Gpay யூஸ் செய்தால் இனி கட்டணமா? என்ன செய்தால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
டெபிட் கார்ட் (Debit card), க்ரெட் கார்ட் (Credit card) போன்றவை பயன்பாட்டிற்கு வந்த பின்னர் மக்கள் மற்றும் வியாபரிகளுக்கு இடையில் பணப்பரிவர்த்தனைகள் மிகவும் எளிமையானது என்றே கூறலாம். ஆனால், இப்போது நிலைமை இதை விட சுலபமானதாக மாறிவிட்டது.
ஆரம்ப காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுக்கவும், பரிவர்த்தனை செய்யவும் அனுமதிக்கப்பட்ட போது இந்த சேவைகள் நல்ல வரவேற்பை பெற்றது. சேவை கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதன் பயன்பாடு குறைந்து பணப்புலக்கம் மீண்டும் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.

இந்நிலையில் யூனிஃபைய்டு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) என்று கூறப்படும் UPI பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் பணப்புலக்கம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை உச்சம் தொட ஆரம்பித்தது. இன்றைய சூழ்நிலையில் சின்ன பெட்டிக் கடை முதல் பெரிய பெரிய வணிகம் வரை மொத்த உலகையும் தனது கட்டுக்குள் வைத்து UPI ஆட்சி செய்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.
UPI மூலமாக அதிகரித்த டிஜிட்டல் பரிவர்த்தனை (UPI Digital Transactions):
இது மட்டுமின்றி, அத்தியாவசிய கட்டணங்களான மின்கட்டணம், கேஸ் கட்டணம், போன் ரீச்சார்ஜ் என்று அனைத்தையும் UPI மூலமாகவே செய்யும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனை முன்னேற்றம் கண்டுள்ளது.
UPI பரிவர்த்தனைகளின் மகத்துவத்தை உணர்ந்த புகழ் பெற்ற கூகுள் (Google) நிறுவனமே பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) போன்ற தளங்களுக்கு இணையாக தனக்கான பிரத்தியேக UPI தளமான கூகுள் பே-ஐ (Google Pay) ஆரம்பித்தது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்மார்ட் போனை மட்டுமே வைத்துக்கொண்டு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் மக்கள் தைரியமாக நடமாடும் அளவிற்கு பணப்பரிவர்த்தனைகளை கூகுள் பே எளிமையாக்கியுள்ளது. டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகளைப் போலவே ஆரம்பத்தில் இலசமாக சேவை கட்டணமின்றி வழங்கப்பட்டு வந்த UPI சேவைகளை சமீபகாலமாக சில தளங்கள் குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து வழங்க ஆரம்பித்தது.
சேவைக் கட்டணம் கட்டாயம் இனி வசூலிக்கப்படுமா?
இப்போது வரை சேவைக் கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக பரிவர்த்தனைகள் வழங்கி வந்ததால் மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் UPI தளமாக கூகுள் பே திகழ்ந்தது. இந்நிலையில் இப்போது கூகுள் பே-யும் மற்ற தளங்கள் வரிசையில் இணைந்து சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக செய்திகள் வளம் வருகிறது.
கூகிள் பே கன்வீனியன்ஸ் ஃபீஸ் (Google Pay Convenience fees):
இதனை உறுதி செய்யும் வகையில் ஜியோ பயனாளர் ஒருவர் தான் தனது மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்யும்போது கூடுதல் தொகை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ஸ்க்ரீன் ஷாட் (Screen shot) ஒன்றை இணையதள பக்கம் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவருடைய பதிவில், தான் தனது ஜியோ நம்பருக்கு ரூ. 749க்கு ரீசார்ஜ் செய்யும்போது கூடுதலாக மூன்று ரூபாய் கன்வீனியன்ஸ் ஃபீ-யாக (Convenience fee) வசூலிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கன்வீனியன்ஸ் ஃபீயில் ஜிஎஸ்டி-யும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த கூடுதல் தகவல்களை டிப்ஸ்டர் (Tipster) முகுல் ஷர்மா தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருடைய பதிவில், 100 ரூபாய்க்கும் குறைவான மொபைல் ரீசார்ஜ்களுக்கு எந்த விதமான கன்வீனியன்ஸ் கட்டணமும் வசூலிக்கப்படாது.
என்ன செய்தால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? அதிக கட்டணம் எவ்வளவு?
ஆனால், 200 ரூபாய் வரையுள்ள ரீசார்ஜ் ப்ளான்களுக்கு 2 ரூபாயும், ரூபாய் 300 மற்றும் அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் ப்ளான்களுக்கு 3 ரூபாயும் கன்வீனியன்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அதன் திருத்தப்பட்ட் கூகுள் டெர்ம்ஸ் ஆஃப் சர்வீஸ் ஃபார் யூசர்ஸ் (Google Terms of Services for Users) ஆவணத்தில் இந்த கட்டண மாற்றம் குறித்து தெரிவித்துள்ளதாக மை ஸ்மார்ட் ப்ரைஸ் (MySmartPrice) கண்டறிந்துள்ளது.
ஆனால் இந்த கட்டணம் மொபைல் ரீச்சாஜ் போன்ற சில சேவைகளுக்கு மட்டுமே தற்போது பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை கூகுள் நிறுவனம் வெளியிடப்பட்டதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களின் பிரத்தியேக தளங்களில் சென்று நேரடியாக ரீசார்ஜ் செய்யும்போது இத்தகைய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லையாம். இனி ரீசார்ஜ் செய்ய விம்புவோர் UPI தளங்கள் மூலம் ரீசார்ஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.


Click it and Unblock the Notifications