Google Maps மூலம் வசமாக சிக்கிய இருவர்.. கொலை வழக்கு.. காட்டிக்கொடுத்த புகைப்படம்.. நடந்தது இதுதான்..
கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சேர்த்த வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்த கூகுள் மேப்ஸ்-இல் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் கூகுள் ஸ்ட்ரீட் மேப் புகைப்படத்தின் உதவியுடன் ஸ்பெயினில் காணாமல் போன ஒரு நபரின் கொலை சம்பவத்தை அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வடக்கு ஸ்பெயின் நாட்டில் ஆண்டலூஸ் எனும் ஒரு சிறிய கிராமத்தில் ஜார்ஜ் லூயிஸ் பெரேஸ் என்ற நபர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் பணியில் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக ஜார்ஜ் லூயிஸ் பெரேஸ் இறுதியாக அவர் சென்ற இடம், அவரது செல்போன் ஸ்விட் ஆப் ஆன இடம் எனத் தேடியுள்ளனர். ஆனாலும் அவரை கண்டறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கூகுள் மேப்ஸ் புகைப்படம் அவர் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதைக் கண்டறிய உதவியுள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் கூகுள் மேப்பில் ஸ்ட்ரீட் போட்டோவுக்காக பெரும்பாலான இடங்களைப் புகைப்படம் எடுக்கும். அப்படி சம்பவம் நடைபெற்ற சமயத்தில் புகைப்படம் எடுத்துள்ளது கூகுள்.
குறிப்பாக அந்த புகைப்படத்தில் ஒரு நபர் தனது கார் டிக்கியில் சந்தேகப்படும்படியான ஒரு மூட்டையை வைப்பது தெரிந்துள்ளது. இதனைக் கவனித்த போலீசார் அந்த புகைப்படம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான் அந்த மூட்டைக்குள் இருப்பது காணாமல் போன ஜார்ஜ் லூயிஸ் பெரெஸ் உடல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் போலீஸ் விசாரணையில், காணாமல் போன ஜார்ஜ் லூயிஸ் பெரெஸ்-இன் முன்னாள் மனைவி மற்றும் 32 வயதான கியூபா நாட்டை சேர்ந்த நபரும் இந்த கொலையைச் செய்து ஜார்ஜ் லூயிஸ் பெரஸை மூட்டையாகக் கட்டி ஆண்டலூஸ் கிராம மயானத்தில் புதைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. தற்போது அந்த மயானத்தில் இருந்து ஒரு சடலத்தை எடுத்துள்ளனர்.
அதேசமயம் கூகுள் ஸ்ட்ரீட் போட்டோ ஜார்ஜ் லூயிஸ் பெரெஸை கண்டறிய உதவியது உண்மை என்றாலும், அந்த ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்த கொலையை உறுதி செய்ய முடியாது. மேலும் கைதாகியுள்ள இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிந்து ஆதாரங்கள் கிடைத்த பிறகு தான் இவர்கள் மட்டும் தான் கொலையைச் செய்தார்களா அல்லது வேறு என்ன நடந்தது என்ற முழு விவரமும் தெரியவரும் என உள்ளூர் போலீசார் அந்நாட்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கூகுள் மேப்ஸ்-இல் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட Avoiding Narrow Roads வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது நீங்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் ஒரு புதிய பாதையில் செல்லும் போது சில நேரம் குறுகலான பாதைகளில் நாம் மாட்டிக் கொள்ள நேரிடும். இதனைத் தவிர்க்க தான் சமீபத்தில் குறுகலான பாதையைத் தவிர்க்கலாம் (Avoiding Narrow Roads) வசதியைக் கூகுள் மேப்ஸ் கொண்டுவந்தது. அதாவது இந்த வசதியின் மூலம் நாம் செல்லும் பாதையில் குறுகலான இடம் இருக்கிறதா என்பதைக் கணித்து மேப்ஸ் நமக்குச் சொல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதியை ஏஐ (AI) மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறது கூகுள். அதாவது ஏஐ வசதியானது சாட்டிலைட் மேப்ஸ்,ஸ்ட்ரீட் வியூ படங்கள் மற்றும் ஒரு சாலை குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரித்து அது குறுகலான பாதையா இல்லையா என்பதனை பயனாளர்களுக்குக் கணித்துச் சொல்லுமாம். மேலும் இந்த வசதி இந்தியாவில் சில முக்கியமான நகரங்களில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நகரங்களிலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








