வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. ஃபாஸ்டாக் உள்ளூர் பாஸ் இனி ஆன்லைனில் பெறலாம்.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் அடிக்கடி சுங்கச் சாவடிகளை கடந்து பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளிக்கும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), ஃபாஸ்டாக் (FASTag) அடிப்படையிலான டிஜிட்டல் உள்ளூர் பாஸ் (digital local pass) சேவையை நாடு முழுவதும் உள்ள 121 சுங்கச் சாவடிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
ஆகவே இதன் மூலம் தகுதியுடைய வாகன உரிமையாளர்கள் இனி சுங்கச் சாவடிகளுக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாதாந்திர உள்ளூர் பாஸ்களை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தகவலின்படி, புதிய டிஜிட்டல் உள்ளூர் பாஸ் திட்டத்தின் மூலம் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காகவோ, அவற்றைச் சரிபார்ப்பதற்காகவோ வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை இனி இருக்காது. இதனால் அடிக்கடி சுங்கச் சாவடிகளைப் பயன்படுத்தும் உள்ளூர் வாகன ஓட்டிகளின் நேரமும் பயணச் சிரமமும் கணிசமாக குறையும்.
இந்த வசதியைப் பெறத் தகுதியுள்ளவர்கள் Rajmargyatra மொபைல் செயலி வழியாகவே ஆன்லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்குவதுடன், அதில் அதிக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தி, பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் சேவையை மேம்படுத்துவதே இந்த டிஜிட்டல் முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த பாஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
அதாவது டிஜிட்டல் உள்ளூர் பாஸ் திட்டத்தின் கீழ், தகுதியான சுங்கச் சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் வாகன உரிமையாளர்கள் இந்த வசதியைப் பெற விண்ணப்பிக்கலாம். பாஸ் வழங்கப்பட்ட பிறகு, அதைப் பயன்படுத்தி ஒரு மாத காலத்திற்கு சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடிகள் வழியாக வரம்பின்றி பயணம் மேற்கொள்ள முடியும்.
முன்னதாக, உள்ளூர் பாஸ் பெறுவதற்காகச் சுங்கச் சாவடிக்கு நேரில் சென்று, தங்களது இருப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. தற்போது இந்த நடைமுறை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், தகுதியுள்ளவர்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பாஸைப் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய அமைப்பு டிஜிலாக்கர் மற்றும் Vahan போன்ற அரசு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக விண்ணப்பதாரரின் அனுமதியுடன் வசிப்பிடத் தகவல் வாகன விவரங்கள் மற்றும் ஃபாஸ்டாக் விவரங்கள் ஆகியவை டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும். கூடுதலாக விண்ணப்பதாரரின் முகவரி அந்த சுங்கச் சாவடியின் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளதாக என்பதை GIS தொழில்நுட்பம் சரிபார்க்கும் என்று கூறப்படுகிறது.

இந்த டிஜிட்டல் உள்ளூர் பாஸ் திட்டம் முதலில் ஜூலை மாதம் டெல்லியில் உள்ள முண்ட்கா-பக்கர்வாலா சுங்கச் சாவடியில் சோதனை முறையில் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும் 121 சுங்கச் சாவடிகளுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மாதங்களில் கூடுதல் சுங்கச் சாவடிகளும் இந்த திட்டத்தில் இணைக்கப்படும் என NHAI தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் சரிபார்ப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப முறையால் காகித ஆவணங்கள் மற்றும் நேரில் சென்று சரிபார்க்கும் தேவை குறையும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு நேரமும் சிரமமும் மிச்சமாகும். மேலும், பாஸ் பெறும் செயல்முறை வேகமாகி, சுங்கச் சாவடிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications