LPG சிலிண்டர் புக்கிங் ரூல்ஸ் மாறிடுச்சு.. ஜூன் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்? இதோ முழு விவரம்..
ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் புதிய விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் நடைமுறைக்கு வருவது வழக்கம். அதேபோல் வருகிற 1-ஆம் தேதி முதல் அதாவது ஜூன் மாத தொடக்கம் முதல் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
டெலிவரி ஓடிபி மிகவும் அவசியம்: பொதுவாக நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது DAC எனப்படும் delivery authentication code என்ற டெலிவரி அங்கீகாரக் குறியீடு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபியாக வரும். அதை சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அந்த ஓடிபி-ஐ பகிர்ந்தால் மட்டுமே உங்கள் கைக்கு சிலிண்டர் வரும்.

இது முறையான வாடிக்கையாளர்களுக்குச் சென்று சேர்கிறது என்பதை உறுதிப்படுத்த கொண்டுவரப்பட்ட ஒரு நடைமுறை ஆகும். ஆகவே சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரக்கூடிய எஸ்எம்எஸ்-ஐ சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிலிண்டர் விநியோகத்தின் போது மட்டுமே இந்த ஓடிபி தரப்பட வேண்டும். ஒருவேளை யாரவது போன் கால் அல்லது வாட்ஸ்அப் கால் மூலம் இந்த ஓடிபி கேட்டால் பகிர கூடாது. சிலிண்டர் டெலிவரி செய்யும் சமயத்தில் மட்டுமே இந்த ஓடிபி-ஐ பகிர வேண்டும்.
மானியம் கிடைக்காது: ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இனி எல்பிஜி சிலிண்டர் மானியம் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை ஆய்வு செய்து அதில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தும் எல்ஜிபி சிலிண்டருக்கான மானியத்தை பெறுவோருக்கு அது ரத்து செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சிலிண்டர் விநியோக நிறுவனங்களே வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றன.
குறிப்பாக ஒரு கட்டத்தில் 300 ரூபாயாக இருந்த மானியம் தற்போது மிகவும் குறைந்த அளவாக மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மானியம் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு வருமான அடிப்படையிலான கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. அதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், அந்த குடும்பத்திற்கு எல்பிஜி மானியம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக சிலிண்டர் புக் செய்ய முடியாது: எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால், சிலிண்டர் புக்கிங் விதிகளிலும் அரசு மாற்றம் செய்துள்ளது. அதாவது நகரங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் ஒருமுறைதான் ரீஃபில் செய்ய முடியும். இந்த விதியால், இனிமேல் வேகமாக சிலிண்டர் புக் செய்ய முடியாது.
எல்பிஜி மற்றும் பிஎன்ஜி புதிய விதிகள்: தற்போது வீடுகளில் எல்பிஜி (LPG) சிலிண்டருக்கு பிறகு தற்போது குழாய்வழி எரிவாயு (PNG) இணைப்பைப் பெறும் நுகர்வோருக்கு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய விதிகளின் கீழ், ஒரு வீட்டு உபயோக நுகர்வோர் பிஎன்ஜி எரிவாயு இணைப்பைப் பெற்றால், அவருக்கு இப்போது பின்வரும் இரண்டு தேர்வுகள் உள்ளன.
1. பிஎன்ஜி இணைப்பு செயல்படுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய எல்ஜிபி இணைப்பை முழுமையாக மூடுவதற்கு எரிவாயு முகமையிடம் விண்ணப்பிக்கலாம்.
2.ஒருவேளை வாடிக்கையாளர் எல்பிஜி இணைப்பை துண்டிக்க விரும்பவில்லை என்றால், அவர் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு சிறப்பு மாற்றுச் சீட்டை (transfer voucher) பெறலாம். இந்தச் சீட்டு எதிர்காலத்தில் அவர்களின் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறுவதை எளிதாக்கும்.
மாற்றுச் சீட்டு (transfer voucher) பயன்கள்: நகரங்களில் இருக்கும் மக்கள் பிஎன்ஜி இணைப்பைப் பெறும்போது அவர்கள் தங்களது பழைய எல்பிஜி சிலிண்டரை ஒப்படைப்பார்கள். ஆனாலும் அவர்கள் ஒரு சிறிய நகரம், ஊர் அல்லது பிஎன்ஜி குழாய்கள் இல்லாத பகுதிக்கு மாறும்போது ஒரு புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு நீண்ட ஆவணப் பணிகளையும் கணிசமான செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.
ஆகவே அரசின் புதிய மாற்றுச் சீட்டு விதி இந்த சிரமத்தை நிரந்தரமாக நீக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த சீட்டை காண்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி இல்லாத பகுதிகளில் தங்களது எல்பிஜி இணைப்பை அதிக சிரமம் இல்லாமல் உடனே மீண்டும் செயல்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு (LPG), வணிக எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். கடந்த மாதம் கமர்சியல் எரிவாயு சிலிண்டர் விலையில் ஏற்பட்ட உயர்வு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விலை உயர்வின் காரணமாக ஒரு கமர்சியல் சிலிண்டரின் விலை ரூ.3,000-ஐ தாண்டியது. இதற்கு மாறாக, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், இல்லத்தரசிகள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.
குறிப்பாக ஜூன் மாத தொடக்கத்தில் எரிவாயு சிலிண்டர் விலைகளில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக கமர்சியல் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை உயருமா, குறையுமா அல்லது தற்போதைய நிலையிலேயே தொடருமா என்பது குறித்துத் தெரிந்துகொள்ள அனைவரும் கவனமாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications