UPI முதல் பான் கார்டு வரை.. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் விதிகள்.. என்னென்ன மாறப் போகுது? முழு விபரம் இதோ!
வரும் ஜூலை 1 முதல் பல புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதுவும் யுபிஐ, ரயில்வே, பான்கார்டு போன்றவற்றில் பல புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. எனவே இப்போது வரும் ஜூலை மாதம் மாறவுள்ள புதிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்திக் குறிப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தட்கல் டிக்கெட் புக்கிங்: ஜூலை 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக் செய்யும் அனைவரும் தங்களது ஐஆர்சிடிசி (irctc) கணக்குடன் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்கள் தங்களுடைய ஐஆர்சிடிசி கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து கேஒய்சி முடித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் ஏசி பெட்டிகளுக்கு காலை 10 முதல் 10.30 மணி வரையிலும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11 முதல் 11.30 மணி வரையிலும் முகவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் ஆதார்(OTP) அடிப்படையிலான சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வரும் ஜூலை 15 முதல் ரயில்வே முகவர்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளும் இனிமேல் ஆதார் எண் மறறும் ஓடிபி சரிபார்ப்பு மூலம் மட்டுமே தட்கல் டிக்கெட் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
யுபிஐ (UPI) மாற்றம்: இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இந்த UPI சிஸ்டமில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தயாராக உள்ளது. குறிப்பாக இந்த மாற்றம் வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். 2025 ஜூன் 30-ம் தேதி முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற அனைத்து யுபிஐ ஆப்களும் இனி பரிவர்த்தனைகளின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது போனில் உள்ள யுபிஐ செயலிகளில் பணம் பெறுவோரின் பெயர் அல்லது புனைப்பெயர் போன்றவை தெரியும். ஆனால் புதிய விதிகளின் கீழ் இனி புனைப்பெயர் (nickname) தெரியாது. மொத்தமாக வரும் ஜூன் 30-க்குப் பிறகு, பணம் மாற்றப்படுவதற்கு முன்பு, பணம் பெறும் நபரின் அதிகாரப்பூர்வ வங்கி பதிவு செய்யப்பட்ட பெயரை UPI சிஸ்டம் தானாகவே காண்பிக்கும்.
EPFO 3.0: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது EPFO 3.0 திட்டத்தை இந்த ஜூன் மாதமே அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுநாள் வரை அந்த திட்டம் வரவில்லை. எனவே வரும் ஜூலை மாதத்தில் EPFO 3.0 அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் மூலம் ATMகள் மற்றும் UPI மூலம் உடனடி PF பணம் எடுப்பதற்கும், UPI செயலிகள் மூலம் இருப்புச் சரிபார்ப்புகளுக்கும், விரைவான கோரிக்கை செயலாக்கத்திற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.

பான் கார்டு: வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையிலும், அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும் நோக்குடன் ஜூலை 1-ம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய நடைமுறையில் விண்ணப்பதாரரின் பெயர், பிறப்பு சான்றிதழ் அல்லது பிற அடையாள சான்றிதழ் இருந்தாலே பான்கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் புதிய விதிமுறைப்படி ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் எவரும், செல்லுபடியாகும் ஆதார் எண்ணைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதுவே விண்ணப்ப செயல்பாட்டின்போது முக்கிய சரிபார்ப்பு ஆவணமாகச் செயல்படும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக இது டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரித்தாக்கலில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதி இது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications