ஜூன் 1 முதல் முதல் புது ரூல்ஸ்.. யுபிஐ முதல் EPFO வரை.. என்னென்ன மாறுது? இதோ முழு விவரம்..
ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் சில புதிய விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் நடைமுறைக்கு வருவது வழக்கம். அதேபோல், வரவிருக்கும் ஜூன் 1 முதல் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், அவை நமது தினசரி செலவுகள், நிதி திட்டங்கள் மற்றும் பிற தேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எல்பிஜி சிலிண்டர்: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு (LPG), வணிக எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். கடந்த மாதம் கமர்சியல் எரிவாயு சிலிண்டர் விலையில் ஏற்பட்ட உயர்வு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விலை உயர்வின் காரணமாக ஒரு கமர்சியல் சிலிண்டரின் விலை ரூ.3,000-ஐ தாண்டியது. இதற்கு மாறாக, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், இல்லத்தரசிகள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.

ஆனால் ஜூன் மாத தொடக்கத்தில் எரிவாயு சிலிண்டர் விலைகளில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக கமர்சியல் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை உயருமா, குறையுமா அல்லது தற்போதைய நிலையிலேயே தொடருமா என்பது குறித்துத் தெரிந்துகொள்ள அனைவரும் கவனமாக காத்திருக்கின்றனர்.
எல்பிஜி மற்றும் பிஎன்ஜி: வீடுகளில் எல்பிஜி (LPG) சிலிண்டருக்கு பிறகு தற்போது குழாய்வழி எரிவாயு (PNG) இணைப்பைப் பெறும் நுகர்வோருக்கு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய விதிகளின் கீழ், ஒரு வீட்டு உபயோக நுகர்வோர் பிஎன்ஜி எரிவாயு இணைப்பைப் பெற்றால், அவருக்கு இப்போது பின்வரும் இரண்டு தேர்வுகள் உள்ளன.
1. பிஎன்ஜி இணைப்பு செயல்படுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய எல்ஜிபி இணைப்பை முழுமையாக மூடுவதற்கு எரிவாயு முகமையிடம் விண்ணப்பிக்கலாம்.
2.ஒருவேளை வாடிக்கையாளர் எல்பிஜி இணைப்பை துண்டிக்க விரும்பவில்லை என்றால், அவர் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு சிறப்பு மாற்றுச் சீட்டை (transfer voucher) பெறலாம். இந்தச் சீட்டு எதிர்காலத்தில் அவர்களின் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறுவதை எளிதாக்கும்.
மாற்றுச் சீட்டு (transfer voucher) பயன்கள் என்னென்ன? நகரங்களில் இருக்கும் மக்கள் பிஎன்ஜி இணைப்பைப் பெறும்போது அவர்கள் தங்களது பழைய எல்பிஜி சிலிண்டரை ஒப்படைப்பார்கள். ஆனாலும் அவர்கள் ஒரு சிறிய நகரம், ஊர் அல்லது பிஎன்ஜி குழாய்கள் இல்லாத பகுதிக்கு மாறும்போது ஒரு புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு நீண்ட ஆவணப் பணிகளையும் கணிசமான செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.
எனவே அரசின் புதிய மாற்றுச் சீட்டு விதி இந்த சிரமத்தை நிரந்தரமாக நீக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த சீட்டை காண்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி இல்லாத பகுதிகளில் தங்களது எல்பிஜி இணைப்பை அதிக சிரமம் இல்லாமல் உடனே மீண்டும் செயல்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
யுபிஐ (UPI) அப்டேட்: நாட்டில் ஆன்லைன் பண மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் என்பிசிஐ (NPCI) புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய முறையின்படி, நீங்கள் QR கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும்போதோ அல்லது ஒருவரின் மொபைல் எண்ணை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்யும்போதோ, அந்த நபரின் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையான பெயர் திரையில் காண்பிக்கப்படும். இதன் மூலம் பணம் சரியான நபருக்கே செல்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த வசதி தவறான கணக்கிற்கு பணம் அனுப்பும் அபாயத்தை குறைப்பதோடு, போலி அடையாளங்களை பயன்படுத்தி நடைபெறும் ஆன்லைன் மோசடிகளையும் தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் கார்டு விதிகள்: வருமான வரித்துறை ஜூன் 1 முதல் பான் கார்டு தொடர்பான சில புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. இந்த மாற்றங்களின் மூலம், சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் பான் கார்டு சமர்ப்பிக்கும் தேவையில் தளர்வு வழங்கப்பட உள்ளது. உதாரணமாக, ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் செய்யப்படும் டெபாசிட் பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு கட்டாயமாக இருக்காது. ஆனால் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கான பான் கார்டு தேவை விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
EPFO அப்டேட்: சமீபத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா, இனி EPFO உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் தங்கள் வங்கி கணக்கிற்குக் கொண்டுவரலாம். இதற்கான டெஸ்டிங் ப்ராசஸ் வெற்றிகரமான முடிவடைந்துள்ளது எனத் தெரிவித்தார். எனவே ஜூன் மாதம் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications