Sanchar Saathi கதை முடிந்தது.. உளவு பார்ப்பது முதல் மொபைல்களில் கட்டாயம் வரை.. இந்திய அரசு எடுத்த முடிவு!
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய ஸ்மார்ட்போன்களில் கட்டாயமாக சஞ்சார் சாத்தி செயலியை (Sanchar Saathi App) ப்ரீ-இன்ஸ்டாலேஷன் செய்ய வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, மக்கள் உளவு பார்க்கப்படுவார்களா, தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படுமா என்று பல்வேறு கதைகள் எழுந்தன. இந்த கதைகளுக்கு இந்திய அரசு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்திய அரசின் கட்டப்பாட்டில் இருக்கும் சஞ்சார் சாத்தி ஆப் ஆனது ஐஎம்இஐ (IMEI) நம்பர் மூலமாக தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவுகிறது. இதுபோக அந்த ஸ்மார்ட்போனை பிளாக் செய்யும் அதிகாரத்தையும் கொடுக்கிறது. இதேபோல ஐஎம்இஐ வெரிபிகேஷன் செய்தல், ஸ்பேம் கால்கள் குறித்து புகார் அளித்தல் செய்யப்படுகிறது.

ஆனால், இது ஸ்மார்ட்போன் பயனர்களின் விருப்பத்தின் பேரிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் தொலைந்தால், இந்த ஆப் வழியாக கண்டுபிடித்துவிடலாம் என்பதால், பயனர்கள் அதை இன்ஸ்டால் செய்து வைக்கின்றனர். ஆனால், இதை ப்ரீ-இன்ஸ்டால் செய்யுமாறு இந்திய அரசு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இதை 90 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்றும் காலக்கெடு கொடுத்தது. ஆகவே, புதிய ஸ்மார்ட்போன்களில் இந்த செயலி கட்டாயமாக இன்ஸ்டால் செய்யப்பட்டால், அதை நீக்க முடியாது, அதை வைத்து குடிமக்களை கண்காணிக்க அரசு இதை செய்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இதற்கு, அரசு தரப்பில் இருந்து அந்த செயலியை நீக்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரீ-இன்ஸ்டாலேஷன் உத்தரவு அப்படியே இருந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் தகவல் தொடர்பு அமைச்சகம் முக்கிய முடிவை அறிவித்துள்ளது. சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயம் ப்ரீ-இன்ஸ்டாலேஷன் செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. கூடவே, சிலவற்றை தெளிவுப்படுத்தியும் இருக்கிறது.
அனைத்து குடிமக்களுக்கும் சைபர் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை ப்ரீ-இன்ஸ்டாலேஷன் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் சைபர் உலகின் தீய நோக்கங்களில் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் பயனர்களை பாதுகாப்பதன் மூலம் இதுபோன்ற தீய செயல்கள் மற்றும் அந்த செயல்கள் குறித்து அனைத்து குடிமக்களும் புகாரளிப்பதில் ஜன் பாகீதாரி (குடிமக்களின் பங்களிப்பு) ஆக இருக்க இது உதவுகிறது. இந்த செயலியில் பயனர்களை பாதுகாப்பதை தவிர வேறு எந்த செயல்பாடும் கிடையாது. மேலும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் செயலியை நீக்கலாம்.
இது அரசாங்கத்தால் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஒரு நாளைக்கு 2000 மோசடி சம்பவங்கள் குறித்த புகார் அளிக்கப்பட்டு வருகிறது. பயனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த செயலியை இன்ஸ்டால் செய்வதை கட்டாயமாக்குவதன் மூலமாக செயல்முறையை விரைவுபடுத்தல்,
விழிப்புணர்வு சென்றடையாத குடிமக்களுக்கு எளிதாக செயலியை கிடைக்க செய்தல் மட்டுமே நோக்கமாக இருந்தது. கடந்த ஒரு நாளில், 6 லட்சம் குடிமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய லாகின் செய்துள்ளனர். இது அந்த செயலியின் பயன்பாட்டில் 10 மடங்கு அதிகரிப்பாகும். குடிமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது.
ஆகவே, சஞ்சார் சாத்திக்கு அதிகரித்து வரும் வரவேற்பு காரணமாக, மொபைல் உற்பத்தியாளர்களுக்கு ப்ரீ-இன்ஸ்டாலேஷனை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தரப்பில் இருக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இதை கட்டாயமாக கொடுக்க வேண்டிய அவசியம் இனிமேல் கிடையாது.


Click it and Unblock the Notifications








