EPFO ஆட்டோ செட்டில்மென்ட்.. PF பயனாளர்களுக்கு நற்செய்தி.. வெளியானது முக்கிய அறிவிப்பு..
இபிஎஃப்ஓ (EPFO) என அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது வெளியான தகவலின்படி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை (auto settlement limit) ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக நிர்வாக குழுவால் இந்த நடவடிக்கை அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மத்திய அறங்காவலர் குழுவிலிருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும். அதன்பின்பு தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்
குறிப்பாக EPFO மூலம் பிஎப் (PF) பணத்தைப் பெறுவதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. எனவே இதன் மூலம் முன்பணம் பெறுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1 லட்சமாக இருந்த வரம்பு இப்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்மொழிவுக்குத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தாவ்ரா ஒப்புதல் அளித்துள்ளார்.
அதுவும் மார்ச் 28-ம் தேதி அன்று ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தியும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும் இந்த பரிந்துரை CBT-யின் ஒப்புதலுக்குச் செல்ல வேண்டும். அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், EPFO உறுப்பினர்கள் ஆட்டோ செட்டில்மென்ட் ஆஃப் தி அட்வான்ஸ்டு க்ளெய்ம் (ASAC) மூலம் ரூ.5 லட்சம் வரையிலான PF நிதியைப் பெறத் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ க்ளைம் செட்டில்மென்ட் அறிமுகம்?
கடந்த ஏப்ரல் 2020-ல் ஆட்டோ க்ளைம் செட்டில்மென்ட்டை அறிமுகம் செய்தது EPFO அமைப்பு. முதலில் ரூ.50,000 வரை மட்டுமே இதன் மூலம் பெறமுடியும் என்ற நிலை இருந்தது. அதன்பின்பு இந்த வரம்பு 2024-ல் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. அதுவும் முன்னதாக நோய்வாய்ப்பட்டாலோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ மட்டுமே பிஎஃப் பணத்தை பெறமுடியும். ஆனால் தற்போது கல்வி, திருமணம், வீட்டுவசதி போன்ற நோக்கங்களுக்காக முன்பணம் பெறும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோரிக்கை நிராகரிப்பு விகிதம் கூட இப்போது 30 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இது 50 சதவீதமாக இருந்தது. குறிப்பாக ஆட்டோ க்ளைம் சொல்யூஷன் மூலம் EPFO க்ளைம்கள் எந்த மனித தலையீடும் இல்லாமல் IT அமைப்பால் தானாகவே செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல் பிஎஃப் பணத்தை பெற தேவையான ஆவணங்களின் எண்ணிக்கை கூட குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 27 சதவீதமாக இருந்த பதிவுகளின் அளவு தற்போது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது 6 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளதாகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் எந்தவொரு கோரிக்கைகளுக்கும் KYC, தகுதி மற்றும் வங்கி சரிபார்ப்புடன் IT கருவிகளால் தானாகவே செயல்படுத்தப்படும். மேலும் இது உரிமைகோரல் தீர்வு காலத்தை 10 நாட்களில் இருந்து 3-4 நாட்களாக குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக EPFO அமைப்பு விரைவில் கொண்டுவரும் இந்த மாற்றங்கள் பல மில்லியன் கணக்கான ஊழியர்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும், அதேசமயம் அவசரக் காலங்களில் வேகமாக நிதி உதவி பெற உதவியாகவும் இருக்கும்.
யுபிஐ (UPI)
இதுதவிர ஏடிஎம் மற்றும் யுபிஐ (UPI) மூலம் பிஎப் பணம் எடுக்கும் திட்டங்களும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. குறிப்பாக மக்களின் தேவையை அறிந்து இந்திய அரசாங்கம் இதுபோன்ற பல புதிய சேவைகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








