர் செய்திருப்பது, கூடுதல் கவனம் பெற்றுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த 33 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மனேசர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில், "குருகிராமில் ஆன்லைன் ஆல்கஹால் டெரிவரி சர்வீஸ் இல்லையென்பது எனக்கு தெரிந்திருந்தும், என்னுடைய லக்கை சோதித்து பார்ப்பதற்காக கூகுளில் தேடினேன். அதில், எனக்கொரு மொபைல் நம்பர் கிடைத்தது. அந்த நம்பருக்கு கால் செய்து, எதிரே பேசிய நபரிடம் ஒரு பாட்டில் க்ளென்ஃபிடிச் (Glenfiddich) ஆர்டர் செய்தேன். அதற்கு ரூ.3000 விலை சொல்லப்பட்டது.
இந்த தொகையை யுபிஐ (UPI) மூலம் அவர்கள் கொடுத்த எண்ணுக்கு அனுப்பினேன். அதன்பின்பு, மீண்டும் எனக்கு கால் வந்தது. அதில், டோர் டெலிவரி செய்ய கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அதிக பணம் செலவாகிறது, என்பதால் அந்த ஆர்டரை கேன்சல் செய்ய முடிவெடுத்து, அவர்களிடம் தெரியப்படுத்தினேன்.
இதற்கு பதிலளித்த அவர்கள் கேன்சல் செய்ய வேண்டுமானால், ரூ.5 கட்ட வேண்டும் என்று கூறி ஜிஎஸ்டி நம்பருடன் ஒரு சலானை அனுப்பினார்கள். நானும் பணத்தை செலுத்திவிட்டு காத்திருந்தேன். சில நிமிடங்களில் எனது வங்கி கணக்கில் இருந்து பலமுறை பணம் டெபிட் செய்யப்பட்டதாக மேசேஜ் வந்தது. அப்படி மொத்தமாக ரூ.29,986 பணம் எடுக்கப்பட்டது.

இதையடுத்து, உடனே வங்கியை தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்துகூறி எனது வங்கி கணக்கை முடக்கினேன். இந்த புகாரில் அவர்களிடம் பேசிய மொபைல் நம்பர் மற்றும் பணம் அனுப்பிய வங்கி விவரங்களை இணைந்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மனேசர் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 420 (ஏமாற்றுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்பே, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வங்கி விவரங்களை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் வழக்குபதிவு செய்ய நேரம் தேவைப்பட்டதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று, குருகிராம் ஏசிபி விபின் அஹ்லாவத் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார். ஆகவே, ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது, எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதில் உஷாராக இருக்க வேண்டும்.
எப்படி பாதுகாப்பாக இருப்பது? அமேசான், பிளிப்கார்ட் போன்ற மக்களின் நம்பகமான ஆன்லைன் தளங்களை தவிர்த்து, நீங்களாகவே தேடிப்பிடிக்கும் ஆப்கள், வெப்சைட்களில் ஆர்டர் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படியே செய்தாலும், உங்களது வங்கி விவரங்களை கொடுக்காமல், கேஸ் ஆன் டெலிவரியை மட்டுமே கொடுப்பது நல்லது.
அதோடு மோசடி தளங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் திருடப்படுவதால், அந்த தகவலை எக்காரணத்தை கொண்டும் பகிர்ந்துவிடாதீர்கள். அதேபோல போலியான ஜிஎஸ்டி பில்லை அனுப்பி வங்கி விவரங்களை கேட்கும் கும்பல்களும் இருக்கின்றன. அப்போதும், நீங்கள் கவத்துடன் அதை தவிர்த்துவிடுவது நல்லது.


Click it and Unblock the Notifications








