ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் 6 புதிய விதிகள்.. பாஸ்போர்ட் முதல் ஆதார் வரை.. நோட் பண்ணிக்கோங்க மக்களே!
நாளையுடன் ஜூன் மாதம் முடியப்போகிறது. இந்நிலையில், ஜூலை 1 (july 1) முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. பாஸ்போர்ட் கட்டணம், ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல், ரயில்வே அபராத மாற்றங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்ளிட்ட பல மாற்றங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது இது குறித்த விவரங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பாஸ்போர்ட் கட்டணம்
மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், வரும் ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. புதிய கட்டண விவரங்களின்படி, 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், தட்கல் முறையில் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,500-இல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.2,000-இல் இருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் முறையில் பெறுவதற்கான கட்டணம் ரூ.4,000-இல் இருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டின் கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதனை தட்கல் முறையில் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,500-இல் இருந்து ரூ.4,200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொலைந்து போனது அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தட்கல் முறையில் இந்த சேவையைப் பெற ரூ.7,500 செலுத்த வேண்டும். 'போலீஸ் கிளியரன்ஸ்' சான்றிதழ் (Police Clearance Certificate) மற்றும் பிற இதர பாஸ்போர்ட் சேவைகளுக்கான கட்டணம் ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்பட்டு வரும் 10 சதவீத கட்டணச் சலுகை தொடரும் என்றும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிலிண்டர் விலையில் மாற்றம்
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை அறிவித்து வருகின்றன. மேற்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றமான சூழல் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையின் மாற்றங்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக எல்பிஜி விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக கடந்த ஜூன் 1ஆம் தேதி, வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.53.50 உயர்த்தப்பட்டது. இதனால், ஜூலை 1ஆம் தேதியும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விலை உயர்வு ஏற்பட்டால், ஹோட்டல்கள், உணவகங்கள், சிறு தொழில்கள் மட்டுமின்றி பொதுமக்களின் மாதாந்திர செலவுகளிலும் தாக்கம் ஏற்படும்.
யுபிஐ மூலம் பிஎஃப் பணம்
அதாவது ஜூலை மாதத்தில் EPFO 3.0 தளம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தளம், EPFO சேவைகளை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தால், EPF கணக்கு வைத்திருப்பவர்கள் UPI மூலம் தங்களின் PF சேமிப்பு பணத்தை உடனடியாக பெறும் வசதி கிடைக்கும். இதன் மூலம் PF பணம் எடுக்கும் நடைமுறை மிகவும் வேகமாகவும் சுலபமாகவும் மாறும்.

ஜூலை 1 முதல் ஆதார் இலவச அப்டேட்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்புக்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தைத் தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், இலவசமாக மின்னஞ்சல் புதுப்பிக்கும் சேவை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலவசமாக மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கும் சேவை அடுத்த 6 மாதங்கள் வரை தொடரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, வீட்டிலிருந்தபடியே தங்களது மொபைல் போன் மூலம் மின்னஞ்சல் முகவரியை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதுவரை மின்னஞ்சல் முகவரியை சேர்க்கவோ அல்லது மாற்றவோ 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) புதிய அறிவிப்பின்படி இந்த சேவை ஜூலை 1 முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் டிசம்பர் மாதம் வரை ஆதார் அட்டைதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் தங்களது மின்னஞ்சல் முகவரியை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
ரயில்வே அபராதத் தொகை
வரும் ஜூலை 1 முதல் ரயில் பயணிகளுக்கான சில விதிமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளன. இதற்காக ரயில்வே சட்டத்தின் சில பிரிவுகளில் அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும், ரயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்வது, நடைபாதை வியாபாரம் மேற்கொள்வது அல்லது பிச்சை எடுப்பது போன்ற செயல்களுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விதிமீறல்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். சம்பவத்தின் தீவிரத்தைப் பொறுத்து, குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டுகளுக்கு வரும் புதிய விதிகள்
வரும் ஜூலை 1 முதல் சில கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்டு புள்ளிகள் மற்றும் சலுகை விதிகளில் மாற்றம் வரலாம். குறிப்பாக, எஸ்பிஐ கார்டின் சில கார்டுகளுக்கு புதிய விதிகள் அமலாகும் என கூறப்படுகிறது. இதனால், ரிவார்டு புள்ளிகள் பெறுவதற்கு வரம்பு நிர்ணயிக்கப்படலாம். மேலும், சில வகை செலவுகளுக்கு இனி ரிவார்டு புள்ளிகள் கிடைக்காமல் போகலாம். இது கிரெடிட் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.


Click it and Unblock the Notifications