பிப்ரவரி 15 முதல் புதிய விதிமுறை.. சுங்கச் சாவடிகளில் இனி கட்டணம் குறையும்.. காரணம் என்ன? இதோ விவரம்..
இந்தியாவில் வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. குறிப்பாக இந்த புதிய விதிமுறையைத் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. காரணம் என்னவென்றால், இந்த புதிய விதிமுறை மூலம் உங்களுக்கான சுங்க கட்டணம் கணிசமான அளவு குறைய உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது நீங்கள் ஒரு விரைவு சாலை அல்லது எக்ஸ்பிரஸ்வேக்களில் பயணம் செய்கிறீர்கள் என்றால் அந்த சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், பாதி கட்டுமானம் முடிந்திருக்கிறது என்றாலும் அல்லது பாதி கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் அந்த முழு சாலைக்குமான சுங்க கட்டணத்தை நீங்கள் செலுத்தத் தேவையில்லை குறைந்தபட்ச சுங்க கட்டணத்தை மட்டுமே இனி வசூல் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 15-ம் (February 15) தேதியில் இருந்து இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும். தேசிய நெடுஞ்சாலை கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல் 2008 விதிகளை இதற்காக மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. அதுவும் இந்த புதிய விதிமுறையின் கீழ் ஒரு தேசிய விரைவு சாலை தொடக்கத்தில் இருந்து இறுதிவரை முழுமையாகத் திறக்கப்படாமல் இருக்கிறது என்ற நிலையில் பகுதி அளவு சுங்க கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.
தற்போது வரை பல இடங்களில் முழு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. குறிப்பாக இது வாகன ஓட்டிகளுக்குப் பெரிய அளவில் சுமையை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும். ஆனால் விரைவில் வர உள்ள புதிய விதிமுறை அனைவருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.
அதேபோல் இந்த புதிய விதிமுறை வர உள்ளதால் விரைவு சாலையின் செயல்பாட்டுப் பகுதிகளைப் பயன்படுத்த அதிகமான வாகன ஓட்டிகள் முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த விரைவு சாலைகளை நோக்கி திரும்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
தற்போது பல இடங்களில் விரைவு சாலைகள் இன்னும் பணி முடிந்து பயன்பாட்டுக்கே வராத சூழலிலும் சுங்க கட்டணத்தை முழுமையாக வசூல் செய்கின்றனர். இந்த புதிய விதிமுறை அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஆகவே விரைவுசாலை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வராத போது அதை நீங்கள் பயன்படுத்தி பயணம் செய்தால் முன்பை விட 25 சதவீதம் குறைவாகக் கட்டணம் செலுத்தினால் போதும்.
ஃபாஸ்டாக் புதிய விதிமுறை
மேலும் கடந்த பிப்ரவரி 1 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான புதிய ஃபாஸ்டாக்குகளுக்கு ' Know Your Vehicle' (KYV) சரிபார்ப்பு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஃபாஸ்டாக் பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் எந்தவித தாமதங்கள் இருக்காது. ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கும் சிரமங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் புகார்கள் குறைக்கப்படும்.

முன்பு இந்த சரிபார்ப்புக்கு RC ஆவணத்தைப் பதிவேற்றம் செய்வது, புகைப்படங்களை அனுப்புவது மற்றும் ஏற்கனவே சரியான ஆவணங்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் சரிபார்ப்பது போன்ற தேவை இருந்தது. இதனால் ஃபாஸ்டாக் செயல்படுத்துவதில் தாமதமும் அதிக சிரமமும் ஏற்பட்டது. ஆனால் இனிமேல் இந்த சரிபார்ப்பு பொறுப்பு வங்கிகளிடம் ஒப்படைக்கப்படும். ஃபாஸ்டாக் வழங்குவதற்கு முன்பே வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வங்கிகளே சரிபார்க்கும்.
ஏற்கனவே ஃபாஸ்டாக் வைத்திருப்பவர்கள் இனி வழக்கமான KYV செய்யத் தேவையில்லை. ஒருவேளை ஃபாஸ்டாக் தவறான வாகனத்துடன் இணைக்கப்பட்டாலோ, தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது முறையற்ற முறையில் வழங்கப்பட்டாலோ புகார்கள் எழும்போது மட்டுமே மீண்டும் சரிபார்ப்பு தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








