ஒருவழியாக BSNL 5G அறிமுகம் எப்போதுனு சொல்லிட்டாங்க.. 5ஜி RAN சோதனை வெற்றி.. Jio-வை போலவே 700 MHz பேண்ட்!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு இதை விட ஒரு சூப்பரான 'குட் நியூஸ்' இருக்காது. புதிய லோகோ மற்றும் தனது வாடிக்கையாளர்களுக்கான 7 புதிய சேவைகளை அறிமுகம் செய்த கையோடு.. தனது 5ஜி நெட்வொர்க் தொடர்பான ஒரு முக்கிய சோதனையையும் செய்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது. அதென்ன சோதனை? இது ஏன் முக்கியமான சோதனையாக பார்க்கப்படுகிறது? பிஎஸ்என்எல் 5ஜி எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:
என்ன சோதனை? பிஎஸ்என்எல் நிறுவனமானது 3.6 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 700 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளில் (3.6 GHz and 700 MHz spectrum bands), உள்நாட்டு 5ஜி ஆர்ஏஎன் (ரேடியோ அணுகல் நெட்வொர்க் - Radio access network) மற்றும் கோர் ஆகியவற்றை வெற்றிகரமாக சோதித்து உள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் (Union telecom minister of India) ஆன ஜோதிராதித்யா எம் சிந்தியா (Jyotiraditya M Scindia), நாங்கள் 3.6 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்டுகளில் சுதேசி 5ஜி ஆர்ஏஎன் மற்றும் கோர் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இது ஏன் ஒரு முக்கியமான சோதனையாகும்? முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை (Reliance Jio) தவிர, பிரீமியம் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பிஎஸ்என்எல் மட்டுமே. அதை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதால், இதுவொரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையானது விரிவான கவரேஜை வழங்கும் ஒரு சிறந்த பேண்ட் ஆகும். இருப்பினும், இதன் விலையை கருத்தில் கொண்டு ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய 2 நிறுவனங்களுமே இந்த பேண்ட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்துவிட்டன.
பிஎஸ்என்எல் 5ஜி எப்போது அறிமுகமாகும்? 5ஜி ஆர்ஏஎன் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதால், பிஎஸ்என்எல் நிறுவனமானது வருகிற 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனது 5ஜி சேவையை ஆக்கபூர்வமாக அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஜோதிராதித்யா எம் சிந்தியாவும் இதை உறுதிப்படுத்தும் வண்ணம், பிஎஸ்என்எல் 5ஜி விரைவில் அறிமுமாகும் என்று கூறியுள்ளார்.
பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தி வரும் 4ஜி தளங்கள் (4G Sites) ஆனது 2025 ஆம் ஆண்டில் 5ஜி ஆக மேம்படுத்தப்படும். 2025 ஆம் ஆண்டின் மத்தியில் 1 லட்சம் தளங்களை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா கூறி உள்ளார்.
எல்லாம் திட்டமிடப்பட்டபடி நடந்தால், உள்நாட்டு 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யும்நாட்டின் முதல் டெலிகாம் ஆப்ரேட்டராக பிஎஸ்என்எல் இருக்கும். இதுவரையிலாக பிஎஸ்என்எல் நிறுவனம் 39,000 4ஜி தளங்களை பயன்படுத்தியுள்ளது. மீதமுள்ளவை நடப்பு நிதியாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டின் இறுதியிலோ செய்யப்படும்.
தற்போதைக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி தளங்கள் இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பயன்படுத்தப்படுகின்றன. டிராய் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிக்கையின்படி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு பிஎஸ்என்எல்-க்கு கடந்த ஜூலை 2024 இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க உதவி உள்ளது.
புதிய பயனர்களைச் சேர்க்கும் வேகத்தைத் தக்கவைக்க, விரைவில் பல புதிய பகுதிகளில் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற உத்வேகம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வந்துள்ளது போல் தெரிகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிஎம்டி ஆன ராபர்ட் ஜே ரவி, ஏற்கனவே உள்ள மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தும் யோசனை இப்போதைக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிலைப்பாடு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் மேலும் பல புதிய பயனர்களை சேர்க்க உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications








