VIP கலாச்சாரத்திற்கு வேட்டு.. புது டோல் கேட் ரூல்ஸ்.. NHAI பொளேர்.. சில்லறைகளை சிதறவிட்ட அறிவிப்பு!
விஐபி கலாச்சாரத்தை ஒழித்துக்கட்ட, என்எச்ஏஐ (NHAI) என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India) ஆனது ஒரு முக்கியமான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. என்எச்ஏஐ ஆனது தற்போது வரையிலாக சில வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு (Toll exemptions) அளித்து வருகிறது. இருப்பினும், இந்த விலக்குகளுக்கு தகுதியான வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கைகளின்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்புடைய வாகனங்கள் இனி சுங்கக் கட்டண விலக்குகளுக்கு தகுதி பெறாமல் போகலாம். தற்போதுள்ள விலக்கு முறையை ஆய்வு செய்யும் ஒரு உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த முன்மொழிவு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விலக்கு அளிக்கப்பட்ட பிரிவை நீக்குவதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளை திருத்த வேண்டும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு ஒரு உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால், உடனடியான பெரிய மாற்றத்தை தவிர்ப்பதற்காக, இதுவரை கட்டணம் இல்லாமல் டோல் கேட்களை கடந்த வாகனங்களுக்கான அனுமதி ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்படும். இது இறுதியில், கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை முற்றிலுமாக குறைக்கும்.
யாருக்கு சுங்க கட்டண விலக்கு கிடைக்காது? அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், விலக்கு அளிக்கப்பட்ட வாகன பட்டியலிலிருந்து முதலில் நீக்கப்படும் பிரிவாக இருக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், குடிமக்களுக்கு பிரச்சினையாக கருதப்படும் விஐபி கலாச்சாரத்தையும் இந்த நடவடிக்கை கட்டுப்படுத்தும்.
இதோடு சேர்த்து - சுங்கக் கட்டண விலக்கு கோருவதற்கு பதிலாக ஃபாஸ்டேக் ஆண்டு பாஸை (FASTag Annual Pass) பயன்படுத்துமாறு பல்வேறு துறைகளையும், மாநில அரசுகளையும் (departments and state governments) ஊக்குவிக்கும் முயற்சிகளையும் இந்திய அரசாங்கம் ஏற்கனவே தொடங்கி உள்ளது.
ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ்: பாஸ்டேக் ஆண்டு பாஸ் என்பது ஒரு முன்கூட்டியே செலுத்தப்பட்ட சுங்கக் கட்டணத் திட்டமாகும். இது பயனரின் 1 வருட பயணத்தையோ அல்லது நாடு முழுவதும் 200 சுங்கச்சாவடி கடப்புகளையோ உள்ளடக்கியது. இதன் விலை ரூ.3,075 ஆகும். சமீபத்தில், இதன் முந்தைய கட்டணமான ரூ.3,000 இல் இருந்து ரூ.75 கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள்: தற்போது, 25 பொது பதவிகளில் உள்ள நபர்களை ஏற்றி செல்லும் மற்றும் அவர்களுடன் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும், சீருடை அணிந்த பாதுகாப்பு படையினர், மத்திய மற்றும் மாநில ஆயுதப் படைகள், துணை ராணுவக் குழுக்கள், நிர்வாக நீதிபதிகள், தீயணைப்புத் துறைகள், நெடுஞ்சாலை ஆய்வு குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் இறுதி ஊர்வல வாகனங்கள் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக நியமிக்கப்பட்ட வாகனங்களுக்கும் சுங்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் எல்லாமே, சுங்கச்சாவடிகளில் வாகனங்களை ஸ்கேன் செய்ய செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தும், வரவிருக்கும் பலவழி தடையற்ற போக்குவரத்து அமைப்பின் (Multi-Lane Free Flow System) ஒரு பகுதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு சுருக்கமாக எம்எல்எப்எப் சிஸ்டம் (MLFF System) என்றும் அழைக்கப்படுகிறது.
தடையற்ற சுங்க கட்டணம் என்றால் என்ன? பிஸிக்கல் தடைகளை கொண்ட வழக்கமான சுங்கச்சாவடிகளை போலல்லாமல், இந்த அமைப்பானது சென்சார்கள் மற்றும் கேமராக்கள் (sensors and cameras) பொருத்தப்பட்ட மேல்நிலை சட்டகங்களை (overhead frames) பயன்படுத்தி, வாகனங்களை தானாகவே அடையாளம் கண்டு, நிகழ்நேரத்தில் சுங்க கட்டணங்களை கழிக்கிறது. அதாவது மல்டி-லேன் ப்ரீ ப்ளோ (Multi-Lane Free Flow) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட தடையற்ற சுங்க கட்டண முறையானது, வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்பதை முற்றிலுமாக தவிர்க்க உள்ளது.


Click it and Unblock the Notifications