மறுபடியும் FASTag இல் மாற்றம்.. கார், ஜீப், வேன்களுக்கு புதிய வெரிஃபிகேஷன் செயல்முறை அமல்!
ஏற்கனவே நவம்பர் 15 ஆம் தேதி முதல் ஃபாஸ்டாக் (FASTag) கட்டணம் தொடர்பான முக்கிய மாற்றம் ஒன்று அமலுக்கு வரவுள்ள நிலையில், என்எச்ஏஐ (NHAI) என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது பாஸ்டாக் பயனர்களுக்கான கேஒய்வி செயல்முறையிலும் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
சில லாரி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் செலுத்துவதை தவிர்க்க கார் டாக்களை (Car Tag) பயன்படுத்துவதாக கூறப்படுவதால், ஃபாஸ்டாக் அமைப்பில் ஏற்படும் கசிவுகளை தடுக்கும் முயற்சியாக, கேஒய்வி செயல்முறை கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த செயல்முறை கூடுதல் சுமையாக மாறியது.

இதனால் வாகனத்தின் பல வகையான புகைப்படங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்றுவதிலும், யூசர் பிரெண்டிலி ஆக இல்லாத வலைத்தளங்களுக்கு செல்வதிலும் - பலர் சிரமங்களை எதிர்கொண்டனர். இதன் விளைவாக கேஒய்வி சரிபார்ப்பை முடிக்காததற்காக, அவர்ர்களின் ஃபாஸ்டாக் திடீரென முடக்கப்பட்ட பிறகு, சிலர் சுங்கச்சாவடிகளை கடப்பதிலும் சிரமத்தை எதிர்கொண்டனர் .
இப்போது, என்எச்ஏஐ-யின் நிறுவனமான இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (Indian Highways Management Company Limited - IHMCL) வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, கேஒய்வி-க்கு இணங்காத வாகனங்களுக்கு ஃபாஸ்டாக் சேவைகள் நிறுத்தப்படாது, மேலும் கேஒய்வி செயல்முறையை முடிக்க பயனர்களுக்கு போதுமான வாய்ப்பும் வழங்கப்படும்.
இந்த விஷயத்தில் இப்போது என்ன மாறியுள்ளது? திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, கார், ஜீப் அல்லது வேனின் பக்கவாட்டு புகைப்படங்கள் இனி தேவையில்லை. முன்பக்கத்தில் நம்பர் பிளேட் தெரியும்படி மற்றும் கண்ணாடியில் உள்ள ஃபாஸ்டாக் தெரியும்படியான படம் மட்டுமே பதிவேற்றப்பட வேண்டும். முன்னதாக, பயனர்கள் வாகனத்தின் முன் மற்றும் பக்கவாட்டு புகைப்படங்களை பதிவேற்ற வேண்டியிருந்தது.
மேலும் பயனர்கள் அவர்களுடைய வெஹிகிள் நம்பர், சேஸ் நம்பர் அல்லது மொபைல் நம்பரை உள்ளிடும்போது அரசாங்கத்தின் வாஹன் (VAHAN) தரவுத்தளத்திலிருந்து ஆர்சி (RC) விவரங்களை தானாகவே பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று என்எச்ஏஐ தெரிவித்துள்ளது. ஒரே மொபைல் எண்ணில் பல வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், கேஒய்வி-ஐ முடிக்க விரும்பும் வாகனத்தை பயனர் தேர்ந்தெடுக்க முடியும் என்று என்எச்ஏஐ தெரிவித்துள்ளது.
மிக முக்கியமாக, கேஒய்வி கொள்கைக்கு முன் வழங்கப்பட்ட ஃபாஸ்டாக்கள் ஆனது, தளர்வான டேக்குகள் அல்லது தவறான பயன்பாடு குறித்த புகார்கள் பெறாத வரை ஆக்டிவ் ஆக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் , கேஒய்வி செயல்முறையை முடிக்க வழங்குநர் வங்கிகள் வழியாக பயனர்களுக்கு எஸ்எம்எஸ் நினைவூட்டல்களும் அனுப்பப்படும்.
இந்த புதிய செயல்முறையில் ஏதேனும் கேள்வி அல்லது சிரமம் ஏற்பட்டால், பாஸ்டாக் பயனர்கள் தங்கள் கேஒய்வி தொடர்பான ஏதேனும் சிக்கல்களுக்கு அல்லது சந்தேகங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை உதவி எண் (National Highway helpline number) ஆன 1033 வழியாக புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி முதல் வரும் மாற்றம்: செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் (Valid FASTag) மற்றும் செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டாக் (Functional FASTag) இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழையும் வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (National Highways Fee) திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
இதன்கீழ் நவம்பர் 15, 2025 முதல், ஃபாஸ்டாக் பயன்படுத்தாத வாகன உரிமையாளர்கள் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தி பணம் செலுத்த தேர்வுசெய்யும்போது வழக்கமான சுங்கத்தொகையை விட 1.25 மடங்கு அதிகம் செலுத்த வேண்டும். இந்த தொகை ரொக்கமாக செலுத்துபவர்களை விட ஒப்பீட்டளவில் குறைவு ஆகும்.
இதுவே ரொக்கமாக செலுத்தினால், செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் இல்லாத வாகன உரிமையாளர்கள் பொருந்தக்கூடிய பயனர் கட்டணத்தை விட இரு மடங்கு செலுத்த வேண்டும். இந்த மாற்றம் - யுபிஐ வழியாக பணம் செலுத்துவோர்களுக்கு லாபகரமான வழியாக இருப்பதோடு சேர்த்து, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.


Click it and Unblock the Notifications








