இனிமே Google Pay யூஸ் பண்ண ஆதார் கார்டு வேணுமாம்! வேற வழி இருக்கா?
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் கூகுள் பே (Google Pay) ஆப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கூகுள் பே ஆப் வைத்திருந்தால் கூடவே ஆதார் கார்டு (Aadhaar Card) நம்பரையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.
நாடு முழுவதும் யுபிஐ பேமெண்ட் (UPI Payment) சேவை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் யுபிஐ பேமெண்ட் சேவை சென்றடைந்துள்ளது. சொல்லப்போனால், சாலையோர கடைகள் முதல் மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரையில் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடிகிறது.

ஏடிஎம் (ATM) எங்கே என்று அலைய வேண்டியது, கிடையாது. அதேபோல சில்லறை கிடைக்காமல் தவிக்க வேண்டியாது கிடையாது. இப்படி பல நன்மைகள் இருப்பதால், நாளுக்கு நாள் யுபிஐ பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கூகுள் பே, போன் பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்களும் அசூர வளர்ச்சியை எட்டி வருகிறது.
இதில் கூகுள் பே ஆப்பை மட்டுமே அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற பேமெண்ட் ஆப்களை விட கூகுள் பே மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவருகிறது. இதனால், கூகுள் பேவில் கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு கட்டுப்பட வேண்டிய சூழல் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பொதுவாக கூகுள் பே ஆப்பை பயன்படுத்த வங்கிக்கணக்குடன் அப்டேட் செய்யப்பட்ட மொபைல் எண் மிகவும் அவசியமாகும்.
இந்த எண்ணை பயன்படுத்தி ஓடிபி பெற்று உங்களது வங்கி கணக்கையும் கூகுள் பே ஆப்பையும் இணைந்துக்கொள்ள முடியும். ஆனால், அதன்பின் பணப் பரிவர்த்தனைகளை செய்ய வெரிபிகேஷன் செய்வது மிகவும் முக்கியமாகும். அதாவது, கூகுள் பே அக்கவுண்ட் உடன் உங்களது டெபிட் கார்டினை இணைக்க வேண்டும். இதற்காக டெபிட் கார்டின் கடைசி 6 இலக்க நம்பர், எக்ஸ்பெய்ரி நம்பர் இரண்டையும் கொடுக்க வேண்டும்.
இறுதியாக அந்த டெபிட் கார்ட்டின் பின் (PIN) நம்பரை உள்ளீடு செய்தால், வெரிபிகேஷன் முடிந்துவிடும். இப்போது நீங்கள் பணப் பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும். ஆகவே, வெரிபிகேஷனுக்கு டெபிட் கார்டு மிகவும் அவசியம் என்பது புலனாகிறது. ஆனால், இப்போது கூகுள் பே ஆப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றம் மூலம் ஆதார் கார்டை பயன்படுத்தி வெரிபிகேஷன் செய்துகொள்ள முடியும்.
அதாவது, நீங்கள் டெபிட் கார்டின் 6 இலக்க எண்ணை கொடுப்பதற்கு பதிலாக ஆதார் கார்டின் முதல் 6 இலக்க எண்ணை கொடுத்தால், நீங்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்துள்ள நம்பருக்கு ஓடிபி வரும், இதனை பயன்படுத்தி வெரிபிகேஷன் செய்துகொள்ளலாம். ஆனால், உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதற்காக கூகுள் பே நிறுவனம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உடன் கைகோர்த்துள்ளது. இந்த புதிய மாற்றம் மூலம் டெபிட் கார்டு இல்லாமலேயே கூகுள் பே ஆப்பை வங்கி கணக்குடன் இணைத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். டெபிட் கார்டு வெரிபிகேஷனும் வழக்கம்போல பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாளடைவில் ஆதார் வெரிபிகேஷன் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








