Paytm-ஐ தொடர்ந்து Google Pay, PhonePe-க்கு சங்கு..? மோடி அரசின் ரகசிய ஸ்கெட்ச்.. புதிய திட்டம் பரிசீலனை!
பேடிஎம் (Paytm) சேவைகள் மீதான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு அவைகள் பிப்.29 முதல் அமலுக்கு வரும் என்று ஆர்பிஐ அறிவித்திருந்தது. பின்னர் இதற்கான கெடு நாள் மார்ச் 15-க்கு நகர்த்தப்பட்டு, குறிப்பிட்ட தேதிக்குள் பேடிஎம் பயனர்கள் தேவையானவற்றை செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் யுபிஐ கட்டண சந்தையில் கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) ஆகிய இரண்டு அமெரிக்க நிறுவனங்களின் அதீத ஆதிக்கத்தை தடுக்க இந்திய அரசாங்கம் புதிய உத்திகளை மற்றும் திட்டங்களை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களும் யுபிஐ கட்டண சந்தை (UPI payment market) பங்கில் சுமார் 80 சதவீதத்தை தன்வசம் வைத்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

குறிப்பாக பேடிஎம் சேவைகள் மீதான தடையை தொடர்ந்து, யுபிஐ சந்தையில் டூயாபோலி (Duopoly) உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அறியாதோர்களுக்கு.. ஒரு குறிப்பிட்ட சந்தையில் இரண்டு சப்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருக்கிறார்கள் என்றால்.. அந்த சூழ்நிலையாது டூயாபோலி என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 10 பில்லியனுக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions) நடைபெறுவதால், 2 அமெரிக்க நிறுவனங்களானது யுபிஐ சந்தையை பிரத்தியேகமாக கட்டுப்படுத்தப்படுவதை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை; இந்த டூயாபோலி சூழ்நிலையை தடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் விரும்புகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்க, யூபிஐ கட்டண சேவைகளில் 30 சதவீத கேப்பிங் முறையை (30 percent capping system) செயல்படுத்தும் புதிய திட்டத்தை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஒரு யுபிஐ கட்டண சேவையின் சந்தை பங்கை 30 சதவீதமாக கட்டுப்படுத்துவதன் மூலம் போன்பே மற்றும் கூகுள் பே போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களின் தேவையற்ற ஆதிக்கத்தை தடுக்க முடியுமென்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payment Corporation of India - NPCI) நம்புகிறது.
யுபிஐ சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருப்பதை குறைக்க உள்நாட்டு ஃபின்டெக் நிறுவனங்களுக்கு ஆதரவை வலியுறுத்தும் பாராளுமன்ற குழுவின் பரிந்துரையை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பேடிஎம் மீதான தடைகளுக்கு மத்தியில், இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்திய ரிசர்வ் வங்கியானது, பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுக்கான காலக்கெடுவை மார்ச் 15, 2024 வரை நீட்டித்துள்ளது. அதற்குள் பேடிஎம் ஃபாஸ்டாக் (Paytm Fastags) பயனர்கள் வேறொரு வங்கியின் வழியாக புதிய ஃபாஸ்டாக்கை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கிய ஃபாஸ்டேக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்கள், அதில் நிலுவைத்தொகை இருக்கும்வரை கட்டணம் செலுத்த முடியும். இருப்பினும் மார்ச் 15, 2024 க்கு பிறகு ஃபாஸ்டேக்-இல் கூடுதல் நிதி அல்லது டாப்-அப்கள் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்க்கப்பட்டுள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க மார்ச் 15, 2024 க்கு முன் மற்றொரு வங்கியால் வழங்கப்பட்ட புதிய ஃபாஸ்டேக்-ஐ வாங்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், மார்ச் 15 க்குப் பிறகு, தங்கள் கணக்கிலிருக்கும் பணத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம், திரும்பப் பெறலாம் அல்லது மாற்றலாம். அதேபோல, அக்கவுண்டில் பேலன்ஸ் இருக்கும் வரை அவர்கள் தங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கவோ அல்லது பணத்தை மாற்றவோ முடியும்.
யுபிஐ / ஐஎம்பிஎஸ் மூலம் பணப் பரிமாற்றத்தை பொறுத்தவரை, மார்ச் 15, 2024 க்கு பிறகு, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பேடிஎம் பேங்க் மூலம் தங்கள் கணக்கில் பணத்தை மாற்ற முடியாது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிலிருந்து, பேலன்ஸ் இருக்கும் வரை யுபிஐ / ஐஎம்பிஎஸ் மூலம் உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications