கூகுள் மேப்ஸில் அறிமுகமானது புதிய வசதிகள்.. Ask மேப்ஸ்.. இனி சிரமம் இருக்காது.. இதோ முழு விவரம்..
கூகுள் மேப்ஸ் செயலியை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். முகவரியை மட்டுமே வைத்து முன்பின் தெரியாத இடத்திற்குச் செல்ல வழிகாட்டுகிறது இந்த கூகுள் மேப்ஸ் (Google Maps). அதுவும் இந்த கூகுள் மேப்ஸில் அவ்வப்போது புதிய புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
ஆஸ்க் மேப்ஸ்
இந்நிலையில் கூகுள் மேப்ஸ் செயலியில் ஜெமினி (Gemini) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ஆஸ்க் மேப்ஸ் (Ask Maps) எனும் வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி மூலம் மேப்ஸ் செயலி வெறும் வழிகாட்டியாக மட்டுமின்றி பயனர்களுடன் உரையாடும் ஒரு ஏஐ (AI) உதவியாளராக மாறியுள்ளது.

அதாவது இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களைப் பற்றி சாதாரண மொழியில் கேள்விகளைக் கேட்கலாம். உதாரணமாக அருகில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட கஃபே எங்கு உள்ளது? குறைவான கூட்ட நெரிசல் கொண்ட உணவகங்கள் எவை?" என்று கேட்டால் போதும் ஜெமினி மூலம் துல்லியமான பதில்களைக் கூகுள் மேப்ஸ் எளிதாக வழங்கிவிடும்.
அதுவும் Ask Maps பட்டனை தட்டினால் போதும், உரையாடல் முறையில் உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கும். மேலும் இதில் விடுமுறை நாட்களுக்கான முழுமையான பயணத் திட்டத்தை வகுத்துத் தரும்படி பயனர்கள் கேட்கலாம். குறிப்பாக இதில் 30 கோடிக்கும் அதிகமான இடங்கள் மற்றும் 50 கோடிக்கும் மேலான பயனர்களின் மதிப்புரைகள் அடிப்படையில் பரிந்துரைகள் வழங்கப்படும்.
Immersive Navigation வசதி
அதேபோல் கூகுள் மேப்ஸில் புதிய Immersive Navigation என்ற அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகுள் மேப்ஸ் இப்போது அருகிலுள்ள கட்டிடங்கள், மேம்பாலங்கள் (overpasses) மற்றும் நிலப்பரப்பை (terrain) காட்டும் 3D காட்சியை வழங்குகிறது. இது ஆப்பிள் மேப்ஸ் போன்ற அனுபவத்தை வழங்கும்.
அதேசமயம் கூகுள் மேப்ஸ் ஓட்டுநர்களுக்கு அவர்கள் செல்லும் பாதையைப் பற்றி மேலும் விரிவான காட்சியை வழங்குகிறது. ஸ்மார்ட் ஜூம் (smart zoom) மற்றும் டிரான்ஸ்பரன்ட் (transparent) கட்டிடக் காட்சிகள் மூலம், முன்புற சாலையைத் தெளிவாகப் பார்க்க முடியும். இதனால் கடினமான திருப்பங்கள் (tricky turns) மற்றும் வழித்தட மாற்றங்கள் (lane changes) போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து தயாராக இருக்க ஓட்டுநர்களுக்கு உதவுகிறது.
நீங்கள் ஒரு இடத்திற்குச் செல்லும் முன்பு Street View படங்களின் மூலம் அந்த இடத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் முன்கூட்டியே பார்க்க முடியும். அதோடு, எங்கு வாகனத்தை நிறுத்தலாம் (parking) என்பதற்கான பரிந்துரைகளையும் பெறலாம். நீங்கள் அந்த இடத்திற்கு அருகில் செல்லும்போது கூகுள் மேப்ஸ் அந்த கட்டிடத்தின் நுழைவாயில், அருகிலுள்ள பார்க்கிங் இடங்களை, மேலும் சாலையின் எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டும்.

கூகுள் மேப்ஸ் செயலியில் கொண்டுவரப்பட்ட ஆஸ்க் மேப்ஸ் வசதி முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் இது கணினிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதேபோல் Immersive Navigation அம்சம் தற்போது அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கூகுள் மேப்ஸ் செயலியில் விரைவில் பல்வேறு புதிய வசதிகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








