1-ஆ இல்ல 2-ஆ.. எத்தனை கிரெடிட் கார்டு வச்சி இருக்கீங்க.. ஏப்.1 முதல் அமலுக்கு வரும் 3 மாற்றங்கள்.. இனிமேல்?
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி கட்டமைப்பின் (New Income Tax framework) கீழ் கிரெடிட் கார்டுகள் (Credit Cards) ஆனது வரி அடையாளங்களின் நீட்சியாக (Extensions of Tax identities) செயல்படும்.
3 மாற்றங்கள்: புதிய கட்டமைப்பின் கீழ் வரும் புதிய திருத்தங்கள் ஆனது - கடுமையான அறிக்கையிடல் (Tighter reporting), பான் நம்பர் உடன் இணைக்கப்பட்ட செலவினங்கள் (PAN-linked spending) மற்றும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளின் (High-value transactions) மீதான தீவிர கண்காணிப்பை கட்டாயமாக்குகிறது.

இந்த மாற்றங்கள், பழைய 1961 சட்டத்திற்குப் பதிலாக வரும் - புதிய வருமான வரி சட்டம் 2025 (New Income Tax Act 2025) மற்றும் வருமான வரி விதிகள் 2026 (Income Tax Rules 2026) ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்து உள்ளன.
முதல் மாற்றம்: ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி கட்டமைப்பானது, பெரிய அளவிலான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மீதான கவனத்தை கூர்மையாக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான செலவினங்கள் வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படலாம். மேலும் வரம்புகளுக்கு மேலான வெளிநாட்டு செலவினங்களும் சுட்டிக்காட்டப்படலாம்.
கடைசியாக ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான ரொக்க பரிவர்த்தனைகள், கடுமையான கண்காணிப்புடன் தொடர்ந்து ஆய்வுக்கும் உட்படுத்தப்படும். இத்தகைய அறிக்கையிடல் விதிமுறைகள் முன்பே இருந்தபோதிலும், அமலாக்கம் மேலும் சீராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையிடப்பட்ட வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது மாற்றம் - ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பான் இணைப்பு இனி தவிர்க்க முடியாததாக மாறும்: கிரெடிட் கார்டுகளை, பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் என்கிற பான் நம்பர் உடன் இணைப்பது கட்டாயமாகிறது. இனிமேல் பான் நம்பர் இல்லாமல், கிரெடிட் கார்டுகள் வழங்கப்படாது.
இந்தியாவில் கிரெடிட் கார்டு செலவினங்கள் வரலாற்று ரீதியாகவே ஒரு தெளிவற்ற நிலையில் இயங்கி வந்துள்ளன. அதாவது, பரிவர்த்தனைகளின் அளவு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பரந்த வரி உள்கட்டமைப்புடன் தளர்வாகவே இணைக்கப்பட்டு உள்ளன. பான் இணைப்பை மேலும் கடுமையாக்குவதும், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை அறிக்கையிடுவதும் அந்த இடைவெளியை அர்த்தமுள்ள வகையில் நிரப்பும் என்று நிதி தொழில்நுட்ப கட்டணத் தளமான பிஓபி-யின் வணிக தலைவர் ரஜத் மிட்டல் கூறி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான பயனர்களுக்கு, இதன் அன்றாட தாக்கம் குறைவாகவே இருக்கலாம். உங்கள் செலவினங்கள் முறையானதாகவும், உங்கள் பான் நம்பர் இணைக்கப்பட்டதாகவும் இருந்தால், பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாது. ஆனால் இது அனுப்பும் "செய்தி" முக்கியமானது: கடன் மற்றும் வரி அடையாளம் இப்போது ஒன்றே" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது மாற்றம் - கம்பெனி கார்டுகளை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவது வரிவிதிப்புக்கு வழிவகுக்கலாம்: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் மற்றொரு முக்கியமான மாற்றம் பெருநிறுவன கிரெடிட் கார்டுகள் தொடர்பானது. நிறுவனத்தால் வழங்கப்பட்ட கார்டு களில் செய்யப்படும் தனிப்பட்ட செலவுகள் இனி வரி விதிக்கக்கூடிய சலுகைகளாக கருதப்படும்.
பயணம் அல்லது வாடிக்கையாளர் சந்திப்புகள் போன்ற வேலை தொடர்பான செலவினங்களுக்கு வரி விலக்கு தொடர்கிறது, ஆனால் அதற்கான ஆவணங்கள் முக்கியமானதாகின்றன. ஆக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் "இது தொடர்பாக" எம்பிளாயர்களுக்கு தெளிவான கொள்கைகள் தேவைப்படும்; மேலும் ஊழியர்கள் தனிப்பட்ட மற்றும் வணிக செலவுகளை ஒன்றாக கலப்பதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் "நல்ல விஷயத்தை" பொறுத்தவரை வரி செலுத்துவோர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருமான வரி பாக்கியை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இது நெகிழ்வுத்தன்மையை வழங்கினாலும், பில்லிங் சுழற்சிகளுக்குள் பாக்கி தொகை செலுத்தப்படாவிட்டால், செயலாக்க கட்டணங்கள் மற்றும் வட்டி செலவுகள் ஏற்படக்கூடும்.
OPINION - 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களுக்கு முன்னதாக கிரெடிட் கார்டு பயனர்கள் என்ன செய்ய வேண்டும்? முதலில் - அனைத்து கிரெடிட் கார்டுகளுடனும் பான் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக வருடாந்திர செலவினங்களை, குறிப்பாக அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும்.
மேலும் தனிப்பட்ட செலவுகளுக்கு கம்பெனி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும், வணிகம் தொடர்பான செலவினங்களுக்கான பதிவுகளை சரியாக பராமரிக்கவும். மேற்கண்ட எல்லா மாற்றங்களுமே குறுகிய காலத்தில் இணக்கத்தை அதிகரிக்கக்கூடும். அதே சமயம் வெளிப்படையான மற்றும் தரவு சார்ந்த கடன் சூழலுக்கான அடித்தளத்தையும் அமைக்கும். ஆகையால் எல்லாமே நல்லதுக்கு தான் என்று எடுத்துக்கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








