ஜூலை 1 முதல் அடுத்த 6 மாசத்துக்கு 100% இலவச சேவை.. ஆதார் வைத்திருக்கும் எல்லோருக்கும்.. UIDAI அதிரடி!
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (India's Unique Identification Authority) ஆனது அடுத்த 6 மாதங்களுக்கு.. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜூலை 1, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான 6 மாத காலத்திற்கு, ஆதார் அட்டைதாரர்களுக்கான ஒரு முக்கிய இலவச சேவையை அறிவித்துள்ளது.
ஆதார் கார்டு உடன் தொடர்புடைய இமெயில் முகவரி விவரங்களை புதுப்பிப்பது (Email Address Update) ஜூலை 1 முதல், புதிய ஆதார் ஆப் (New Aadhaar App) மூலமாக இலவசமாக செய்யப்படும் என்று யுஐடிஏஐ அறிவித்துள்ளது. அதாவது மேற்குறிப்பிட்டுள்ள 6 மாத காலத்திற்க்கு தற்போதுள்ள ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படாது.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், யுஐடிஏஐ ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய ஆதார் ஆப்பை அறிமுகப்படுத்தியதுடன், பழைய எம்ஆதார் (mAadhaar) அப் ஆனது நிறுத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தது. 2009 இல் தொடங்கப்பட்ட ஆதார் சேவையானது, 144 கோடிக்கும் அதிகமான தனித்துவமான எண்களை கொண்ட உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக உள்ளது
இது நாட்டின் வயது வந்தோரில் 99 சதவீதத்தினரை உள்ளடக்கியுள்ளது. மேலும் புதிதஹா அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆதார் ஆப் ஆனது ஆதார் அட்டைதாரர்களின் தகவல்களின் தனியுரிமையை உறுதி செய்வதோடு, பயோமெட்ரிக் லாக்குகள் மற்றும் முக அங்கீகார வசதி மூலம் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.
ஆதார் மையத்திற்கு செல்லாமலேயே மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க முடியுமா? முன்பெல்லாம், ஆதார் அட்டை தொடர்பான விவரங்களை மாற்ற விரும்பினால், பயனர்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் புதிய ஆப் மூலம் பயனர்கள் தங்கள் மொபைலிலிருந்தே தகவல்களை எளிதாக புதுப்பித்து கொள்ளலாம்.
புதிய ஆதார் ஆப்பில் பாதுகாப்பான க்யூஆர்-கோட் வசதியும் உள்ளது. இது அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் மற்றும் பிற சேவை நிறுவனங்களில் அடையாள சரிபார்ப்பை எளிதாக்குகிறது. இதனால் காகித வேலைகள் (ஆகார் அட்டையின் நகல்களை எடுக்கும் தேவை) மற்றும் நேரடி சரிபார்ப்பு நடைமுறைகள் குறைக்கப்படுகின்றன.
பயனர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் விவரங்களைச் சேர்க்க முடியுமா? புதிய ஆதார் ஆப் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங்களை எளிதாக நிர்வகிக்கலாம். இதில் ஒரு பயனர் ஐந்து ஆதார் விவரங்களை (Profiles) வரை இணைக்க முடியும். இருப்பினும், அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த ஆப்பை பதிவிறக்க, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரை (Apple App Store) அணுகலாம். பயனர் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து, மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஒடிபி வழியிலான சரிபார்ப்பை முடித்து, முக அங்கீகாரத்தை நிறைவு செய்ய வேண்டும். மேலும், விரைவாக அணுகுவதற்கு பயனர் ஒரு பின் (PIN) நம்பரையும் உருவாக்கலாம் அல்லது பயோமெட்ரிக் அன்லாக் (biometric unlock) வசதியை செயல்படுத்தலாம்.
கோடிக்கணக்கான பதிவிறக்கங்கள்: புதிய ஆதார் ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 31 மில்லியனுக்கும் (3.1 கோடி) அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ளதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 4 மில்லியன் பேர் புதிய ஆப் மூலம் தங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்துள்ளனர் மற்றும் 8,50,000 பேர் தங்கள் முகவரியை புதுப்பித்துள்ளனர் என்றும் யுஐடிஏஐ கூறியுள்ளது.
இந்திய அதிகார அமைப்பின் (யுஐடிஏஐ) கூற்றுப்படி, ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தவும், பகிரவும் மற்றும் சரிபார்க்கவும் வசதியான மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு வழியை வழங்குவதற்காகவே இந்த ஆதார் ஆப் வடிவமைக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications