கூகுள் பே முதல் கூகுள் மேப் வரை.. புதிய அம்சங்களை கொண்டுவந்த Google.. உற்சாகத்தில் பயனர்கள்..
நேற்று நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா 2024 (Google for India 2024) என்ற நிகழ்வில் சமூக கட்டமைப்பு, வணிகம் மற்றும் எளிதில் அணுகக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட பல அம்சங்களை வெளியிட்டது கூகுள் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கூகுள் பே (Google Pay) செயலியில் அவ்வப்போது புதிய சேவைகள் கொண்டுவரப்படுகிறது. இந்த முறையும் ஒரு புதிய சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது கூகுள் பே செயலியில் கடன் பெறுவதற்கு நிதி நிறுவனங்களை அணுகும் முறை விரிவு படுத்தப்படுகிறது. அதன்படி ஆதித்யா பிர்லா பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் செயல்பட உள்ளது. இதுதவிர ஜெமினி மூலம் கடன் பெறுதற்கான வழிகாட்டுதல்களும் வழங்க இந்த ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் கூட புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி கூகுள் ஜெமினி உதவியுடன் கூகுள் மேப் செயலியில் ஒரு இடத்தை தேடும்போது, அந்த இடத்தைப் பற்றிய லட்சக்கணக்கான மக்கள் குறிப்பிட்ட மதிப்புரைகளைப் பகுப்பாய்வு செய்து சுருக்கமான விளக்கத்தை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் இந்த மாதம் இறுதிக்குள் கூகுள் மேப் செயலியில் வெளியிடப்படும்.
அதேபோல் கூகுள் மேப்ஸ் செயலியில் சுற்றுலாத் தளங்களில் பிறரின் அனுபவம் மற்றும் குறிப்பிட்ட ஒரு பொருள்கள் குறித்து தேடினால், நுண்ணறிவு படங்களை ஆராய்ந்து தகுந்த பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் அனைவரும் இந்த அம்சம் பயனுள்ள வகையில் இருக்கும்.
இதுதவிர மழை வெள்ளம் மற்றும் மூடுப் பனிச் சாலைகளைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில் கூகுள் மேப் மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சாலைகளைப் பார்ப்பதற்கு மட்டுமின்றி, கூகுள் மேப் செயலியில் பாதிக்கப்பட்ட சாலை குறித்த எச்சரிக்கையைப் பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜெமினி லைவ் செயலியில் புதிய மாற்றங்கள் வந்துள்ளது. அதன்படி கூகுள் நிறுவனத்தின் செயற்கை குரல் நுண்ணறிவு செயலியான ஜெமினி லைவ் செயலி ஆனது, பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான பதிலை அளிக்கும் திறன் கொண்டது. இதில் பயனர்கள் குறுக்கிட்டு கேள்வி கேட்டால் அதற்கும் பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஜெமினி லைவ் செயலி ஆனது ஆங்கிலத்தில் பயன்பாட்டில் உள்ள நிலையில் விரைவில் ஹிந்தி மொழியில் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழ், கன்னடம். தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், மாரத்தி, உருது மொழிகளிலும் ஜெமினி லைவ் கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் லென்ஸ் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. அதன்படி இப்போது புகைப்படத்தை பயன்படுத்தி உபயோகித்து வரும் கூகுள் லென்ஸ், விரைவில் வீடியோ பதிவிடும் முறையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது விடியோவை பதிவிட்டு அதில் இருந்து ஒரு பொருள் குறித்து கேள்வி எழுப்பினாலும், கூகுள் நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது புதிய சேவைகள் மற்றும் அம்சங்கள் இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான சேவைகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








