YouTube வீடியோவுக்கு லைக் போட்டவருக்கு "ஸ்கெட்ச்" போட்ட இளம்பெண்.. ரூ.42 லட்சம் சுருட்டல்!
தமிழ்நாட்டில் "ஆசை யாரை விட்டது" என்ற சொல்லாடல் உண்டு, அதற்கேற்ப ஐடி ஊழியர் ஒருவர், வாட்ஸ்அப் மூலம் பழகிய பெண்ணை நம்பி யூடியூப் (YouTube) வீடியோவுக்கு லைக் போட்டதால் ரூ. 42 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இதேபோல பலரிடம் பெண்கள் மூலமாக வாட்ஸ்அப் மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்திய வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் கால் (Call) செய்தும், மெசேஜ் (Messages) அனுப்பியும் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டுவருகிறது. அந்த வரிசையில், பார்ட் டைம் ஜாப் (Part Time Jobs) என்ற பெயரில் மக்களை நம்ப வைத்து, அதன்பின் கைவரிசை காட்டி வருகிறது. இதையும் நம்பி பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

அதாவது, வாட்ஸ்அப் சைபர் கிரைம் கும்பல்கள், ஒருவருக்கு முன்பின் தெரியாத வாட்ஸ்அப் நம்பரில் இருந்து கால் செய்தோ, மெசேஜ் செய்தோ பார்ட் டைம் ஜாப் வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் அனுப்பும் யூடியூப் வீடியோவுக்கு லைக் போட்டால் போதும், சப்ஸ்கிரைப் செய்தால் போதும், உங்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை தருகிறோம் என்று கூறுகிறது.
இதை நம்பி யாரேனும் அந்த வேலையை செய்தால், முதலில் சம்பளத்தை கொடுத்து உங்களின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. அதன்பின் ஆசை வார்த்தைகள் கூறி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் 10 மடங்கு லாபம் வரும், பங்கு சந்தையில் மூதலீடு செய்தால் 20 மடங்கு லாபம் வரும் என்று கூறி உங்களால் முடிந்த பணத்தை அனுப்புமாறு தெரிவிக்கிறது. இதை நம்பி யாரேனும் பணம் அனுப்பினால், அப்படியே சுருட்டிக்கொண்டு சென்றுவிடுகிறது.
இதேபோன்று ஹரியான மாநிலம் குருகிராமில் நடந்துள்ளது. ஒரு ஐடி ஊழியரிடம் மோசடி கும்பல், இனிக்க இனிக்க பேசி கைவரிசை காட்டியுள்ளது. இந்த ஐடி ஊழியருக்கு மார்ச் 24ஆம் தேதி அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில், யூடியூப் வீடியோவுக்கு லைக் செய்தால் ஒரு நாளைக்கு ரூ.500 தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நம்பருக்கு ஐடி ஊழியர் கால் செய்து பேசியுள்ளார். அப்போது, திவ்யா என்று அடையாளப்படுத்திக் கொண்ட பெண் இவரிடம் பேசியுள்ளார்.
அந்த பெண்ணிடம் விசாரித்துவிட்டு, யூடியூப் வீடியோவுக்கு லைக் போடும் வேலையை இவர் செய்துள்ளார். இந்த வேலைக்கு அவருக்கு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் திவ்யாவை முழுவதும் நம்பி நட்பாக பழகத் தொடங்கினார். இதையடுத்து அந்த திவ்யா, டெலிகிராம் குரூப் ஒன்றில் ஐடி ஊழியரை சேர்ந்துள்ளார். அந்த குரூப்பில் திவ்யா உள்பட கமல், அங்கித், பூமி, ஹார்ஸ் ஆகிய பெயர்களில் ஆட்கள் இருந்துள்ளனர். இவர்கள் உத்தரவாத வருமானத்தில் (Guaranteed Returns) முதலீடு செய்வது குறித்து குரூப்பில் சேட் செய்து, அதில் திவ்யாவுக்கு லாபம் கிடைத்தது போல பேசியுள்ளனர்.
இதையடுத்து ஐடி ஊழியரிடம், நீங்கள் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். இவர்களை நம்பிய ஐடி ஊழியரும் தன்னுடைய மனைவி மற்றும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.42,31,600 பணத்தை அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். அதன்பின் அவருக்கு ரூ.69 லட்சம் லாபம் கிடைத்துள்ளதாகவும், இந்த பணத்தை பெற ரூ.11,000 தர வேண்டும் என்றும் அந்த கும்பல் தெரிவித்துள்ளது. அப்போதே இவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனக்கு லாபம் வேண்டாம், எனது பணத்தை மட்டும் அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார்.
ஆனால், அந்த கும்பல் பதிலளிக்காமல், கைவரிசை காட்டி சென்றுவிட்டது. இதனால் பதறிப்போன ஐடி ஊழியர் குருகிராம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் போலீசார் விசாரனணை நடத்தி வருகின்றனர். ஆகவே, இதுபோல அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் நம்பரில் இருந்து வரும் கால்களுக்கு, மெசேஜ்களுக்கோ மக்கள் பதிலளிக்க வேண்டாம் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








