இனி ஹெட்போன் போதும்.. கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் வந்தது புதிய அம்சம்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
கூகுள் (Google) நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ஹெட்போன்கள் மூலம் ஒரு மிகப் பெரிய வசதி மக்களுக்கு கிடைக்க உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது நமக்கு தெரியாத வேற்று மொழி பேசும் நபர்களுடன் உரையாடுவது மற்றும் வெளிநாட்டுச் செய்திகளைப் புரிந்துகொள்வது இனி மிகவும் எளிதாகப்போகிறது. அதாவது கூகுள் டிரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் ஒரு முக்கிய புதிய அம்சம் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் ஹெட்போன்கள் வழியாகவே நிகழ்நேர (Real-time) மொழிபெயர்ப்பைக் கேட்க முடியும். குறிப்பாக இந்த அப்டேட், ஆண்ட்ராய்டு போன்களுக்கான பீட்டா கட்டத்தில் டிசம்பர் 12 அன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கூகுள் நிறுவனம் ஜெமினி ஏஐ (Gemini AI) தொழில்நுட்பம் உதவியுடன் இந்த புதிய வசதியை உருவாக்கியது. அதுவும் இது சாதாரண ஹெட்போன்களை கூட ஒரு மொழிபெயர்ப்பு கருவியாக மாற்றும். நீங்கள் வயர் மற்றும் வயர்லெஸ் ஹெட்போன்களை பயன்படுத்தினாலும் இந்த அம்சம் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் கூகுள் டிரான்ஸ்லேட் வசதியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அம்சம் 70-க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கிறது எனலும். இதன் மூலம் வெளிநாட்டு உரையாடல்கள், சொற்பொழிவுகள் அல்லது மீடியாக்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் கொண்டுவரும் இந்த டிரான்ஸ்லேட் அம்சத்தில் ரோபோட்டிக் குரல் போன்று இல்லாமல் பேசுபவரின் தொனி (Tone), அழுத்தம் மற்றும் வேகத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே யார் பேசுகிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த வசதி பீட்டா கட்டத்தில் இருப்பதால் தற்போது அமெரிக்கா, இந்தியா, மெக்சிகோவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2026-ம் ஆண்டு ஐபோன் (ஐஓஎஸ்) பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெட்போன் மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்துவது எப்படி?
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் Google Translate செயலியைத் திறக்கவும். அதன்பின்பு உங்களது ஹெட்போனை போன் உடன் இணைக்கவும். இப்போது செயலியில் இருக்கும் Live translate (லைவ் டிரான்ஸ்லேட்) எனும் ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதன்பின்பு எந்த மொழியில் இருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்பத தேர்வு செய்யவும். அவ்வளவு தான், இப்போது நீங்கள் கேட்பது தானாகவே உங்கள் ஹெட்போனில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் இந்த மொழிபெயர்ப்பு சேவையில் மேம்பட்ட ஜெமினி ஏஐ திறன்கள் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல், இடத்திற்கு ஏற்றார் போல் இயற்கையான மற்றும் சரளமான மொழிபெயர்ப்பை இந்த புதிய அம்சம் வழங்கும். இதுதவிர வட்டார வழக்குகள் மற்றும் மரபுத் தொடர்களை இது துல்லியமாக மொழிபெயர்க்கும் என்று கூறப்படுகிறது.
கூகுள் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதியில் மொழிபெயர்ப்பை தாண்டி, புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான கருவிகளையும் கூகுள் விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக இந்த வசதி இந்தியா உட்பட 20 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை எளிமையாகப் பேச கற்றுக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








