Google ஜெமினி மொபைல் செயலி இந்தியாவில் அறிமுகம்.. தமிழ் மொழியில் பயன்படுத்தலாம்.. இதன் பயன்கள் என்ன?
கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஏஐ(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஜெமினி மொபைல் செயலியை (Google Gemini App) தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெமினி ஏஐ சாட்பாட்-ஐ அறிமுகம் செய்தது. குறிப்பாக இது நாம் எழுப்பும் கேள்விகள் அல்லது ஒரு செயலை மேற்கொள்ள இடப்படும் கட்டளைகளை இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு பதிலளிக்கும். இதுதவிர குறிப்பிட்ட பணிகளை செய்து முடிக்கும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது இந்த ஜெமினி சாட்பாட்.

அதேபோல் இதற்கு முதலில் Bard AI எனப் பெயரிட்டிருந்தது கூகுள் நிறுவனம். அதன்பின்னர் ஜெமினி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் ஜெமினி சாட்பாட் செயலியைக் கூகுள் நிறுவனம் இன்று இந்தியாவில் 9 மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது. முன்பு இதை ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என நிலை இருந்தது.
ஆனால் தற்போது தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, உருது ஆகிய ஒன்பது மொழிகளில் பயன்படுத்த முடியும். இந்த ஜெமினி சாட்பாட் செயலி மூலம் பேசுவது, டெக்ஸ்ட் மூலம் உள்ளீடு செய்து அல்லது ஏதாவது புகைப்படங்களை அப்லோடு செய்து தேவையான உதவிகளைப் பெறமுடியும்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், உங்கள் வாகனத்தின் டயர் ஒன்றின் புகைப்படத்தைப் பகிர்ந்து இதனை எவ்வாறு மாற்றுவது என்று கேட்டால் அதற்கான வழிகாட்டுதல்களை ஜெமினி மொபைல் செயலி வழங்கும். மேலும் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் கிடைக்கப்பெறும் பயன்களுடன் சேர்த்து அடுத்தகட்டமாக மேலும் பல உதவிகளையும் கூட ஜெமினி நமக்கு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜெமினி அட்வான்ஸ்டு என்ற பிரீமியம் வெர்ஷன் கூட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1500 பக்கங்கள் கொண்ட நீளமான ஆவணங்கள் அல்லது நூற்றுக்கணக்கான இமெயில்கள், நீளமான வீடியோக்கள் போன்ற கடினமான தரவுகளைப் புரிந்து கொண்டு எளிதில் உதவிகளைப் பெறமுடியும்.

குறிப்பாக ஜெமினியில் பகிரப்படும் நமது தகவல்களைப் பிறரிடம் பகிராமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. பின்பு கூகுள் ஜெமினி ஏஐ செயலியை பிளே ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்யலாம். நீண்ட நெடிய கன்டென்ட்களை எளிதில் சம்மரைஸ் செய்து தரும் தன்மையை இந்த சாட்பாட் கொண்டு உள்ளது என்று கூகுளின் ஜெமினி என்ஸ்பீரியன்ஸஸ் பொறியாளர் பிரிவு துணைத் தலைவர் அமர் சுப்ரமணியா தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த ஜமினி மொபைல் செயலி ஆனது இந்தியாவைத் தவிர துருக்கி, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆப் உங்களுக்குத் தேவையான உதவியைப் பெற தட்டச்சு செய்ய, பேச அல்லது படத்தைச் சேர்க்க உங்களை அனுமதிக்கிறது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








