நடிகர் கெளதம் கார்த்திக்கின் ஸ்மார்ட்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள்.. போலீசுக்கு கொடுத்த டிவிஸ்ட் என்ன?
நவரச நாயகன் என்று அழைக்கப்படும் பிரபல நடிகரான கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக், இயக்குநர் மணிரத்னத்தின் 'கடல்' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழில் சிப்பாய், வை ராஜா வை, ஹர ஹர மகாதேவ்கி, தேவராட்டம், இவன் தந்திரன் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் அதிகாலை சைக்ளிங் செய்யும் பொழுது இவரின் ஸ்மார்ட்போன் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.

சைக்ளிங் சென்ற கெளதம் கார்த்திக்
கடந்த வாரம், டிசம்பர் 2ம் தேதி அதிகாலை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில், சைக்ளிங் சென்றிருந்த கெளதம் கார்த்திக்கை அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்துள்ளனர். திரைப்படப் பாணியில் ஹீரோவை வில்லன்கள் பின்தொடர்வது போல கௌதம் கார்த்திகை பின்தொடர்ந்து, அவரின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரிடமிருந்து பறித்துச் சென்றுள்ளனர்.

ஸ்மார்ட்போனை பறித்துச்சென்ற இரண்டு மர்ம நபர்கள்
ஸ்மார்ட்போனை பறிகொடுத்த கெளதம் கார்த்திக் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வந்தனர். டிசம்பர் 2ம் தேதி துவங்கிய விசாரணை ஒருவழியாக நேற்று முடிவுக்கு வந்தது. கௌதம் கார்த்திக்கிடம் இருந்து ஸ்மார்ட்போனை பறித்துச்சென்ற அந்த இரண்டு மர்ம நபர்கள் யார் என்ற விபரத்தை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விசாரணையில் சிக்கிய இருவர்
போலீசார் நடத்திய விசாரணையில் மயிலாப்பூர் குயில் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மற்றும் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சரத் என்ற ஒரு நபரின் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் இரண்டு போரையும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்த போது, கெளதம் கார்த்திக்கிடமிருந்து இவர்கள் ஸ்மார்ட்போனை பறித்துச் சென்றது உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் இருவரையும் மயிலாப்பூர் போலீசார் கைது செய்து ஸ்மார்ட்போனை கேட்டுள்ளனர்.

போலீசுக்கு திருடர்கள் கொடுத்த டிவிஸ்ட்
ஸ்மார்ட்போன் கிடைத்துவிடும் என்று விசாரித்த போலீசாருக்கு இவர்களின் பதில் டிவிஸ்ட் கொடுத்தது. ஸ்மார்ட்போன் திருடிய இருவரும் சேர்ந்து திருடிய போனை சென்ற வாரமே விற்பனை செய்தது காவல்துறையினருக்குத் தெரியவந்துள்ளது. யாரிடம் விற்பனை செய்தனர் என்று விசாரித்து, திருட்டு செல்போனை விலைக்கு வாங்கிய குற்றத்திற்காக ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பைரூஸ்கான் என்பவரையும் போலீசார் இப்பொழுது கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications