இஸ்ரோ வந்து சேர்ந்த க்ரூ மாட்யூல்.. விண்வெளி வீரர்களை பாதுகாக்க ககன்யான் திட்டம் சோதனை..
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா (NASA) மட்டுமல்ல நம்முடைய இஸ்ரோவும் (ISRO) கூட விரைவில் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் (Gaganyaan Mission) திட்டத்தை பற்றிய ஒரு சுவாரசிய அப்டேட் இப்போது வெளியாகியுள்ளது.
ககன்யான் திட்டத்தை இஸ்ரோ நீண்ட நாளாக திட்டம்தீட்டி வருகிறது. இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படவிருக்கும் ககன்யான் விண்கலத்தின் முக்கிய சோதனையை இஸ்ரோ செய்து பார்க்கவுள்ளது. இதற்காக, ககன்யான் விண்கலத்தில் இருக்கும் க்ரூ மாட்யூலை (crew module) இஸ்ரோ இப்போது பெற்றுள்ளது. இந்த க்ரூ மாட்யூலில் தான் விண்வெளி வீரர்கள் பத்திரமாக பயணிக்க போகிறார்கள்.

இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரோ ஏர் டிராப் சோதனையை (ISRO air drop test) செய்து பார்க்கவுள்ளது. அதாவது, ஏர் ட்ராப் சோதனையின் போது, விண்வெளி வீரர்களை (Astronauts) அமர வைக்கும் அலுமினியம் (aluminium) மற்றும் எஃகு (steel) மூலம் செய்யப்பட்ட இந்த க்ரூ-மாட்யூலின் உறுதி மற்றும் இதன் பாராச்சூட் (Parachute) பயன்களை இஸ்ரோ சோதனை செய்யவுள்ளது. இதற்காக, ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் க்ரூ-மாட்யூலை இஸ்ரோவிடம் தயாரிப்பு நிறுவனம் ஒப்படைத்துள்ளது.
தமிழ்நாட்டின் திருவொற்றியூரில் உள்ள கேசிபி ஹெவி இன்ஜினியரிங் (KCP Heavy Engineering) நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் க்ரூ மாட்யூல் (Integrated AirDrop Test Crew Module - IATD-CM) இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையத்தின் செயல் இயக்குநர் ஆர் ஹட்டனிடம் (R Hutton) ஒப்படைக்கப்பட்டது. IADT-CM மனித விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன் தொழில்நுட்பத் தயார்நிலையை நிரூபிக்கப் பயன்படுத்தப்படும்.
IATD-CM ஆனது சுமார் 3.1 மீட்டர் விட்டம் மற்றும் 2.6 மீட்டர் உயரம் மற்றும் அலுமினியம் மற்றும் எஃகு கலவையால் ஆனது. ககன்யானின் (Gaganyaan) பல்வேறு அமைப்புகளை மதிப்பிடுவதற்கான மிக முக்கியமான சோதனைகளில் இதுவும் ஒன்று என்று ஹட்டன் கூறினார். இந்த சோதனையின் முக்கிய நோக்கம் பாராசூட் அமைப்புகளை சரிபார்க்க வேண்டும். வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு உயரங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான பாராசூட்டுகள் இதில் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

இந்த க்ரூ மாட்யூல் இல் உள்ள பாராசூட் அமைப்பை மதிப்பீடு செய்ய இந்த சோதனை பயன்படுத்தப்படும். இந்த சோதனையின் பொது, சில கூடுதல் சோதனைகளையும் வடிவமைப்புக் குழு செய்து பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரோவின் எதிர்பார்ப்புகளை இந்த க்ரூ மாட்யூல் சரியாய் நிறைவேற்றும் வரை, மீண்டும்-மீண்டும் இந்த மாட்யூல் சோதனைக்காக பயன்படுத்தப்படும் என்றும் ஹட்டன் கூறியுள்ளார்.
இந்த க்ரூ மாட்யூல் 7.4km/sec வேகத்தில் சுற்றும் என்றும், பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதால், பாராசூட்களைப் பயன்படுத்தி வேகத்தை கணிசமாகக் குறைக்க கூடிய திறன் இதில் உள்ளது. இந்த மாட்யூல் வளிமண்டலத்தில் நுழையும் போது, இனிஷியல் வேலோசிட்டி ரிடக்ஷன் (Initial velocity reduction) என்ற ஆரம்ப வேகக் குறைப்பு ஏற்படும். அதை ஏரோபிரேக்கிங் (aerobraking) என்று இஸ்ரோ அழைக்கிறது.
இந்த நேரத்தில் அதிகபட்ச வெப்பப் பாய்வு (maximum heat flux) நடக்கும். வேகத்தைக் குறைக்க 7 கிமீ குறைந்த உயரத்தில் பாராசூட்டுகள் பயன்படுத்தப்படும். மேலும் தொடு வேகம் சுமார் 8.5மீ/வினாடியாக இருக்கும். இது பணியாளர்களின் உடலியல் வரம்புக்கு ஏற்ப அனுமதிக்கப்படும். இந்த க்ரூ மாட்யூலில் ஹீட் இன்சுலேஷன் டைல்ஸ் (Heat Insulation Tiles) என்ற வெப்ப காப்பு ஓடுகள் சேர்க்கப்படும். வெப்பப் பாதுகாப்பு அமைப்பிற்கான சோதனையையும் இஸ்ரோ நடத்தும்.
முன்னதாக, ககன்யான் பணிக்கான ஆளில்லா விமான சோதனைகளை விண்வெளி நிறுவனம் விரைவில் தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் அபார்ட் (abort) சோதனை இம்மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளது. க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஃப்ளைட் டெஸ்ட் வெஹிக்கிள் அபார்ட் மிஷன்-1 (டிவி-டி1)க்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








