இனி ஈஸியா பயணம் செய்யலாம்.! கூகுளின் பிரம்மாண்ட திட்டம்.. 3டி வியூவில் மேப்ஸ்.. கலக்கும் Google Maps.!
கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் செயலியில் தொடர்ந்து புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக கூகுள் மேப்பில் வரும் ஒவ்வொரு அப்டேட்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் உலகம் முழுவதும் அதிக மக்கள் கூகுள் மேப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப். முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் தேடுவோம். இடத்தை சொன்னால் போதும் எந்த இடத்தில் டிராபிக் அதிகம், எந்த வழியாக செல்லலாம் என அனைத்தையும் துல்லியமாக தெளிவுபடுத்தி விடுவார்கள். ஆனால் தற்போது போனில் உள்ள இந்த கூகுள் மேப் செயலியைத் தட்டினால் போதும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தை துல்லியமாகக் காட்டிவிடும்.

இந்நிலையில் ரோடு டிராஃபிக் எப்படி இருக்கிறது? என்பன போன்றவற்றை கூகுள் மேப்பில் 3டி-இல் காட்டும் வசதியை விரைவில் கொண்டுவருவது என கூகுள் நிறுவனம் சமீபத்திய தனது கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது. மேலும் பல்வேறு புதிய அம்சங்களும் கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இப்போது இது தொடர்பான விவரங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
கூகுள் மேப்பில் 3டி தோற்றத்தில் உலகத்தைக் காட்ட உள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரைபடத்தில் எல்லா இடங்களையும் பறவை கண் பார்வையில் பார்க்கவும் முடியும் என்றும் கூறப்படுகிறது. எனவே இதன் மூலம் சாலைகளில் பறவையைப் போல் குறிப்பிட்ட உயரத்தில் இருந்து. சற்று சாய்வாகப் பார்க்க முடியும். கண்டிப்பாக இது பயனர்களுக்கு நல்ல உணர்வைத் தரும் என்று கூகுள் நம்புகிறது.
மேலும் பறவை கண் பார்வை மட்டுமின்றி, வேறு சில பார்வைகளிலும் கூகுள் வரைபடத்தைக் காணும் விதமாகத் தேர்வுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இப்போது வரை கிடைக்கப்பெற்ற வான்வெளி மற்றும் சாலை படங்களைக் கொண்டு நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கம்யூட்டர் விஷன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வசதி உருவாக்கப்பட்டு வருவதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இதில் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பெயர் நியூரல் ரேடியன்ஸ் ஃபீல்ட்ஸ் (NeRF) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இடத்திலும் ஒளியின் வெளிச்சத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பொருட்களின் அமைப்பையும் கூட தெளிவாகக் காட்டும் என்று கூறப்படுகிறது.
சாலைகளில் உள்ள பாதைகள், சாலை குறிக்கீடுகள், பார்க்கிங் தேர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் புதிய அப்டேட் செய்யப்பட்ட கூகுள் மேப்பில் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு ரோடுகளில் எந்தெந்த நேரத்தில் எவ்வளவு பிசியாக இருக்கும் என்பதையும் மொபைல் போனில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை நீங்கள் உள்ளீடு செய்தால், அதே சாலையில் வாகனங்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டுக் காட்டப்படும்.
இதுதவிர வெப்பநிலை மற்றும் காற்றின் தரம் எப்படி உள்ளது என்பதைக் கூகுள் மேப் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதற்கு வேண்டி கூகுள் மேப் செயலியில் டைம் ஸ்லைடர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் மேப்பில் புதிய வசதிகள் உலகில் 15 நகரங்களில் முதற்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆனால் இந்த 15 நகரங்களில் எந்த இந்திய நகரமும் இல்லை. எனவே இந்த புதிய வசதிகள் இந்தியாவுக்கு அடுத்த வருடம் வரும் என எதிர்பார்க்கலாம். இருந்தபோதிலும் கூகுள் மேப்-ல் வரும் புதிய வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








