இலவச லேப்டாப்புக்கு ஆசை பட்டா தப்பா? பெரிய மோசடி நடக்குது! உண்மையை தெரிஞ்சுகோங்க!
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களும், 12ஆம் வகுப்பை தொடங்கிய மாணவர்களும் எப்போது, இலவச மடிக்கணினி திட்டம் (Free Laptop Scheme) மீண்டும் தொடங்கப்படும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில், ஆன்லைனில் இலவச மடிக்கணினிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்படுகின்றன. இது உண்மையா? பொய்யா? என்ற விவரங்கள் இதோ.
இந்தியாவில் அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா பொருட்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்புள்ளது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், மக்களுக்கு விலையில்லா பொருள்கள் மீதான மோகம் குறைந்தபாடில்லை. இதனைப் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சியையே பிடிக்கின்றன. இந்த வரிசையில், இலவச மடிக்கணினி (Laptop) திட்டம் மிகவும் பிரபலமானது.

பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு வரையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாததால், மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான செய்திகள் மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே சென்றுவிடுகின்றன. ஏன்? நாள்தோறும் இலவச மடிக்கணினி திட்டம் குறித்து கூகுளில் தேடும் லட்சக்கணக்கான மாணவர்களும் இங்கு உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சைபர் கிரைம் கும்பல்கள் பல்வேறு மோசடி திட்டங்களை கையில் எடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் 2023-24 (Pradhan Mantri Free Laptop Scheme 2023) கீழ் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் கிளம்பி, சமூக வலைதளங்களில் தீயாய் தகவல்கள் பரவி வருகிறது.
பல மாணவர்கள் கூகுளில் (Google) விண்ணப்பம் செய்ய முயற்சித்து, மோசடி கும்பல்களின் வெப்சைட்டில் தனிப்பட்ட தகவல்களை பதிவேற்றி வருகின்றனர். இதனால், முன்பணம் செலுத்துமாறு, அந்த கும்பல் தெரிவித்து பணம் பறிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இதுபெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மத்திய அரசு, நேரடியாக களத்தில் இறங்கி போலி வெப்சைட்டை முடக்கும் பணியில் ஈடுபட்டது. அதன்பின் மக்களுக்கு விளக்கம் அளித்தது. இதுபோன்ற திட்டம் செயல்பாட்டில் இல்லை.
மாணவர்களும், மக்களும் போலியான செய்திகளை உடனே நம்ப வேண்டாம். அதன் உண்மை தன்மை குறித்து அறிந்துகொள்ளுங்கள். அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்களில் வெளியாகும் அறிவிப்புகளை பாருங்கள் என அறிவுறுத்தியது. அதேபோல www.pmflsgovt.in என்ற போலியான வெப்சைட் மூலம் மோசடி கும்பல் ஏமாற்றிவருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆகவே, இந்த வெப்சைட்டில் யாரும் விண்ணப்பம் செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை எளிதில் நம்பிவிட வேண்டாம். இதுபோன்ற தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications