10 வயதுவரை ஸ்மார்ட்போன் கொடுக்காதீங்க.. எதிர்காலம் பாழாகிவிடும்.. எச்சரிக்கும் ஜெயின்!
இந்தியாவில் குழந்தைகளை தூங்க வைக்க ஸ்மார்ட்போன், சாப்பிட வைக்க ஸ்மார்ட்போன், அழாமல் இருக்க ஸ்மார்ட்போன் என்று அவர்களின் எதிர்கால மனநலத்துடன் விபரீத விளையாட்டுக்களை பெற்றோர்கள் விளையாடி வருவதாக சியோமி (Xiaomi) ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் (Manu Kumar Jain) தெரிவித்தார்.
பொதுவாக ஸ்மார்ட்போன்கள் (Smartphones) பயன்படுத்த ஒரு வயது வரம்பு உள்ளது. அதனை யாரும் பின்பற்றுவது கிடையாது. தங்களது குழந்தையின் எதிர்காலத்துக்கு எது நல்லது? எது கெட்டது? என்று நாள்தோறும் சிந்தித்து, ஒவ்வொரு முடிவுகளையும் அலசி ஆராய்ந்து எடுக்கும் பெற்றோர்களே, ஸ்மார்ட்போன் விஷயத்தில் கோட்டைவிட்டு விடுகின்றனர்.

ஸ்மார்ட்போன்களில் இருக்கும் நன்மைகளை மட்டுமே பார்க்கும் பெற்றோர்களுக்கு, அதில் இருக்கும் மோசமான தீமைகள் கண்ணுக்கு தெரிவதில்லை. யூடியூப்பில் வரும் கார்டூன்களை பார்த்தால் மட்டுமே குழந்தை தூங்குகிறது. ஸ்மார்ட்போனில் வீடியோ பார்த்தால் மட்டுமே குழந்தை சாப்பிடுகிறது என்று பல காரணங்கள் பெற்றோர்களிடம் இருக்கிறது.
ஆனால், அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போது, அப்பா சொல்லும் கதையை கேட்டு தூங்கியதையும், நிலாவை காட்டி அம்மா சோறு ஊட்டியதையும் மறந்துவிடுகின்றனர். இப்படி நமக்கு தெரிந்தே பல தவறுகள் நடக்கின்றன. எந்த வயதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால், சரியாக இருக்கும் என்று உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்துவருகின்றன.
அதில், எந்த ஆய்வும் 10 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது நல்லது என்று கூறவில்லை. மாறாக அவர்களின் எதிர்கால மனநலம் பாதிக்கப்படுவதாகவே எச்சரித்துள்ளன. இதையே சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் இந்திய தலைவர் மனு குமார் ஜெயினும் பெற்றோர்களுக்கு புரிய வைக்க தனது சமூக வலைதள பக்கத்தில் முயற்சித்துள்ளார். அதோடு பெற்றோர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில், "உங்களது குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் கொடுப்பதை நிறுத்துங்கள். ஏனென்றால், சேப்பியன் லேப்ஸ் (Sapien Labs) என்னும் ஆய்வு நிறுவனம் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து நடத்திய ஆய்வில், 10 வயதுக்கு முன்பே ஸ்மார்ட்போன் பயன்படுத்திய 60-70 சதவீத இளம்பெண்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலத்தில் பாதிப்புகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இது 10 வயதுக்கு பிறகு ஸ்மார்ட்போன் பயன்படுத்தியவர்கள் உடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாகும். அதேபோல 10 வயதுக்கு முன்பு ஸ்மார்ட்போன் பயன்படுத்திய ஆண்களில் 45-50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதையும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காடுகின்றன. ஆகவே, ஸ்மார்ட்போன்களை 10 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளிடம் கொடுக்காமல், அவர்களை சக குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வையுங்கள்.
அவர்களிடையே விளையாட்டுகளை ஊக்குவியுங்கள். அவர்களின் எதிர்கால மனநலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதேபோல குழந்தை பருவத்தின் பொன்னான நேரமானது ஒரு ஸ்மார்ட்போன் திரையில் அடங்குவதை நீங்கள் தடுக்க வேண்டும். இதை தெரிவிப்பதால், நான் ஸ்மார்ட்போன்களுக்கோ, டேப்லெட்களுக்கோ எதிரானவன் கிடையாது.
அதை குழந்தைகளிடம் கொடுப்பதில் கவனம் வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








