Google கணக்குகளுக்கு புதிய பாதுகாப்பு.. Password மறந்தாலும் கவலை வேண்டாம்.. இனி செல்பி வீடியோ போதும்..
கூகுள் (Google) நிறுவனம் கொண்டுவரும் புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் கூகுள் கணக்குகளைப் பாதுகாப்பாக அணுக ஒரு புதிய செல்பி வீடியோ அங்கீகார முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாஸ்வேர்டுகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும்.
அதாவது கூகுள் நிறுவனம் இப்போது கூகுள் கணக்குகளைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இப்போது புதிய செல்பி வீடியோ சைன்-இன் (Selfie Video Sign-In) முறையை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த அம்சம் பயனர்கள் தங்கள் கணக்கை மீட்டெடுக்க (Account Recovery) உதவும் ஒரு முக்கிய கருவியாக செயல்படும்.

அதுவும் இந்த புதிய அம்சம், பயனர்கள் தங்களது கணக்கிலிருந்து வெளியேறியிருந்தால் அல்லது வழக்கமாகப் பயன்படுத்தும் மொபைல் போன் அல்லது கணினியை அணுக முடியாத சூழ்நிலையில், வேறொரு சாதனத்தில் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி மீண்டும் கணக்கை அணுக உதவுகிறது.
இது எப்படி வேலை செய்யும்?
இந்த புதிய பாதுகாப்பு முறையில், பயனர்கள் தங்களது சாதனத்தின் கேமராவைப் பயன்படுத்தி ஒரு குறுகிய செல்பி வீடியோவை பதிவு செய்ய வேண்டும். அதுவும் இதில் குறிப்பிட்ட சில அசைவுகளை (Head Movements) செய்யவும் அறிவுறுத்தப்படுவார்கள். மேலும் இந்த வீடியோ, அவர்களின் முக அங்கீகாரத்தையும் (Facial Recognition), வீடியோவின் நம்பகத்தன்மையையும் (Liveness Detection) உறுதிப்படுத்தும். குறிப்பாக இதன் மூலம் கணக்கு திருடப்படுவதைத் தடுக்க முடியும். ஒருவேளை தொலைந்த அல்லது திருடப்பட்ட சாதனங்களில் இருந்து கூகுள் கணக்கை அணுகுவதற்கு இது ஒரு மாற்று வழியாகப் பயன்படும்.
குறிப்பாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக்கு கூகுள் நிறுவனம் முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்படும் வீடியோக்கள், Google கணக்கின் பாதுகாப்பு மற்றும் அடையாள உறுதிப்படுத்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதுவும் பயனர்கள் எந்த நேரத்திலும் தங்கள் பயோமெட்ரிக் தரவை (Biometric Data) நீக்கிக்கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் தொழில்நுட்பங்கள், தற்போதைய டிஜிட்டல் உலகில் ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகின்றன. பாஸ்வேர்டுகளை மட்டுமே நம்பியிருக்காமல், தற்போது மேம்பட்ட பாதுகாப்பு முறைகளை நோக்கி தொழில்நுட்ப நிறுவனங்கள் நகர்கின்றன.
இந்த செல்பி வீடியோ சரிபார்ப்பு அம்சம், கடவுச்சொல் (Password), இரு காரணி அங்கீகாரம் (Two-Factor Authentication - 2FA), பாஸ்கீ (Passkeys) போன்ற தற்போது உள்ள பாதுகாப்பு முறைகளுடன் இணைந்து கூடுதல் பாதுகாப்பு அடுக்கை வழங்குகிறது. இதன் மூலம், அங்கீகரிக்கப்படாத நபர்கள் கணக்கை அணுகும் வாய்ப்பு மேலும் குறைக்கப்படுவதுடன், பயனர்கள் தங்களது Google கணக்கை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் வசதியையும் பெறுகின்றனர்.

எதிர்காலத்தில் Google கணக்கு மீட்டெடுப்பு செயல்முறைகளை எளிமையாகவும், வேகமாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதில் இந்த அம்சம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயோமெட்ரிக் அடையாள உறுதிப்படுத்தல் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தும் Google-ன் இந்த முயற்சி, டிஜிட்டல் பாதுகாப்பின் அடுத்த கட்ட முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், பயனர்களுக்கு அதிக பாதுகாப்புடன் கூடிய சிரமமில்லா உள்நுழைவு மற்றும் கணக்கு மீட்பு அனுபவம் கிடைக்கும்.
கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது செல்பி வீடியோ சைன்-இன் அம்சம் தற்போது அனைத்து பயனர்களுக்கு வழங்கப்படவில்லை. அதாவது இந்த அம்சம் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள சில பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. பயனர்கள் g.co/signin-selfie வழியாக இந்த அம்சம் கிடைக்குமா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
photo credits: cybersecuritynews, google, fonearena


Click it and Unblock the Notifications