ஆதார் முதல் சிலிண்டர் வரை.. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
வரும் ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் சிலிண்டர் விலை, ஆதார் அட்டை அப்டேட் செய்வதில் புதிய விதிகள், ரயில் அபராதம் என பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக ஜூலை 1-ம் தேதி வரும் புதிய விதிமுறைகள் (July 1 New Rules) பொதுமக்களின் அன்றாட நிதி பரிவர்த்தனைகள் மற்றும் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்பிஜி விதிகள்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு (LPG), வணிக எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். அதுவும் ஏற்கனவே வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.3289 வரை உயர்ந்துள்ளது. மேலும் முன்பதிவுக்கான இடைவெளி நகரங்களுக்கு 25 நாட்களாகவும், கிராமங்களுக்கு 45 நாட்களாகவும் உயர்த்தப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் சூழலில், ஜூலை 1-ம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் மத்திய அரசின் ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு இணைப்பு என்ற கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக வீட்டுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு இணைப்பை பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் எல்ஜிபி சிலிண்டரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதன் மூலம் எல்ஜி சிலிண்டர் மட்டும் வைத்திருப்பவர்களுக்கு விரைவில் சிலிண்டர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் அப்டேட்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்புக்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், இலவசமாக மின்னஞ்சல் புதுப்பிக்கும் சேவை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலவசமாக மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கும் சேவை அடுத்த 6 மாதங்கள் வரை தொடரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, வீட்டிலிருந்தபடியே தங்களது மொபைல் போன் மூலம் மின்னஞ்சல் முகவரியை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதுவரை மின்னஞ்சல் முகவரியை சேர்க்கவோ அல்லது மாற்றவோ 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) புதிய அறிவிப்பின்படி இந்த சேவை ஜூலை 1 முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் டிசம்பர் மாதம் வரை ஆதார் அட்டைதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் தங்களது மின்னஞ்சல் முகவரியை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
ரயில் அபராதம்
ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, டிக்கெட் இல்லாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.

முன்னதாக புறநகர் மின்சார ரயில்களில் ரூ.10 மதிப்புள்ள பயணச்சீட்டை எடுக்காமல் பயணம் செய்தவர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அந்த அபராதம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்களில் பயணச் சீட்டு பெறாமல் பயணிப்போருக்கு அபராதம் இருமடங்காக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் ரயில் நிலைய வளாகத்தில் புகைப் பிடித்தால் ரூ.100-க்கு பதிலாக ரூ.2000 அபராதம், பெண்கள் பெட்டியில் பயணிக்கும் ஆண்களுக்கு ரூ.500-க்கு பதிலாக ரூ.2500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications